2020 ஹஜ் ஏற்பாடுகள்: முகவர்களை தவிர்த்து அரசாங்கம் முன்னெடுக்கும்
பிரதமர் மஹிந்த புதிய ஹஜ் குழுவுக்கு அறிவுறுத்து
2020 ஆம் ஆண்டின் ஹஜ் ஏற்பாடுகளை அரசின் அனுசரணையுடன் புதிய ஹஜ் குழு மேற்கொள்வது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பிரதமரும் கலாசார அமைச்சருமான மஹிந்த ராஜபக் ஷ ஹஜ் முகவர்களைத் தவிர்த்து ஹஜ் ஏற்பாடுகளை ஹஜ் குழுவே மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் என ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டின் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அண்மையில் ஹஜ் உடன்படிக்கைக்காக சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்த ஹஜ் குழு தனது அறிக்கையை இவ்வாரம் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவிடம் கையளிக்கவுள்ளது. அறிக்கையில் பல சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கு 2020 ஆம் ஆண்டு முதல் சிறந்த சேவையை வழங்குவதற்கு ஹஜ் ஏற்பாடுகளை அரச அனுசரணையுடன் ஹஜ் குழுவே மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் எம்மை வேண்டியுள்ளார். இது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகிறோம். எமது ஆலோசனைகளையும் பிரதமரிடம் முன்வைக்கவுள்ளோம். பிரதமருடன் ஹஜ் குழு கலந்துரையாடி இறுதி தீர்மானத்துக்கு வரவுள்ளது.
இதுவரை காலம் எமது ஹஜ் ஏற்பாடுகளில் ஹஜ் முகவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். முகவர்கள் சிலரின் மோசடிகளினால் ஹஜ் யாத்திரிகர்கள் கடந்த காலங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றுக்கு முடிவு காணப்பட வேண்டியுள்ளது.
ஹஜ் ஏற்பாடுகள் அரச அனுசரணையுடன் ஹஜ் குழுவினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக இருந்தால் இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை ஹஜ் குழுவே மேற்கொள்ளும் என்றார்.
இதேவேளை 2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் முகவர்கள் நியமனத்துக்கான நேர்முகப்பரீட்சைகள் இம்மாதம் நடைபெறவிருந்தன. ஆனால் நேர்முகப்பரீட்சைக்கான ஏற்பாடுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அனைத்தும் ஸ்தம்பித நிலையில் இருப்பதாகவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவினால் மர்ஜான் பளீலின் தலைமையில் ஹஜ் குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஐவர்கொண்ட ஹஜ் குழுவில் ஏனைய அங்கத்தவர்களாக அஹ்கம் உவைஸ், அப்துல் சத்தார், நகீப் மெளலானா, அஹமட் புவாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கையில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஹஜ் முகவர்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவர்களின் நியமனம் வருடாந்தம் நேர்முகப்பரீட்.சையொன்றின் பின்பே வழங்கப்பட்டு வந்தது. ஹஜ் கோட்டா அவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையிலே வழங்கப்பட்டு வந்தன.
இம்முறை ஹஜ் குழுவில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உள்வாங்கப்படாமை விஷேட அம்சமாகும்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்