மக்கா ஹரம் ஷரீப் அபிவிருத்திப் பணிகளின்போது பாதையொன்று அமைக்கப்படுவதற்காகவே சிலோன் ஹவுஸ் கட்டிடம் அகற்றப்பட்டது. அதற்கென சவூதி அரசாங்கத்தினால் கிடைக்கப்பெற்ற நஷ்டஈடு மூலம் கொள்வனவு செய்யப்பட்ட விடுதிக்கட்டிடமொன்று அஸீஸியாவில் இயங்கி வருகிறது.
இதில் ஊழல், மோசடிகள் நிலவியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுவது முற்றிலும் தவறாகும். இதற்காக நான் கவலைப்படுகிறேன் என அரச ஹஜ் குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
சவூதியில் இயங்கிவந்த சிலோன் ஹவுஸுக்கு நஷ்டாஈடாக கிடைக்கப்பெற்ற சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேற்பட்ட தொகைக்கு என்ன நடந்தது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என கண்டறியுமாறு ஹஜ் குழு பிரதமரை வேண்டியுள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் சிலோன் ஹவுஸ் கட்டிடம் இலங்கை முஸ்லிம் தனவந்தர்களாலே கொள்வனவு செய்யப்பட்டு பல தசாப்த காலமாக இயங்கி வந்தது. பின்பு ஹரம் ஷரீப் அபிவிருத்தி பணிகளின்போது பாதை அபிவிருத்திக்காக சவூதி அரசு அக்கட்டிடத்தை சுவீகரித்தது. ஆனால் அப்போது சவூதி அரசு எவ்வித நஷ்ட ஈடும் வழங்கவில்லை.
இதனையடுத்து சவூதி அரேபியாவில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையைச் சேர்ந்த சாதிக் ஹாஜியார் நஷ்டஈடு கோரி சவூதி நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். அவரே சட்டத்தரணிகளை நியமித்து நஷ்ஈடுக்காக வாதாடினார்.
சவூதி அரசினால் கிடைக்கப்பெற்ற நஷ்டஈட்டினாலே அஸீஸாவில் விடுதி வளாகமொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து கிடைக்கும் வருமானம் சவூதியிலுள்ள இலங்கை குடும்பங்களின் பிள்ளைகளுக்கு மத்ரஸா கல்வி மற்றும் உயர்கல்விக்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போது அஸீஸியாவிலுள்ள சிலோன் ஹவுஸ் சாதீக் ஹாஜியாரினாலே பரிபாலிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் சிலோன் ஹவுஸ் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்ததால் ஹஜ்கமிட்டி சாதிக் ஹாஜியாருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அவர் பணிப்பாளர் சபையொன்றினை நியமித்து சிலோன் ஹவுஸை பரிபாலிக்குமாறு வேண்டிக் கொண்டார்.
அதற்கிணங்க அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பினை சவூதியிலுள்ள இலங்கைத்தூதருக்கும் கொன்சியுலர் ஜெனரலுக்கும் வழங்கினோம். ஆனால் இதுவரை தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. சவூதி அரேபியாவின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே இதில் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்நிலையில் சிலோன் ஹவுஸ் நஷ்டஈடு தொடர்பில் தவறான கருத்துக்களை வெளியிடுவது எமக்குப் பாதகமாகவே அமையும் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்