ஜே.ஆர். 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த திம்புப் பேச்சு வார்த்தையில் தமிழ் ஆயுதப் போராளிகளோடு உரையாட முஸ்லிம்களைத் தவிர்த்துவிட்டே தனது பிரதிநிதியை அனுப்பி வைத்திருந்தார். முன்பு ஜனநாயக தமிழ் தலைவர்களைப் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றிய அதே ஜே.ஆர்.தான் அப்போது தமிழ் ஆயுதப் போராளிகளோடு பேசியிருந்தார். காரணம், 1981 ஆம் ஆண்டு யாழ்.
மாவட்ட சபைத் தேர்தல் குழப்பப்பட்டு அங்குள்ள பொது நூலகம் எரிக்கப்பட்டதும் 1983 ஆம் ஆண்டு கொழும்பில் தமிழர் பரவலாகத் தாக்கப்பட்டதும் இலங்கையிலிருந்து ஏராளமான தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்றதால் தமிழகம் குழம்பியது. அது மத்திய அரசுக்கு விடுத்த கடும் அழுத்தத்துக்கே ஜே.ஆர். தமிழ் ஆயுதப் போராளிகளோடு பேச உடன்பட வேண்டியிருந்தது. அதன்படிதான் 1984 ஆம் ஆண்டு தனது பிரதிநிதியை னுப்பிப் பேசினார்.
அந்த வகையில் ஜே.ஆர். ஆயுதப் போராட்டத்தை அங்கீகரித்தார் என்று தான் கூற வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் பொதுத்தேர்தல் மூலம் ஜனநாயக ரீதியில் தெரிவான தமிழ் எம்.பி.க்களை வெளியேற்றி அவர் ஆயுதப் போராளிகளோடு பேசியிருப்பாரா? முஸ்லிம் தலைவர்களோடும் அவர் பேசவில்லை. மாறாக தமிழ் ஆயுதப் போராளிகளோடு பேசும்படியே முஸ்லிம் தலைவர்களை விட்டிருந்தார்.
அதன்படி 1985 ஆம் ஆண்டு சேர். ராசிக் பரீத், கலாநிதி பதியுதீன் மஹ்மூத், ஹொனரபல் ஏ.டபிள்யூ.எம். அமீர், எம்.ஐ.எம். மொஹிதீன், எம்.எச்.எம். அஷ்ரப் ஆகியோர் பெங்களூருக்கு சென்று தமிழ் ஆயுதக்குழுக்களை சந்தித்திருந்தனர்.
எனினும், 1987 ஆம் ஆண்டு ஜே.ஆர். இந்தியாவோடு செய்த ஒப்பந்தத்தில் தமிழரையும் முஸ்லிம்களையும் மட்டுமல்ல, தமிழ் ஆயுதப் போராளிகளையும் கூட தவிர்த்துவிட்டே இந்தியாவோடு நேரடியாக ஒப்பந்தம் செய்து கொண்டார். 1984 ஆம் ஆண்டு இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்கள் கவனிக்கப்படாமலும் 1985 ஆம் ஆண்டு புறக்கணிக்கப்படாமலும் 1987 ஆம் ஆண்டு காவு கொள்ளப்படாமலும் இருந்திருக்குமாயின் அஷ்ரப் தனித்துவ முஸ்லிம் கட்சியை உருவாக்கியே இருக்கமாட்டார். பெருந்தேசிய கட்சிகளைவிட்டும் அகன்று 40 ஆண்டுகளுக்கு முன்பே வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் சமூகவாரி கட்சிகள் உருவாகியிருந்தன.
எனினும் முஸ்லிம்கள் மட்டும் பெருந்தேசியக் கட்சிகளில் இணைந்து தம்மைக் கரைத்துக்கொண்டு அடிப்படை உரிமைகளுக்கு ஈடாக வளங்களையும் வாழ்வாதாரங்களையும் பதவி பட்டங்களையும் பெற்று வந்தார்கள். இவற்றின் விளைவாக பெருந்தேசிய கட்சிகளின் பேரின நெகிழ்ச்சி நிரலுக்குப் பக்கத் துணையாகவும் நின்றார்கள்.
இவற்றால் காலப்போக்கில் தமது அடிப்படை உரிமைகள் ஒருபுறமிருக்க அவை யாவை என அறியாமலும் தெளிவு பெறாமலும் இருந்தார்கள். அரசியல் அறிவு ஒருபுறமிருக்க பொது அறிவிலும் கூட போதிய தேர்ச்சி இல்லை. மத அறிவே முழுமையானது, வர்த்தகமே அடிப்படையானது என வாழ்ந்து வந்தார்கள்.
ஆங்கிலேய ஆட்சியாளரும் கூட பிஸ்னஸ் மைன்ட் பீபள் (வர்த்தக சிந்தனையுள்ள மக்கள்), டிரேடர்ஸ் கொமினிடி (வியாபார சமூகம்), மனிமைன்டர் (பணயோசனையாளர்) என்றே இலங்கை முஸ்லிம்களை அடையாளப்படுத்தியிருந்தனர். இதனால் அரச விசுவாசத்தை நிபந்தனையாக விதித்து தாராள வர்த்தக சலுகைகளையும் வழங்கி மதத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தும் மனோ நிலையையும் உருவாக்கிவிட்டனர்.
கடந்த கால தலைமுறை அரசியலையும், பொது அறிவையும் புறந்தள்ளி முழுமையாக மதவிடயங்களிலும் வர்த்தக நோக்கிலும் திளைத்து இற்றைவரை சுயாதீனம் கிடைத்து 70 ஆண்டுகள் கழிந்தும் கூட அடிப்படை உரிமைகள் ஒருபுறமிருக்க அவை பற்றிய போதிய அறிவோ, தெளிவோ இல்லாதிருக்கிறார்கள். உரிமை எது? சலுகை எது? என்பதும் தெரியவில்லை. சலுகைகளையே உரிமைகளாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் எம்.சி. அப்துர் ரஹ்மான், ஹொனரபல் அப்துல் ரஹ்மான், சித்தி லெப்பை, வாப்பிச்சி மரைக்கார், ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ், சேர் ராசிக் பரீத் ஆகியோர் பெற்றுத் தந்ததே இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கான அடிப்படை உரிமைகளாகும். முஸ்லிம் தனியார் சட்டத்தின் மூலம் அமைந்த வகுப்பு வாரிசுரிமை, விவாக விவாகரத்து உரிமை அப்படித்தான் கிடைத்திருந்தன.
எனினும், 1947 ஆம் ஆண்டுக்குப் பின் கட்சிமுறை உருவான பின் முஸ்லிம் எம்.பி.க்கள் கட்சிகளுக்கு கட்டுப்படும் நிலைக்கு உள்ளானார்கள். அதன் பிறகு முஸ்லிம்களின் சுய விருப்பம் தடுக்கப்பட்டதால் தமது அடிப்படை உரிமைகளையே தாரை வார்த்துவிட்டார்கள்.
இலங்கை முஸ்லிம்களின் தாய் மொழி தமிழாக இருந்தபோதும் கூட 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இவர்களது ஆங்கிலம் மட்டும் கற்ற தலைவர்களே மொழி ரீதியில் இவர்களைத் தாரை வார்த்து விட்டார்கள்.
பல்லின தேசியத்துக்குப் புறம்பாக பேரின தேசியத்தையே சார்ந்து நின்று சிறுபான்மை மக்களின் கல்விக் கூடங்களை அரசுடமையாக்கி உயர் கல்வியில் பெரும்பான்மைச் சமூகத்துக்கு சார்பாகத் தரப்படுத்தலையும் கொண்டுவர ஒத்துழைத்தார்கள். 1972 ஆம் ஆண்டு மத சாசனசார்போடு சிறுபான்மைக் காப்பீடான 29 ஆம் ஷரத்து நீக்கப்பட்ட யாப்பையும் ஆதரித்தார்கள். இவற்றால் பேரினவாதம் உருவாகி வளர்ந்தது மட்டுமல்ல, சிறுபான்மைகளின் அடிப்படை உரிமைகள் யாவும் சலுகைகளாக்கப்பட்டன.
இன்று எத்தனை முஸ்லிம்களுக்கு சோல்பரி யாப்பின் சிறுபான்மைக் காப்பீடான 29 ஆம் ஷரத்து தெரியும். 48 ஆண்டுகளும் கழிந்துவிட்டன. அதை மீட்டெடுக்க எந்த முஸ்லிமாவது குரல் எழுப்பியதுண்டா? உத்தேச புதிய யாப்பில் அதுவும் இடம்பெற்றாக வேண்டும். அதுரலிய ரதன தேரர் முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்க வேண்டுமென அடம்பிடிக்கிறார். 29 ஆம் ஷரத்தின் நீக்கத்துக்குப் பிறகு முஸ்லிம் தனியார் சட்டம் மட்டுமே முஸ்லிம்களின் தேசிய உரிமைக்கும் அடையாளத்துக்கும் சான்றாக இருக்கிறது. அதுரலியே ரதன தேரரின் கூற்று கோவணத்தோடு இருப்பவனை நிர்வாணியாக்குவதாகும்.
தற்போது 29 ஆம் ஷரத்தான சிறுபான்மைக்காப்பீடு இல்லாதிருப்பதால் சலுகையோடிருக்கும் முஸ்லிம் தனியார் சட்டத்தை சிறிய பெரும்பான்மையுடனேனும் இரத்தாக்கிவிடலாம் என அதுரலிய ரதன தேரர் எண்ணுகிறார் போல் தெரிகிறது. தான் ஒரு பிக்கு என்பதால் தனியார் பிரேரணையாக இதைத்தான் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் பட்சத்தில் இருபெரும் தேசிய கட்சிகளிலுமுள்ள பெரும்பான்மையாகவுள்ள பெளத்தர்கள் கட்சி வித்தியாசமின்றி ஏகோபித்து ஆதரித்து நிறைவேற வைப்பார்கள் என அவர் நம்புவதுபோலும் தெரிகிறது.
தற்போது பொதுஜன ஐக்கிய முன்னணி மூன்றில் இரண்டைப் பெறும் நோக்கோடு இருக்கிறது. அதற்காக இதை வைத்து மேலும் இனவாதத்தைக் கூராக்கி இலக்கை அடைந்து கொள்ளவும் முயலலாம். ஐக்கிய தேசியக் கட்சி இழந்துபோன பெளத்த சிங்கள வாக்குகளைக் கூட்டிக் கொள்ளும் நிலையில் இருக்கிறது எனவே அது முஸ்லிம் தனியார் சட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இறங்குமென நான் நினைக்கவில்லை.
இலங்கை முஸ்லிம்களை தனித்துவ அரசியல் அமைப்பில் இணைத்தாலன்றி முஸ்லிம்களின் இருப்பையும் தனித்துவத்தையும் மார்க்க உரிமைகளையும் கலை கலாசாரத்தையும் வரலாற்றையும் வாழ்வாதாரங்களையும் வாழ்விடங்களையும் தக்க வைத்துக்கொள்ள முடியாது என்பதற்காகவே அஷ்ரப் தன்னையும் தனது உயிரையும் அர்ப்பணித்திருந்தார்.
தமிழ் ஆயுதப்போராளிகள் ஜனநாயக தமிழ் தரப்புக்கு மாறாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களைப் பிரித்துவிட்டு முடக்கவும் செய்தபோதுதான் ஜே.ஆரும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களைத் தவிர்த்துக் கொண்டு தமிழ் ஆயுதப் போராளிகளுடன் மட்டும் பேசினார்.
இதனால் அஷ்ரபால் ஒன்றிணைக்கப்பட்ட தனித்துவ முஸ்லிம்களின் முழு வாக்குகளைப் பெற்றே 1988 ஆம் ஆண்டு பிரேமதாஸ சிறிது வாக்கு வித்தியாசத்தில் ஜனாதிபதியானார். எனினும் பிரேமதாஸ பின்னர் புலிகளோடும் தொடர்பு கொண்டு இலங்கையின் இறைமையை மீட்க வேண்டும் எனக் கூறினார். இந்திய சமாதானப் படையை அகற்றுவதே அவர் புலிகளுக்கு விடுத்த கோரிக்கையாக இருந்தது. இதன் மூலம் தமிழ் மக்களின் ஆதரவும் கிடைக்கும் எனவும் நம்பினார். இதனால் புலிகளால் முஸ்லிம்கள் அழிக்கப்பட்டார்கள். அதுபோல் 1993 ஆம் ஆண்டு பிரதமராகுவதற்கு சந்திரிகாவுக்கு அஷ்ரப் உதவி புரிந்தார். 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகுவதற்கு சந்திரிகாவுக்கு உதவி புரிந்திருந்தார். எனினும் சந்திரிக்கா தேசிய ஐக்கிய முன்னணியையும் ஆரம்பிக்க வைத்து அஷ்ரபையும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வைத்து அஷ்ரப் அகால மரணமுற்ற மர்மத்தையும் கூறவில்லை.
அஷ்ரபால் இவர் அரசியலுக்கு வந்ததை மறந்து அஷ்ரப் அகால மரணமுற்ற பின் பேரினவாதத்தின் மூல பிதாக்களில் ஒருவரான சம்பிக்க ரணவக்கவோடும் பிக்குகளோடும் தொடர்பு கொண்டு தனது பெற்றோரின் வழியில் நடந்தார். இவர்களால் உருவாகிய மஹிந்தவின் ஆட்சி காலத்தில் தான் அஷ்ரபின் கட்சி பல தலைமைகளோடு பல கூறுகளாக ஆகின.
இவரது கணவரான விஜய குமாரதுங்கவை ஜே.வி.யே கொன்றது என்றார்கள். இவர் ஏன் அதன் சொல்லையும் கேட்டு மஹிந்தவை ஜனாதிபதி அபேட்சகராக்க வேண்டும். பிக்குகள்தானே இவரது தந்தையான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவைக் கொன்றார்கள். இவர் எதற்காக ஹெல உறுமய பிக்குகளின் சொல்லைக் கேட்டு மஹிந்தவை ஜனாதிபதி அபேட்சகராக்கினார். கணவரின் பல்லினக் கொள்கையை முன்வைத்து ஆட்சிபீடம் ஏறிவிட்டு பெற்றோரின் வழியில் பேரினவாதத்தை விதைத்தது.
கணவருக்கு செய்த மாறுபாடு அல்லவா. அஷ்ரபின் வழிவாறுகள் இப்போது பெருந்தேசியக் கட்சிகளின் போட்டி அரசியலில் சிக்கியிருப்பதால் வெவ்வேறு நிகழ்ச்சிகளைப் பேணுகிறார்கள். இவர்களின் நிகழ்ச்சி நிரல்களில் சமூகம் இழுபட்டுப் போகிறது.-Vidivelli
- ஏ.ஜே.எம். நிழாம்