ஈரானின் குத்ஸ் படையணியின் தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி, அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப்படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை ஈரான் ஆதரவுபெற்ற கதாயிப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தியிருந்தனர். அப்படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பக்தாதிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஹிஸ்புல்லா போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது.
இதற்குப் பதிலடியாகவே கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க இராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஈராக், ஈரான் இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் தாக்குதல் சம்பவத்தையடுத்து ஈரான், ஈராக் உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் பீதியான நிலைமை உருவாகியுள்ளது. சர்வதேசமும் ஈரான் –அமெரிக்க நகர்வுகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. இலங்கை உட்பட ஆசிய நாடுகளும் அச்ச நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூளும் அபாய நிலை உருவாகியிருப்பதே இதற்குக் காரணமாகும். அவ்வாறு போர் தவிர்க்க முடியாதிருந்தால் எமது நாடும் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்படும். எண்ணெய் விலை அதிகரிப்பு எம்மில் பல தாக்கங்களைச் செலுத்தும். மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டிய சூழலும் உருவாகலாம்.
அமெரிக்காவின் நேச நாடான சவூதி அரேபியா இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் மும்முரமாக ஈடுபடவேண்டும். கட்டார் வெளிவிவகார அமைச்சரும் ஈரானுக்கு விஜயம் செய்து சமாதான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
இத்தாக்குதல் ஈராக்கில் இடம்பெற்றதால் ஈராக் வெளிவிவகார அமைச்சு தனது நாட்டிலுள்ள அமெரிக்க தூதர் மெதிப் டியுலரை அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது எனவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஈரானின் 52 கலாசார மையங்களை இலக்கு வைத்துள்ளதாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள ஈரான் வெளிநாட்டமைச்சர் ஜவாத் சரீப் அவ்வாறு தாக்குதல் நடத்துவது யுத்தக்குற்றம் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய ஈரானிய பாராளுமன்றத்தில் ‘அமெரிக்காவுக்கு மரணம்‘ என உறுப்பினர்கள் கூச்சலிட்டுள்ளனர். ‘நாங்கள் வெள்ளை மாளிகையைத் தாக்குவோம். அமெரிக்க மண்ணில் எம்மால் அவர்களுக்கு பதிலளிக்க முடியும். அல்லாஹ் விரும்பினால் நாம் பொருத்தமான நேரத்தில் பதிலளிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் அபுல்பஸ்ல் அப்துர் ராபி தெரிவித்துள்ளார். அமெரிக்க துருப்புகளை ஈராக்கிலிருந்து வெளியேறுமாறும் ஈராக் பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதேவேளை, அமெரிக்கா உட்பட வெளிநாட்டுப் படையினரை ஈராக்கிலிருந்து வெளியேறுமாறு அந்நாட்டு பாராளுமன்றம் பிரேரணையொன்றினை நிறைவேற்றியுள்ளது.
ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படையினரை ஈரான் தாக்கலாம் என அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
ஈரான் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டமைக்கு பாகிஸ்தான் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இக் கொலைச் சம்பவம் மத்திய கிழக்கில் அமைதியின்மையை உருவாக்கியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் முறுகல் நிலை நீடித்து போர் மூளும் சூழல் உருவாகக்கூடாது. இதுவே அனைவரதும்
பிரார்த்தனையாகும். யுத்தமொன்று உருவானால் அதனால் அழிவுகளையே மக்கள் எதிர்கொள்வார்கள். இந்த விவகாரத்தை அடிப்படையாக வைத்து மூன்றாம் உலகப் போர் வெடிக்கலாம் என சிலர் எச்சரித்துள்ளனர்.
அவ்வாறான நிலை ஏற்படாதிருக்க பிரார்த்திப்போமாக.-Vidivelli