பொதுத் தேர்தலில் சாய்ந்தமருது சார்பில் நிர்வாக சேவை அதிகாரி சலீம் போட்டி
ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் அறிவிப்பு
சாய்ந்தமருது நகரசபை இலக்கை அடையும் நோக்கில் கல்முனை தொகுதி வேட்பாளராக சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளரும், இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம்.சலீம் போட்டியிடுவாரென சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா அறிவித்துள்ளார்.
சாய்ந்தமருது நகரசபை இலக்கை அடையவேண்டும் என்று போராடிவரும் குழுவினரின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது மண்ணின் மாற்றம் மற்றும் அபிவிருத்திக்கான மையத்தின் காரியாலயம் நேற்று முன்தினம் சாய்ந்தமருது கல்யாண வீதியில் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இதன் பின்னர் அங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய நல்லிணக்கம், சகவாழ்வை அடிப்படையாகக் கொண்டும், நிலையான அபிவிருத்தி, புதிய அரசின் கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டே இந்தக் காரியாலயம் செயற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதேச மக்களின் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பி பல்லின சமூக அமைப்பில், சமூக இருப்பையும் அபிவிருத்தியையும் குறிக்கோளாகக் கொண்டு “சமூக மாற்றம் மற்றும் அபிவிருத்திக்கான மையம்” என்ற குறிக்கோளின் கீழ் இந்த அமைப்பும், இக்காரியாலயத்தின் செயற்பாடுகளும் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கல்முனை மாநகர சபை சுயேச்சைக்குழு உறுப்பினர்கள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.-Vidivelli
- பைஷல் இஸ்மாயில்