நாட்டில் தொடரும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்குமிடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரையும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பமான அரசியல் நிலைவரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சபாநாயகர் கரு ஜயசூரியவும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். பல்வேறு கட்சித் தலைவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி செயலகத்தில் இவ்வாறு ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் இந்தப் பிரச்சினையை விரைவாக தீர்க்கும் நோக்கில் இன்று 30ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டுக்கட்சித் தலைவர்களுடன் தனித்தனியாக சந்திப்புக்களை நடத்தி பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண்பதற்கும் இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர் என்ற அடிப்படையில் ஐ.தே.க.வின் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஜாதிக ஹெலஉறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க ஆகியோரை இன்றைய தினம் சந்திப்பதற்கு ஏற்பாடாகியுள்ளது. எனினும் ரணில் விக்கிரமசிங்க இந்த சந்திப்பில் கலந்துகொள்வாரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
-Vidivelli