22 ஆவது திருத்த பிரேரணை அரசாங்கத்தின் பிரேரணையல்ல
தேர்தல் வெட்டுப்புள்ளி குறித்த விஜயதசவின் கருத்து உண்மை இல்லை என்கிறார் டியூ குணசேகர
பன்னிரெண்டரையாக இருந்த தேர்தல் வெட்டுப்புள்ளியை முஸ்லிம் காங்கிரஸின் அன்றைய தலைவரின் அழுத்தத்தினாலே ஜனாதிபதி பிரேமதாச 5வீதமாக குறைத்ததாக விஜயதாச ராஜபக் ஷ தெரிவிக்கும் கருத்தில் எந்த உண்மையும் இல்லை. அத்துடன் விஜயதாச ராஜபக் ஷவின் 22ஆவது திருத்த பிரேரணை அரசாங்கத்தின் பிரேரணையல்ல.
தேர்தலுக்கு முன்னர் இதுதொடர்பாகத் தீர்மானங்களை மேற்கொண்டால் கட்சிகளுக்குள் பாரிய பிரச்சினை ஏற்படும் என்பதை ஜனாதிபதி கருத்திற்கொள்ள வேண்டுமென இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்.
சோசலிஷ மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கம் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதாகத் தெரிவித்து 19ஆம் திருத்தத்துடன் 20ஆம் திருத்தத்தையும் கொண்டுவருவதாக தெரிவித்தது. ஆனால் இறுதியில் இருபதாவது திருத்தம் கொண்டுவரவில்லை. அதனால் அரச தலைவருக்கும் அரசாங்கத்தின் தலைவருக்கும் முரண்பாடுகள் ஏற்பட ஆரம்பித்தன. நல்லாட்சி அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முரண்பாடுகள் ஏற்படப் பிரதான காரணமாக இருந்தது, நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக இல்லாமலாக்கி பாராளுமன்றத்துக்கு கொண்டுவராதமையாகும். அதனால் 19ஆம் திருத்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக் ஷ தனிநபர் பிரேரணையாக கொண்டுவந்திருக்கும் 22 ஆவது திருத்தமானது தேர்தல் வெட்டுப்புள்ளியை மாற்றுவதாகும். அதாவது தற்போது அமுலில் இருக்கும் பன்னிரெண்டரை வீதம் என்ற வெட்டுப்புள்ளியானது 1986–87 காலப்பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அன்றைய ஜனாதிபதி பிரேமதாசவுக்கு கொடுத்துவந்த அழுத்தம் காரணமாக வெட்டுப்புள்ளியை 5வீதமாக் குறைத்தார். அதன் விளைவாகவே சிறுபான்மை கட்சிகளின் உதவியுடன் அரசாங்கம் அமைக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது என்றும் விஜயதாச ராஜபக் ஷ தெரிவித்திருக்கின்றார்.
விஜயதாச ராஜபக் ஷ தெரிவிக்கும் கூற்றில் எந்த உண்மையும் இல்லை.
முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழுத்தத்தினால் வெட்டுப்புள்ளி குறைக்கப்படவில்லை. சிறுபான்மை கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகவேண்டும். அதன் மூலமே உறுதியான ஜனநாயகத்தை ஏற்படுத்தலாமெனத் தெரிவித்தேன், சிங்கள, தமிழ் முஸ்லிம் அனைத்து சிறிய கட்சிகளும் இணைந்து அன்று அழுத்தம் கொடுத்ததாலே வெட்டுப்புள்ளியில் மாற்றம் ஏற்பட்டது. அத்துடன் நாட்டில் தற்போதுள்ள அரசியல் நிலையில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சி செய்ய முடியாதநிலையே இருக்கின்றது. பல கட்சிகள் இணைந்தே ஆட்சி செய்யவேண்டிய நிலை இருக்கின்றது. இவ்வாறுதான் உலகில் பெரும்பான்மையான நாடுகளில் இடம்பெறுகின்றன.
அத்துடன் அடிப்படைவாதப் பிரச்சினைகள் தலைதூக்குவதை இல்லாமலாக்க அரசியலமைபில் திருத்தம் மேற்கொள்ளவேண்டுமென விஜயதாச ராஜபக் ஷ தெரிவித்திருக்கின்றார். அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம் அடிப்படைவாதப் பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியாது. சமூக மாற்றத்தின் மூலமே இதனை மேற்கொள்ள முடியும். அதனால் அவரது தனிநபர் பிரேரணை அரசாங்கத்தின் பிரேரணையாக முடியாது.
ஜனாதிபதியும் இதுதொடர்பாக கவனம் செலுத்தி, தேர்தலுக்கு முன்னர் இதனை கொண்டுவந்து கட்சிகளுக்குள் பிரச்சினையை ஏற்படுத்திவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றார்.-Vidivelli
- எம்.ஆர்.எம்.வஸீம்