உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம், இன்று அல்லது நாளை: மைத்திரியிடம் விசாரணை
ருவன்,ரிஷாத்திடம் வாக்குமூலம் பதிவு; ஹக்கீம், அசாத் சாலி, ஹிஸ்புல்லாவை விசாரிக்கவும் திட்டம்
4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விஷேட விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலம் பதிய சி.ஐ.டி. நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இன்று அல்லது நாளை, சி.ஐ.டி.யில் ஆஜராகி, குறித்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தார். 4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் இடம்பெறும் சி.ஐ.டி. விசாரணைகளுக்கமைய இந்த விசாரணை நடாத்தப்பட்டுள்ளதாக அவர் கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகேவுக்கு இவ்வாறு அறிவித்தார்.
இந்த விடயம் தொடர்பிலான நீதிவான் நீதிமன்ற நடவடிக்கைகள் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் மீளவும் விசாரணைக்கு வந்தன. இதன்போது விளக்கமறியலிலுள்ள கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதன்போது விசாரணையாளர்களான சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்ர விமலசிறி மேலதிக விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பித்ததுடன், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விடயம் தொடர்பில் மன்றுக்குத் தெளிவுபடுத்தினார்.
“கனம் நீதிவான் அவர்களே, இந்த விவகாரத்தில் , வாக்குமூலங்களை பதிவுசெய்வதற்குத் திகதியொன்றை ஒதுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அறிவித்திருந்தோம். இதன் பிரகாரம் நாளை (இன்று) மற்றும் நாளை மறுதினங்களில் (நாளை) திகதியொன்றை ஒதுக்குவதற்கு இயலுமென முன்னாள் ஜனாதிபதி அறிவித்துள்ளார். எனினும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாட்சிப் பதிவுகளுக்கு இதுவரை நாளொன்றை ஒதுக்கித் தரவில்லை.
இந்த விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரிடம் விஷேட விசாரணைகள் நடாத்தப்பட்டன. அவர்களிடம் அது தொடர்பில் வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளோம். இதற்கான ஆலோசனைகளை சட்டமா அதிபர் வழங்கியுள்ளார். இந்த விவகாரத்தில் பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் வாக்குமூலத்தை பெற நாம் முயன்றோம். அவரது சட்டத்தரணி ஊடாக எமக்கு விஷேட அறிவித்தலொன்று தரப்பட்டுள்ளது. அதாவது, இந்த விடயம் தொடர்பில் பூரணமாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்குத் தெரிவித்துள்ள விடயங்களை இந்த விசாரணைக்கும் எடுத்துக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. அதன்படி அவரது சாட்சியத்தைப்பெற ஆணைக் குழுவின் தலைவரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவுள்ளோம்” என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றுக்கு அறிவித்தார்.
இந்நிலையில் விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க சி.ஐ.டிக்கு உத்தரவிட்டதுடன், கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் விளக்கமறியலை நீடித்தார்.
அதன்படி அவ்விருவரும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 250 இற்கும் அதிகமானோர் பலியாகவும் பாரிய சொத்து சேதமேற்படவும் உதவி ஒத்தாசை புரியும் வகையில் செயற்பட்டுள்ளதாகக் கூறி மேற்படி இருவருக்கும் எதிராக தண்டனை சட்டக் கோவையின் 250,296, 298,326,327,328,329 மற்றும் 410 ஆம் அத்தியாயங்களின் கீழ் இவர்கள் இருவரும் தண்டனைக்குரிய குற்றமொன்றைப் புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்