பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக் ஷவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 21 ஆவது மற்றும் 22 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தப் பிரேரணைக்கு சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறுபான்மை மக்கள் ஆதரவளிக்கப் போவதில்லை. இத்திருத்தங்கள் ஜனநாயகத்துக்கு விரோதமானது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க கல்வி அமைச்சருமான வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக் ஷவின் தனிநபர் பிரேரணை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில், விஜயதாஸ ராஜபக் ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள அரசியமைப்பில் 21 ஆவது மற்றும் 22 ஆவது திருத்தங்கள் மூலம் தற்போது நூற்றுக்கு 5 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பெற்றுக்கொள்ளும் முறைமையை நூற்றுக்கு 12.5 வீதம் பெற்றுக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டால் சிறுபான்மை அரசியல் கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கிடைக்காது.
விஜயதாஸ ராஜபக் ஷ சிறுபான்மைக் கட்சிகள் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவேண்டும் என்பதற்காகவே இத்திருத்தங்களை முன்வைத்துள்ளார். சிறுபான்மைக் கட்சிகளின் உதவி தேவையில்லை. சிறுபான்மை கட்சிகளின் ஆதரவில்லாமல் ஆட்சியை நிறுவவேண்டும் என்ற உள்நோக்குடனேயே இந்த திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதே அவர்களின் நோக்கம். சிறுபான்மைக் கட்சிகளை நிராகரித்து அவர்கள் பெரும்பான்மைக் கட்சி அரசியலை மாத்திரம் நிலைநிறுத்த முயற்சிப்பார்களென்றால் அவர்கள் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியேற்படும்.
விஜயதாஸ ராஜபக் ஷவுக்கென்று நிரந்தரமாக ஒரு கட்சியில்லை. அவர் அங்குமிங்கும் கட்சி மாறிக் கொண்டிருப்பவர். அவரது நடவடிக்கைகளையும் செயற்பாடுகளையும் இந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவர் ஒரு கட்சியில் இருக்கும் போது ஒன்றைக்கூறுவார். வேறு ஒரு கட்சிக்கு மாறிக்கொண்டதும் மாற்றமான ஒன்றைக் கூறுவார். அவருக்கு கொள்கை இல்லை. இவ்வாறானவர்கள் கூறுவதை நாங்களும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.-Vidivelli
ஏ.ஆர்.ஏ.பரீல்