விஜயதாசவின் தனிநபர் பிரேரணை: ஜனநாயக விரோதமானது
சிறிய, சிறுபான்மை காட்சிகளை கடுமையாக பாதிக்கும் என்கிறது முஸ்லிம் காங்கிரஸ்
பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக் ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கைச் சனநாயக சோலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான இருபத்தோராவது திருத்தம் சிறுபான்மை மற்றும் சிறிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை இல்லாமற் செய்வது மாத்திரமல்ல, அடிப்படை ஜனநாயக கோட்பாடுகளுக்கும் எதிரானதாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
ஜனநாயக வெளிப்பாடுகளை மற்றும் ஜனநாயக எண்ணப்பாடுகளைக் கொண்ட சிறுபான்மை கட்சிகளை இது மிகவும் பாதிக்கும் எனவும் அவர் கூறினார்.
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ அரசியலமைப்புக்கான இருபத்தோராவது திருத்தம் ஒன்றினைந் செய்வதற்காக தனியார் சட்டமூலம் ஒன்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
அதற்கான அரசாங்க வர்த்தமானி அறிவித்தலொன்றும் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசியலமைப்புக்கான இருபத்தோராவது திருத்தம் பின்வருமாறு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 99 ஆம் உறுப்புரையைத் திருத்துதல்.
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் (இதனகத்துப் பின்னர் “அரசியலமைப்பு” என குறிப்பீடு செய்யப்படும்) 99 ஆவது உறுப்புரையின் (6) ஆவது பந்தியின் (அ) உப பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள “மொத்த வாக்குகளில் இருபதில் ஒன்றுக்கு குறைவான” எனும் சொற்களை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக ‘மொத்த வாக்குகளின் எட்டில் ஒன்றுக்குக் குறைவான’ என்ற சொற்களை பதிலீடு செய்து இத்தால் திருத்தியமைக்கப்படுகின்றது என வர்த்தமானி அறிவித்தல் தெரிவிக்கிறது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அரசியல் கட்சிகள் மொத்த வாக்குகளில் எட்டில் ஒன்றுக்கு குறைவான வாக்குகளைப் பெற்றால் பிரதிநிதித்துவம் பெற முடியாது என்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரபே முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவுடன் பேரம்பேசி மொத்த வாக்குகளில் இருபதில் ஒன்றுக்குக் குறைவான என்று திருத்தங்களைச் செய்வதற்கு காரணமாக இருந்தனர். இது 15 ஆவது திருத்தமாகும்.
மறைந்த தலைவர் அஷ்ரப் அரசியலமைப்பில் இந்தத் திருத்தங்களைக் கொண்டு வந்ததாலே சிறுபான்மைக் கட்சிகள் மாத்திரமல்ல, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெலஉறுமய, மலையக மக்கள் முன்னணி போன்ற தமிழ் கட்சிகள் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது.
சிறுபான்மை கட்சிகள் குறிப்பாக சிறுபான்மையினரை ஆட்சியில் உள்வாங்கிக் கொள்ளக்கூடாது. அவர்கள் தங்கள் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது என்ற அடிப்படையிலே பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக் ஷவினால் இந்த இருபத்தோராவது திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது சிறுபான்மை கட்சிகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் அபாயகரமான சட்டமூலம் எனலாம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் பேசப்பட்டு அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட மிகவும் முக்கியமான திருத்தத்தில் மாற்றங்களைச் செய்வதற்கே தற்போது முயற்சிக்கப்படுகிறது என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்