கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் சபையில் இடம்பெற்ற குழப்பமான சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்கு பிரதி சபாநாயகர் தலைமையில் ஆறுபேர் அடங்கிய குழுவை நியமித்திருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியபோது சபாநாயகர் அறிவிப்பு வேளையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் சபைக்குள் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஏற்கனவே ஆரம்பித்திருப்பதுடன், அதற்கு மேலதிகமாக விரிவான உள்ளக விசாரணையை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ரஞ்சித் மத்தும பண்டார, சந்திரசிறி கஜதீர, பிமல் ரத்னாயக்க மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் விசாரணைகள் பூர்த்தியடைந்து அறிக்கை கிடைத்ததும் அதனை சபைக்கு முன்வைக்க எதிர்பார்க்கின்றேன்.
அதேநேரம், கடந்த 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் சபைக்குள் ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலைகளால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு மேலதிக பொலிஸாரை பாதுகாப்புக்கு அழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
விருப்பமில்லாதபோதும் பொலிஸாரை சபைக்குள் அழைக்கும் நிலை ஏற்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்குரிய உத்தரவாதம் வழங்கப்படுமாயின் பாராளுமன்றத்துக்கு மேலதிகமாக பொலிஸார் அழைக்கப்படுவதை நான் நிறுத்துவேன்.
மேலும், பிரதமரின் செயலாளர் செலவினங்களை முன்னெடுப்பதைத் தடுக்கும் பிரேரணை நீதிமன்றத்தில் உள்ள எந்தவொரு வழக்கையும் பாதிக்கும் வகையில் இல்லையென்பதால் அதனை சபையில் விவாதிக்க முடியும். தினேஷ் குணவர்தன தலைமையிலான குழுவினர் என்னைச் சந்தித்து பிரதமரின் செயலாளரின் செலவினங்களைத் தடுப்பது தொடர்பான பிரேரணையை விசாரணைக்குட்படுத்த முடியாது எனக் கூறியிருந்தனர்.
பாராளுமன்றத்தில் இன்று கொண்டுவரப்பட்டுள்ள விவகாரம் எந்தவொரு அமைச்சர்கள் பற்றியதோ அல்லது இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் பற்றியதோ அல்ல பிரதமரின் செயலாளர் சம்பந்தப்பட்டது. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் நம்பிக்கையில்லா தீர்மானம் வேறெந்தவொரு மன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்தப்பட முடியாதது. நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற உள்ளடக்கத்தைக் கொண்டே பிரதமரின் செயலாளருக்கான செலவினங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்றையதினம் விவாதிக்கப்படும் பிரேரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புபட்டதல்ல. இதற்கமைய குறித்த பிரேரணையை சபையில் விவாதிப்பதில் எந்தவிதமான தடையும் இல்லை.
இந்தப் பிரேரணையை பாராளுமன்றத்தில் விவாதிப்பதானது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு அது எந்தவிதமான பாரபட்சமாகவும் அமையாது. அத்துடன் பிரதமர் அலுவலகத்தின் செலவினங்கள் குறித்து எந்தவித வழக்குகளும் நிலுவையில் இல்லை. இது தொடர்பில் நாட்டிலுள்ள அரசியலமைப்பு தொடர்பான சட்ட நிபுணர்களுடன் கலந்துரையாடியுள்ளேன்.
அரசியலமைப்பின் 152ஆவது ஷரத்தின் ஆதிக்க வரப்புக்கு உட்பட்ட விடயமாக இது இல்லை என்பதால் இதனை விவாதிப்பதற்கு அனுமதி வழங்குகிறேன் எனக் குறிப்பிட்டார்.
-Vidivlli