கொழும்பு– கண்டி வீதியில் நெலுந்தெனிய உடுகும்புறவில் அமைந்துள்ள நூர் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இரவோடிரவாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளமை அப்பகுதி முஸ்லிம்களின் சகவாழ்வினைப் பாதித்துள்ளது. முஸ்லிம்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வு குடிகொண்டுள்ளது.
புத்தர் சிலையை எடுத்து வந்த பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அச்சிலையை பள்ளிவாசலுக்கு அருகிலே வைத்துள்ளனர். இச்செயல் வேண்டுமென்றே இரு சமூகங்களுக்கிடையில் முறுகல் நிலையினைத் தோற்றுவிப்பதற்காகவே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகக் கருத வேண்டியுள்ளது. புத்தர் சிலையொன்று நிறுவுவதற்கு அப்பகுதியில் பல இடங்கள் இருந்தபோதும் அவ்விடங்கள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
கடந்த 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு புத்தர் சிலை வைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் வரக்காபொல பொலிஸுக்கு அறிவிக்கப்பட்டதும் உடனடியாக அங்கு சென்ற பொலிஸார் அங்கு நிலவிய பதற்ற நிலையினைத் தணித்துள்ளார்கள். அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. உயர் பொலிஸ் அதிகாரிகளும் அங்கு விஜயம் செய்துள்ளார்கள்.
இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடொன்றினை ஏற்படுத்தி பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கு பொலிஸார் முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை. பெரும்பான்மைச் சமூகத்தினர் அங்கிருந்து புத்தர் சிலையை அகற்றிக்கொள்வதற்கு மறுப்புத்தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வரக்காபொல பொலிஸார் இவ்விவகாரத்தை நீதிமன்ற உத்தரவு மூலம் தீர்த்துக்கொள்வதற்குத் தீர்மானித்தனர். வரக்காபொல நீதிவான் நீதிமன்றம் பள்ளிவாசல் நிர்வாகத்தினரையும், பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
‘‘இரு தரப்பினரையும் நீதிமன்றுக்கு அழைத்து பிரச்சினைக்குத் தீர்வு காணுவதே சிறந்தது. அதுவே நிரந்தரத் தீர்வாகவும் அமையும்‘‘ என வரக்காபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் ஏனைய சமயங்களை எதிர்க்கவில்லை. ஏனைய சமூகங்களின் வழிபாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்துவதைப் பாவமாகவே கருதுகிறார்கள். இந்நிலையில் முஸ்லிம்களின் பொறுமையினைச் சோதிப்பதாற்காகவே இச்செயல் என கருதப்படுகிறது.
பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் முஸ்லிம்கள் சிறுபான்மையாகவே வாழ்கிறார்கள். சுமார் 50 முஸ்லிம் குடும்பங்களே அப்பகுதியில் வாழ்வதாக பள்ளிவாசல் நிர்வாக சபைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசல் தலைவரின் கருத்துப்படி அங்கு பல தசாப்த காலமாக முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகத்துடன் ஒற்றுமையாக, அந்நியோன்யமாகவே வாழ்ந்துள்ளனர். அவர்களின் சுகதுக்கங்களில் பங்கு கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி அமைதியைக் குலைத்துவிடக் கூடாது என்பதால் பள்ளிவாசல் நிர்வாகம் இவ்விவகாரத்தில் அமைதிகாக்கிறது. இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி இரு சமூகங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிப்பதை விட சுமுக தீர்வைக் காண்பதே வரவேற்கத்தக்க செயற்பாடாக அமையும்.
கடந்த காலங்களிலும் நாட்டின் பல பகுதிகளிலும் இவ்வாறு புத்தர் சிலைகள் நிறுவப்பட்டன. பெரும்பான்மைச் சமூகம் வாழாத பகுதியில் கூட புத்தர் சிலைகள் நிறுவப்பட்டன. ஆனால் இங்கு உடுகும்புற பகுதியில் பெரும்பான்மை இனத்தவர்களின் வாழ்விடங்கள் இருந்தாலும் பள்ளிவாசல் வளாகத்தில் புத்தர்சிலை நிறுவப்பட்டமையே சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
சில தீய சக்திகளால் முஸ்லிம்– சிங்கள உறவுக்கு குந்தகம் விளைவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டமாகக் கூட இது இருக்கலாம். ஆகவே அரசாங்கமும், பாதுகாப்புப் பிரிவினரும் இது தொடர்பில் ஆராய வேண்டும். இதன் பின்னணியை அறிந்து தீர்வு வழங்குவதன் மூலமே அப்பகுதியில் இன நல்லுறவைப் பலப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்று நீதியான தீர்வினை வழங்கும். இரு தரப்பும் நிச்சயம் அந்த உத்தரவினை, தீர்ப்பினை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறான நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இரு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு பிரதேச அரசியல்வாதிகள், சிவில் சமூக அமைப்புகள், சமயத் தலைவர்கள் முன்வரவேண்டும். இவ்வாறானவர்கள் இரு தரப்பிலிருந்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதுவே பிரதேசத்தில் நிரந்தர சமாதானத்திற்கு வழிவகுப்பதாக அமையும்.-Vidivelli