கோத்தாவின் ஆட்சியில் இன வன்முறைகளுக்கு இடமில்லை
முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழலாம்: துருக்கி தூதுவரிடம் பாதுகாப்பு செயலாளர் உறுதி
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கண்டி–திகனயில் இடம்பெற்றது போன்ற இரு சமூகங்களுக்கு இடையிலான வன்முறைகள் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெறமாட்டாது. அதற்கு ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது. வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவார்கள் என பாதுகாப்புச் செயலாளர் இளைப்பாறிய மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். இலங்கையில் துருக்கியின் தூதராகக் கடமையாற்றிய துன்கா ஒஸ்துஹாதர் தனது பதவியை நிறைவுசெய்து நாடு திரும்பவுள்ள நிலையில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன ஏற்பாடு செய்திருந்த பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வில் துருக்கி தூதரிடம் கருத்து தெரிவிக்கையிலே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ‘இலங்கையின் அனைத்து இனமக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.
தனது பதவியை நிறைவு செய்து நாடு திரும்பும் துருக்கி நாட்டின் தூதுவர் கருத்து தெரிவிக்கையில், ‘இலங்கையில் ஆலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் முஸ்லிம்கள் சம்பந்தப்படவில்லை. இலங்கை முஸ்லிம் சமூகம் எப்போதும் அரசாங்கத்துக்கு ஆதரவாகவே இருந்துவருகிறது’ என்றார்.
பாதுகாப்பு செயலாளர் மற்றும் துருக்கி தூதருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தார்.
இரு நாடுகளின் பாதுகாப்புப் பிரிவினருக்கு பயிற்சிகள் வழங்குவது மற்றும் உளவு, புலனாய்வு தொடர்புகளை பரிமாறிக்கொள்வது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
பாதுகாப்பு செயலாளர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘நாட்டு மக்கள் அனைவரும் சமமாகக் கருதப்படுவார்கள். அவர்களது இனம், மதம், எதுவாக இருந்தாலும் அவர்கள் இலங்கையர்கள் என்பது கருத்திற் கொள்ளப்படும்.
‘இஸ்லாம் சமாதானமான ஒரு மதமாகும். இஸ்லாம் இனங்களுக்கிடையில் ஒற்றுமையையே போதிக்கிறது. தவறாக வழிநடத்தப்பட்ட ஒருசில இளைஞர்களால் இந்த உயரிய மதம் பாதிப்புக்குள்ளாகக் கூடாது’ எனவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
அத்தோடு இலங்கையில் துருக்கி தூதுவர் ஆற்றிய சிறந்த சேவைக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், அவரது எதிர்காலத்துக்கு வாழ்த்துக்களை யும் தெரிவித்தார்.
நிகழ்வில் இலங்கையின் துருக்கி தூதுவராலயத்தின் மூன்றாம் நிலைச் செயலாளர் நஸான் டெனிஸும் கலந்து கொண்டிருந்தார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்