ஐக்கிய தேசிய முன்னணியை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்
ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் த.தே.கூ. அறிவிப்பு
ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது முழுமையான ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளது. ஆகவே ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் பெருன்பான்மையினை பெறக்கூடியவர் என கருதும் நபரை பிரதமராக நியமிக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்தக் காரணிகளை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியிலிருந்து நடந்த அனைத்து சம்பவங்களினதும் பின்னணியின் அடிப்படையில் மேற்குறித்த விடயம் தொடர்பில் நாங்கள் இதனை எழுதுகிறோம். கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமாராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக் ஷ, அவர் நியமிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும், இந்தக் காலப்பகுதியில் பல தடவைகள் பாராளுமன்றம் கூடியுள்ள போதிலும் அவரால் தனக்கு பாராளுமன்றத்தின் பெரும்பான்மை நம்பிக்கை உள்ளது என்பதனை நிரூபித்துக்காட்ட முடியாத ஒருவராகவே காணப்படுகின்றார்.
அதேவேளை மஹிந்த ராஜபக் ஷ பிரதமராக இருப்பதற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நவம்பர் 14ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குரல் அடிப்படையில் எடுக்கப்பட்ட வாக்குகள் 122 உறுப்பினர்களின் கையொப்பங்களோடு ஜனாதிபதியான உங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதுமட்டுமன்றி இதுகுறித்த சபாநாயகரின் அறிக்கைகளும் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மஹிந்த ராஜபக் ஷ பிரதமராக இருப்பதற்கு பாராளுமன்றத்தின் நம்பிக்கையை பெற்றுள்ளாரா என்ற வினாவிற்கு பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்து மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிராகவே உள்ளது. அது மாத்திரமன்றி சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுமுள்ளது. எனவே, மஹிந்த ராஜக் ஷ பிரதமராக இனியும் இருப்பதற்கு பாராளுமன்றத்தின் நம்பிக்கையினை பெற்றுள்ளார் என்பதனை நிரூபித்துக்காட்ட இயலாது போயுள்ளது. அத்துடன் மஹிந்த ராஜபக் ஷ பிரதமராக இருப்பதற்கு எதிராக நவம்பர் 14 மற்றும் 16ஆம் திகதிகளில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானங்களானது, இந்த நாட்டில் ஒரு பிரதம மந்திரியோ, அமைச்சரவையோ, சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றோ இருக்கின்றனவா என்ற முரண்பாட்டினை தோற்றுவித்துள்ளது.
இந்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்க முடியாது என்பதனை நாம் கூறிக்கொள்ள விரும்புகிறோம். குறிப்பிட்ட நிலையில் பாராளுமன்றத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பிரதமராக நியமிக்கப்படுவதனை உறுதி செய்யும் வகையில், இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் கடந்த 26ஆம் திகதிக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீளமைப்பதற்கு ஆதரவளிப்போம் என்பதோடு, ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினை பெறக்கூடியவர் என நீங்கள் கருதும் நபரை பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம் என ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் உள்ளிட்ட 14 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பமும் இடப்பட்டு தமது நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
-Vidivelli