2020 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் ஹஜ் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த ஹஜ் தூதுக்குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாடு திரும்பியுள்ளது.
இலங்கைக்கு 2020 ஆம் ஆண்டுக்காக 3500 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் முஸ்லிம் சனத்தொகைக்கேற்ப 2800 கோட்டா வழங்கப்படுவதே வழமையாகும். ஆனால் இம்முறை முதற் தடவையிலே 3500 கோட்டா வழங்கப்பட்டுள்ளமை குறித்து நாம் சந்தோசப்பட முடியும்.
இதேவேளை, ஹஜ் தூதுக்குழு 2000 மேலதிக ஹஜ் கோட்டா வழங்கப்பட வேண்டுமென சவூதி அரேபியா ஹஜ் விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் கலாநிதி அப்துல் சுலைமானிடம் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளது. தாம் முன் வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்குமென தூதுக்குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வூதிக்கு விஜயம் செய்த தூதுக்குழுவில் அமைச்சரோ இன்றேல் துறைசார்ந்தவர்களோ முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகளோ இடம் பெற்றிருக்கவில்லை.
ஹஜ் விவகாரம் தொடர்பில் அனுபவமற்றவர்களே இடம் பெற்றிருந்தனர். இவர்கள் 3500 ஹஜ் கோட்டா பெற்றுக் கொண்டுள்ளமைக்கு முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
பேருவளை நகர சபையின் முன்னாள் தலைவர் மர்ஜான் பளீலின் தலைமையிலான இலங்கை ஹஜ் தூதுக்குழுவில் நகீப் மெளலானா, அஹ்கம் உவைஸ், அப்துல் சத்தார், எம்.ஏ. அஹமத் புவாத் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
புதிய அரசு பதவியேற்றதன் பின்பு மேற்கொள்ளப்படும் 2020க்கான ஹஜ் ஏற்பாடுகளில் பல மாற்றங்கள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஹஜ் கோட்டா பகிர்விலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என மர்ஜான் பளீல் தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டொரு தினங்களில் ஹஜ் தூதுக்குழு தனது அறிக்கையை பிரதமரிடம் கையளிக்கவுள்ளது. அவ்அறிக்கையில் இவ்வாறான சிபாரிசுகள் உள்ளடங்கியுள்ளதாகவும் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.
ஹஜ் கோட்டா முகவர்களுக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்படாது கலாசார அமைச்சு மாற்றுவழிகளைக் கையாளுமா? எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அப்படியாயின் நூற்றுக்கும் மேற்பட்ட ஹஜ் முகவர்களின் எதிர்காலம் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.
இதுவரை காலம் இடம்பெற்று வந்த நடைமுறைகளுக்கு மாற்றமாகவே ஹஜ் நகர்வுகள் இடம் பெறுகின்றன. 2020 ஆம் ஆண்டுக்கென அரச ஹஜ்குழுவொன்று நியமிக்கப்படவில்லை. ஹஜ் ஏற்பாடுகள் அரச ஹஜ்குழுவொன்று நியமிக்கப்பட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஆட்சி மாற்றத்தின் போதெல்லாம் ஹஜ் விவகாரங்கள் ஆட்சியாளர்களின் எண்ணப்படி கையாளப்படுவது நிறுத்தப்படவேண்டும். ஹஜ் விவகாரங்களுக்கென தனியான சட்ட விதிகள் அவசியமாகும். கடந்த கால அரசு இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டதன் பின்பு ஹஜ் விவகாரத்துக்கென தனியான சட்டம் ஒன்றை இயற்றிக்கொள்ளத்தீர்மானித்து அதற்கான நகர்வுகளை முன்னெடுத்தது. அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஹஜ் சட்டவரைபு சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் இறுதி நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியது கலாசார அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் பொறுப்பாகும். பொதுத்தேர்தலை அடுத்து அமையவுள்ள அரசாங்கம் ஹஜ் விவகாரங்களில் நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும்.
புதிய அரசாங்கம் ஹஜ் ஏற்பாடுகளில் எவ்வாறான புதிய மாற்றங்களை ஏற்படுத்தினாலும் அம்மாற்றங்கள் ஹஜ் யாத்திரிகர்களின் நலன் பேணுபவைகளாக அமையவேண்டும்.-Vidivelli