2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை தேர்தல்கள் திணைக்களத்தில் மேலதிக தேர்தல் ஆணையாளராகக் கடமையாற்றிய எம்.எம். முஹம்மத் தேர்தல் பணிப்பாளர் நாயகமாக பதவியுயர்வு பெற்றுள்ளார். அத்தனகல தொகுதியைச் சேர்ந்த கஹட்டோவிட்டவைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.எம்.முஹம்மத் தனது ஆரம்பக்கல்வியை கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தார். பின்பு பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தில் உயர்கல்வியை மேற்கொண்ட அவர் அங்கு 7 வருடங்கள் கல்வி கற்று தேறியதன் பின்பு அக்காலசாலையிலே விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
பின்பு அவர் அரசாங்க சேவையில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்று 5 ஆண்டுகள் பணியாற்றினார். இவர் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் ஜாமிஆ நளீமியா கலாபீடம் என்பனவற்றின் பட்டதாரியுமாவார். பொது முகாமைத்துவ விசேட கற்கை நெறியினையும் பூர்த்தி செய்துள்ளார்.
இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் 1991 ஆம் ஆண்டு 19 ஆம் திகதி சித்தியடைந்த மொஹமட் 1992 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை மொனராகலை மாவட்டத்தில் உதவித்தேர்தல் ஆணையாளராக நியமனம் பெற்றார். பின்பு 1996 ஆம் ஆண்டிலிருந்து 2003 டிசம்பர் மாதம் வரை பதுளை மாவட்டத்தின் உதவித் தேர்தல் ஆணையாளராகவும், 2004 ஆம் ஆண்டு முதல் 2007 நவம்பர் மாதம் வரை கம்பஹா மாவட்டத்தின் உதவித்தேர்தல் ஆணையாளராகவும் பதவி வகித்தார்.
இதேவேளை, 2007 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2010 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி வரை கம்பஹா மாவட்டத்தின் பிரதித்தேர்தல் ஆணையாளராக பதவி உயர்வு பெற்று கடமையாற்றினார். 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் தேர்தல்கள் திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்தில் இணைந்து கொண்ட அவர் 2014 ஆம் ஆண்டு வரை பிரதி தேர்தல் ஆணையாளராக (நிர்வாகம்) பதவி வகித்தார்.
2014 ஆம் ஆண்டு முதல் தேர்தல் திணைக்களத்தின் மேலதிகதேர்தல் ஆணையாளராக கடமையாற்றி வந்த எம்.எம்.முஹம்மத் தேர்தல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது புதிய பதவியினை நேற்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். நீண்டகாலம் தேர்தல் திணைக்களத்தில் பல்வேறு பதவிகளை வகித்த முஹம்மத் அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமனம் பெற்றுள்ளமையானது முஸ்லிம் சமூகத்தை பெருமையடையச் செய்துள்ளது.
-Vidivelli