மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் சுவீகரிக்க வேண்டும்
பாராளுமன்றத்தில் கல்விப் பிரிவு செயற்குழு
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் மட்டக்களப்பில் நிர்மாணிககப்பட்டுள்ள ‘பெட்டிகலோ கெம்பஸ்‘ (மட்டக்களப்பு பல்கலைக்கழகம்) எனும் கல்வி நிறுவனத்தை அரசாங்கம் சுவீகரிக்க வேண்டும் என அக்கல்வி நிறுவனம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்டிருந்த பாராளுமன்றத்தின் கல்விப் பிரிவு செயற்குழு தெரிவித்துள்ளது.பாராளுமன்ற கல்விப்பிரிவு செயற்குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ‘குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், குழுவின் சிபாரிசுக்கமைய பட்டிகலோ கம்பஸை அரசு சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.
குறிப்பிட்ட அறிக்கை இதற்கு முன்பு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் கையளிக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் அவரால் குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த முடியாமற் போனதாகவும் அவர் கூறினார்.
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அரசாங்கத்துடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு பட்டிகலோ கம்பஸை நிறுவியமை சட்டவிரோத செயலாகும். இதன் மூலம் அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். இதற்கு எதிராக அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவிததார்.
ஹிஸ்புல்லாஹ் சவூதி அரேபியாவிடமிருந்து கிடைக்கப்பெற்ற சுமார் 300 கோடி நிதியின் மூலம் இப்பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளதால் இந்த நிதி எந்த அடிப்படையில் கிடைத்தது என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக கடந்த காலத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்பு இந்த நிறுவனத்துக்கு எதிராக பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையிலும் சாட்சியமளிக்க ஹிஸ்புல்லாஹ் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்