முதலாளித்துவமும் கொம்யூனிசமும் மாறி மாறிப் பல நாடுகளை வளச்சுரண்டல் நிமித்தமும் இனச்சுத்திகரிப்பாகவும் இரத்த ஆற்றில் பலமுறை மூழ்கச் செய்துள்ளன. உதாரணமாக, எண்ணெய் வளமிக்க ஆப்கானை தன்னகப்படுத்த முதலில் ரஷ்யாவும் பின் அதை எதிர்க்க உதவும் போர்வையில் நுழைந்த அமெரிக்காவும் மாறி மாறி அந்த நாட்டை சூறையாடின. எண்ணெய் வளத்தை சூறையாட ஈராக் மீதும் அதே பொறிமுறையை அமெரிக்கா கையாண்டது. ஈராக்கில் இருந்திராத இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக கூறி உள்நுழைந்து தமக்கு சார்பான ஒரு ஆட்சியை அமைக்க சூழ்ச்சி செய்தது முதலாளித்துவம். உள்நாட்டு புரட்சிகளாக துவக்கப்பட்டு பின்னர் அமெரிக்கா உள்நுழைந்து தனக்கு சாதகமான ஆட்சியை உருவாக்கும் போர்வையில் லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் பொம்மை ஆட்சிகளை ஏற்படுத்தியது. அதே போன்று சிரியாவிலும் தோன்றிய உள்நாட்டுப் புரட்சியை சாதகமாக்கி ஆட்சியாளர் சார்பில் கொம்யூனிச ரஷ்யாவும் துணைக்கு துருக்கியும் புரட்சியாளர்கள் சார்பில் ISIS அழிக்கும் போர்வையில் முதலாளித்துவ அமெரிக்காவும் களமிறங்கி மிகுந்த செழிப்பும் வளங்களும் நிறைந்த புனித பூமியை குருதிப்புனலாக்கின.
மியன்மாரில் நெடுங்கால வரலாற்றைக் கொண்டுள்ள ரோஹிங்ய முஸ்லிம்களை வேட்டையாடும் இனச்சுத்திகரிப்பு இரத்த வெள்ளமாய் இன்னமும் ஓட்டப்படுகிறது. இந்தியாவின் இந்துத்துவ பாசிசம் காஷ்மீரின் சிறப்புரிமைகளை தகர்த்து அங்கிருந்த முஸ்லிம்களின் பெரும்பான்மையை தகர்த்து தமது நிலத்திலேயே சிறுபான்மையாக்கும் முயற்சியில் ஜம்மு–காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களாக்கியது; கட்டுக்கடங்காத கற்பழிப்புகள், அடக்குமுறைகளென அட்டூழியங்களை கட்டவிழ்த்துள்ளது. குடியுரிமை திருத்த மசோதா என ரோஹிங்ய வழியை தானும் கைக்கொள்கிறது. இவ்வாறு உலகெங்கும் பல முஸ்லிம் தேசங்களில் வளச்சுரண்டலுக்கான குழப்பங்களும் சில முஸ்லிம் சிறுபான்மை நாடுகளில் அவர்களுக்கு எதிரான இனவாத பாஸிஸ ஒடுக்குமுறைகளும் இடம்பெற்றுத்தான் வருகின்றன. இவையெல்லாம் பெருமளவில் உலக அரங்கில் பேசு பொருளாக்கப்பட்டாலும் சப்தமின்றி நிகழ்த்தப்படும் மிகப் பெரும் பிறிதொரு இனச் சுத்திகரிப்பை சீன கொம்யூனிசம் உய்குர் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தி வருகிறது.
கொம்யூனிஸ கொலைக் கலாசாரம்
சீன கொம்யூனிஸம் இன்றளவில் நிகழ்த்தும் இனச்சுத்திகரிப்பு வரலாற்றில் புதியதல்ல. முதலாளித்துவ ஏகாதிபத்தியமும் இனவாத பாசிசமும் எந்தளவு உயிர்களை உலக அரங்கில் குடித்துள்ளதோ அதற்கு நிகராக கொம்யூனிஸமும் உலகில் ஏராளமான உயிர்களை காவுகொண்டுள்ளது. R.J. ரம்மல் தனது Death by Governments நூலில் 1900-–1987 வரை கொம்யூனிஸம் 110 மில்லியன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களை அம்மக்கள் ஆயுதம் ஏந்தாத நிலையிலும் கொன்று குவித்துள்ளதெனக் குறிப்பிட்டார். பின்னர் சீனாவில் மாஓ சேதுங் நிகழ்த்திய படுகொலைகள் உள்ளடங்கலாக 1900-–1999 வரை 148 மில்லியன் மனித உயிர்களை கொம்யூனிஸம் காவுகொண்டுள்ளதாகத் தனது கருத்தை 2005 இல் மீள்திருத்தினார். கொம்யூனிஸ தலைவர்களான மாஓ சேதுங் 30-70 மில்லியன் கொலைகளுடனும் ஜோசப் ஸ்டாலின் 20 மில்லியனுக்கு மேற்பட்ட கொலைகளுடனும் உலகின் முன்னணி தனிமனித கொலைகாரர்கள் பட்டியலில் முதலாம், இரண்டாம் இடங்களை தக்க வைக்கின்றனர். இப்புள்ளிவிபரங்களே கொம்யூனிஸம் உலக அரங்கில் நிகழ்த்தியுள்ள மாபெரும் கொலைகளை பறைசாற்றுகிறது.
கசிந்த 403 பக்க ஆவணங்கள்
மார்க்ஸியம் மாவோயிஸமாக சீனாவில் அறிமுகமானபோது வரலாறு காணாத படுகொலைகளை சம்பவித்ததைப் போல அதன் வழிசெல்லும் தற்போதைய சீன அதிபர் ஷி ஜிங்பிங் ஆட்சியும் மாஓ வழிமுறையில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது கட்டுக்கடங்காத அடக்குமுறைகளை கட்டவிழ்த்துள்ளமை ஊடகங்களுக்கு கசிந்துள்ள சில சீன அரச ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. New York Times இற்கு கசிந்துள்ள 403 பக்கங்களைக் கொண்ட சீன கொம்யூனிஸ அரசின் ஆவணங்கள் சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் மில்லியன் கணக்கான உய்குர் முஸ்லிம்கள் சிறை மற்றும் முகாம்களில் வதைக்கப்படுவதை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன.
சீன அதிபர் ஷி ஜிங்பிங் நிகழ்த்திய உள்ளக உரைகள் 150க்கு மேற்பட்ட பக்கங்களை இதில் கொண்டுள்ளன. இவை உய்குர் முஸ்லிம்கள் மீது உச்சகட்ட மேற்பார்வை செலுத்துதல் மற்றும் சீனாவின் ஏனைய பகுதிகள் இஸ்லாத்தை தடுப்பதற்கான உத்தரவிடல்களையும் திட்டமிடல்களையும் அம்பலப்படுத்தி உள்ளன. மேலும் ஷிங்ஜியாங்கில் நிகழ்த்தப்படும் இனச்சுத்திகரிப்பு மற்றும் படுகொலைகளை சர்வதேசமே எதிர்த்தும் விமர்சித்தும் வரும் நிலையில், சர்வதேசத்தை உதாசீனப்படுத்தி இனச்சுத்திகரிப்பை ஊக்குவிக்குமுகமாக, “எதிர்க்கும் படைகளின் சிணுங்கலுக்கோ ஷிங்ஜியாங் மீது அவர்கள் தப்பெண்ணம் கொள்வதையோ அஞ்சாதீர்கள்” என சீன அதிபர் பேசுவதையும் இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
மேற்படி New York Times இற்கு கசிந்துள்ள அரச ஆவணங்கள் சீன கொம்யூனிஸ அரசு உய்குர் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள நிலையில் யார் இந்த உய்குர் முஸ்லிம்கள் என்ற கேள்வியும் ஒரு சாராருக்கு எழாமல் இல்லை.
யார் இந்த உய்குர் முஸ்லிம்கள்?
தற்போதைய சீனாவில் 55 சிறுபான்மை இனக்குழுக்களுடன் 91.6% பெரும்பான்மையினராக ஹன் இன சீனர்கள் வாழ்வதாக சீன அரச புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சிறுபான்மை இனங்களுள் 10 இனக்குழுக்கள் இஸ்லாமியர்களாவர். எண்ணிக்கையில் சுமார் 2-10 கோடிகள் வரை முஸ்லிம்கள் சீனாவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் உய்குர் மற்றும் ஹுய் இன முஸ்லிம்களை அரச ஆவணங்களில் அறிய முடிகிறது. இவர்களில் பதினொரு மில்லியன் உய்குர் முஸ்லிம்கள் வாழ்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பிராந்தியத்தின் பூர்வீக குடியினரான உய்குர் முஸ்லிம்கள் தற்போதைய சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் வாழ்கின்றனர். துர்க்கர்களான இவர்கள் அரபி எழுத்துக்களை எழுத்து வடிவமாக கொண்ட துருக்கிய மொழிகளுள் ஒன்றான உய்குர் மொழி பேசுவோராவர். இவர்கள் வாழும் பிராந்தியம் ஷின்ஜியாங் எனவும் சீனாவின் ஒரு பிராந்தியமாகவும் தற்போது அறியப்பட்டாலும், 1949 இலேயே இது சீனாவுடன் இணைக்கப்பட்டது. சீனப் படையெடுப்பின் மூலம் சீனாவுடன் அத்துமீறி இணைக்கப்பட்டது. அதுவரை முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த ஒரு சுதந்திர நாடாக கிழக்கு துர்கிஸ்தான் என அறியப்பட்ட தேசமே இப்பிராந்தியமாகும்.
கிழக்கு துர்கிஸ்தான்
உய்குர் முஸ்லிம்களின் தாய் நாடான கிழக்கு துர்கிஸ்தான் மிகப் புராதன வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டது. வரலாற்றாசிரியர் முஹம்மத் ஐமின் பேக்ரா தனது A History of East Turkestan எனும் நூலில் துர்க்கர்கள் 9000 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டவர்கள் எனக் குறிப்பிடுகிறார். டேகன் அல்மாஸ் எனும் வரலாற்றாசிரியர் இப்பகுதியில் பெறப்பட்ட தாரிம் மம்மிகள் அடிப்படையில் உய்குர் இனத்தவர்கள் 6400 வருடகால வரலாற்றைக் கொண்டவர்கள் எனக் கருதுகிறார். மேலும் கிழக்கு துர்கிஸ்தான் சுமார் 4000 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளதாக உலக உய்கூர் காங்கிரஸ் குறிப்பிடுகிறது. இத்தரவுகள் இவ்வினத்தவர்களின் தொன்மையையும் பூர்வீகத்தையும் தெளிவுபடுத்துகிறது.
உய்குர் காகனைட், கன்சு பேரரசு, கோச்சோ பேரரசு (உய்குரிஸ்தான்), காராகான் கானைட் உள்ளிட்ட பல ஆட்சிகளின் கீழ் எட்டாம் நூற்றாண்டு முதல் ஆளப்பட்ட இப்பிரதேசம் பத்தாம் நூற்றாண்டில் இஸ்லாமிய மயமானது. 934 இல் உய்குர் ஆட்சியாளரான சதுக் போக்ரா கான் இஸ்லாத்தை ஏற்றார். அதைத் தொடர்ந்து குறித்த பிராந்தியத்தில் இஸ்லாம் துரித வளர்ச்சிகண்டது. இதிலிருந்து 1759 வரை உய்குர் இனத்தவர்கள் சுயாதீன பேரரசாக சிறப்பான ஆட்சியை அங்கு வழிநடத்தினர். 1759 இல் இடம்பெற்ற சீனாவின் மஞ்சு படையெடுப்பால் இராச்சியம் அவர்கள் வசமானது. உஸ்மானிய பேரரசின் உதவியுடன் 1864 இல் அந்நியர் ஆட்சியிலிருந்து உய்குர்கள் விடுபட்டனர். மீண்டும் 1884இல் மிகுந்த படைப்பலத்துடன் சீனர்கள் கிழக்கு துர்கிஸ்தானை கைப்பற்றி ஷின்ஜியாங் என பெயர் மாற்றம் செய்தனர். ஆனாலும் உய்குர் அடிபணியவில்லை. புரட்சிகள் பல வெடித்தன; 1945 இல் புரட்சி வெற்றி கண்டது; கிழக்கு துர்கிஸ்தான் மக்கள் குடியரசு சுதந்திரமும் அடைந்தது.
ஆனால், அத்தோடு அதன் சுதந்திரம் நிலைத்துவிடவில்லை. மீண்டும் சீனா தாக்கியது; இப்போது ஏற்கனவே தாக்கிய புராதன சீனா அல்ல, ஒரு புதிய சீனா தோன்றியிருந்தது. அது கொம்யூனிஸ சீனா, மாஓ வழிநடாத்திய சீனா. 1949 இல் உய்குரின் சுதந்திரத்தைப் பறித்து அத்துமீறி சட்டவிரோதமாகத் தன்னாட்சி கொண்ட ஷின்ஜியாங் மாகாணம் எனும் பெயரில் கிழக்கு துர்கிஸ்தான் எனும் சுதந்திர நாட்டை கொம்யூனிஸ சீனா தன்னகப்படுத்தியது. இந்தியாவிற்கு ஒரு சுதந்திர காஷ்மீர் போன்று கொம்யூனிஸ சீனாவிற்கு சுதந்திர கிழக்கு துர்கிஸ்தான் அமைந்துள்ளது.
கேந்திர முக்கியத்துவம்
மிகப் புராதன வரலாற்றைக் கொண்ட இப்பிராந்தியம் சீனாவின் மொத்த நிலப்பரப்பில் ஆறில் ஒரு பங்காகும். மொங்கோலியா, ரஷ்யா, கஸகஸ்தான், கிர்ஜிஸ்தான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளால் சூழப்பட்ட ஒரு கேந்திர மையத்தில் இப்பிராந்தியம் அமைந்துள்ளது. இதனால் சீனாவின் பட்டுப் பாதையில் கிழக்கு துர்கிஸ்தானின் பங்கு அளப்பரியது. ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவை இலக்கு வைக்கும் தரைவழி பட்டுப் பாதையின் மும்மார்க்கங்களும் இதைத் தாண்டியே செல்லுதல் வேண்டும். பட்டுப் பாதையில் இதன் அமைவிடமானது வர்த்தக, கல்வி மற்றும் கலாசாரப் பரவலில் மிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாக இதை ஆக்கியுள்ளது. மேலும் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல வளங்கள் நிறைந்த நிலத்தோற்ற அமைப்பையும் கொண்ட பிராந்தியமாகும்.
இக்கேந்திர முக்கியத்துவங்கள் கிழக்கு துர்கிஸ்தானை சீனா கைப்பற்றி வைத்திருக்க ஏதுவான காரணிகளாகும். மேலும், அதிகரித்த சீன சனத்தொகையும் காரணங்களுள் ஒன்றாக இருக்கலாமெனக் கருதப்படுகிறது. இவற்றிற்கெல்லாம் மேலாக கொம்யூனிஸம் கொண்டுள்ள இஸ்லாமிய எதிர்ப்பும் கொம்யூனிஸத் திணிப்பும் இங்கு நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்குப் பிரதான காரணமாகிறது.
கட்டுக்கடங்காத ஒடுக்குமுறை
1949 இல் வலுக்கட்டாயமாக கிழக்கு துர்கிஸ்தானை இணைத்துக் கொண்டதோடு நிறுத்தவில்லை சீன அரசு. தன்னை மதங்களுக்கு ஆதரவற்ற நாத்திக சிந்தனை கொண்ட கொம்யூனிஸ அரசாக வெளிப்படுத்தும் சீன அரசு, தனது கட்டுப்பாட்டில் தொடர்ந்தும் குறித்த பிராந்தியத்தை பேண இஸ்ரேல், அமெரிக்க பாணியில் முன்னெடுப்புகளை மேற்கொள்கிறது. பெரும்பான்மை முஸ்லிம்களோடு வாழ்ந்த பாலஸ்தீனப் பகுதியில் பல்போர் பிரகரடனப் போர்வையில் இல்லாத நாடொன்றை ஏற்கனவே இருந்து வந்த நாட்டில் உருவாக்கி அங்கிருந்த முஸ்லிம்களை அங்கு கூறாக்கி சிதறச்செய்து கட்டுப்பாடற்ற யூதக் குடியிருப்புகளை துரிதப்படுத்தி முஸ்லிம்களை தங்கள் நிலத்திலேயே சிறுபான்மையாக்கும் நோக்கில் பயணிக்கிறது இஸ்ரேல்.
இதே வழிமுறையைத்தான் சீனா கையாள்கிறது. ஆரம்பத்தில் தற்போது ஷின்கியாங் என அறியப்படும் கிழக்கு துர்கிஸ்தான் 95% முஸ்லிம்களை கொண்டிருந்தது. பின்னர் படிப்படியாக ஹன் இன சீனர்களை திட்டமிட்டு குடியேற்றினர்; நூற்றுக்கணக்கான இராணுவ கிராமங்களை உருவாக்கி அவர்களது குடும்பங்களை குடியமர்த்தினர். இவ்வாறு கட்டம் கட்டமாக குறித்த பிராந்திய சனத்தொகையில் நூதன மாற்றத்தை சீனா முன்னெடுத்தது. தற்போது 95% இருந்த முஸ்லிம்கள் 57% ஆகியுள்ளனர். இவ்வாறு அங்கு வாழும் முஸ்லிம்களை சிறுபான்மைகளாக்கி பலமிழக்கச் செய்து தமது ஆதிக்கத்தை கொம்யூனிஸம் நிலைநாட்டுகிறது.
இதுபோல் ஒரு யுக்தியையே காஷ்மீரை இரு யூனியன் பிரதேங்களாக்கியதன் மூலம் முஸ்லிம்களை சிதறச்செய்து அவர்களது பூமியில் அவர்களையே சிறுபான்மையாக்கும் முயற்சியில் மோடி அரசும் ஈடுபட்டுள்ளதை அவதானிக்கலாம்.
அத்தோடு நிறுத்தாத சீனா 2001 செப்டம்பர் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா கையிலெடுத்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனும் போர்வையை தானும் போர்த்திக்கொள்ள விழைந்துள்ளது. சிறுபான்மை ஆக்குவதோடல்லாது, சிறுபான்மை ஆகிய அவர்களது மத உரிமைகளைப் பறித்து, வதை முகாம்களில் மூளைச்சலவை செய்து தமது நியாயமான சுதந்திர வேட்கையை உய்குர் முஸ்லிம்களிடமிருந்து தகர்த்து ஷி ஜிங்பிங் அரசுக்கு வாலாட்டும் கொம்யூனிஸ அடிமைகளாக்க முயல்கிறது.
சுமார் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்களை ஆயிரக்கணக்கான சீன கொம்யூனிஸ தடுப்பு முகாம்களில் “மீளக் கல்வியூட்டல்” எனும் போர்வையில் அரசு தடுத்து வைத்துள்ளது. இஸ்லாத்தை கைவிடுமாறு நிர்ப்பந்தித்தல், பன்றி இறைச்சி உண்ண வைத்தல், படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளென ஏராளமான சித்திரவதைகளை முகாம்களில் செய்கின்றனர். இம்முகாம்களில் இருந்து தப்பி அமெரிக்கா, துருக்கி, கஸகஸ்தான் போன்ற நாடுகளில் அகதிகளாக குடியேறிய உய்குர்கள் இதை வெளி உலகிற்கு அறியத் தந்துள்ளனர்.
மனித உரிமை மீறப்படும் வகையில் ஒரு வகுப்பில் ஐந்துக்கும் மேற்பட்ட CCTV கமராக்களால் முற்றிலும் அவர்களைக் கண்காணித்து கொம்யூனிஸம் போதிக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்; படுகொலை செய்யப்படுகிறார்கள். இத்தகைய வன் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு Huawei போன்ற முன்னணி நிறுவனங்கள் பங்களிப்பு செய்கின்றன. இதை பயங்கரவாதத்துக்கு எதிரான போரென நாகூசாது பேசுகிறார்கள். இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரான போக்கைக் கொண்ட சீன கொம்யூனிஸ அரசு ஹலாலை தடை செய்தது, தொழுகைக்கான அதானை தடை செய்தது, நோன்பு நோற்கத் தடைவிதித்தது, ஹஜ்ஜுக்குத் தடைவிதித்தது, இஸ்லாமிய ஆடைகளை தகர்த்தது, அரபு மொழியை நீக்கியது, மஸ்ஜித்களை நிர்மூலமாக்கியது, பெண்களை கற்பழித்து, சிறுவர்களை கொன்றுகுவித்து இனவழிப்பு நிகழ்த்துகிறது. இவ்வாறு ஒட்டுமொத்த குரோதத்தீயை இஸ்லாத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ளது. இவற்றை கசிந்த 403 பக்க அரச ஆவணங்கள் தோலுரித்துள்ளன.
2017 இல் சீன கட்டடக்கலை மரபுரிமைகளுள் ஒன்றாக பட்டியலிடப்பட்ட, 1237 களில் கட்டப்பட்ட கெரியா பள்ளிவாசலும் தரைமட்டமாக்கப்பட்டது. RFA உய்கூர் அறிக்கை பிரகாரம் 2017 இல் மட்டும் சுமார் 5000 பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பள்ளிவாசல்களிலும் உச்சகட்ட சோதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. இஸ்லாமிய மரபு என்ற எதற்கும் இடமற்ற ஒன்றாக அவற்றை ஆக்குவதோடு தொடர்ந்தும் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டே வருகின்றன. ஆனாலும் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை இது ஏற்படுத்தவில்லை.
தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் முழு மக்களும் எவ்விதசுதந்திரமுமற்ற முழுநேர அரச கண்காணிப்பின் கீழ் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இவற்றை வழிநடாத்தும் சீன அரசு மற்றும் அதன் அதிபரை தோலுரித்து உலகுக்கு ஆவணப்படுத்தி அம்பலப்படுத்துவதாகவே கசிந்த ஆவணங்கள் அமைந்துள்ளன.
நிலைமை ஆய்வுசெய்ய செல்லும் ஊடகங்களை அரச படைகள் கட்டுப்படுத்துகின்றன. ஊடக சுதந்திரம் புறக்கணிக்கப்படுகிறது. கசிந்தும் அங்கிருந்து தப்பியவர்கள் மூலமும் சில உண்மைகள் வெளிவருகின்றன. ஆனாலும் அதை வெறுமனே பொய்யெனக் கடந்தும் செல்கிறது சீனா. இங்கு எழும் கேள்வி யாதெனில், 1948 இல் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பிரகடனத்தை நிறைவேற்றியுள்ளது.
டிசம்பர் 10 இல் மனித உரிமைகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. ஆனாலும், பன்னெடுங்கால வரலாற்றைக் கொண்ட ஓரினம் எம் கண்ணெதிரே இனச் சுத்திகரிப்புக்கு உள்ளாகி வருகிறது; மத சுதந்திரம் மீறப்பட்டு கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு வாழும் உரிமையைக்கூட அதன் அரசே அவர்களிடமிருந்து பறிக்கிறது ஆனாலும் சர்வதேசம் இரு வரி மறுப்புகளோடு மறு கதை தேடித் தாவுகிறது. பாலஸ்தீன், ரோஹிங்யா, ஸ்ரப்ரனீட்சா, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, எகிப்து, சிரியா, காஷ்மீர் வரிசையில் இதுவும் ஒரு துர்கிஸ்தான் என சர்வதேச உலகும் பெயரளவில் தங்களை இஸ்லாமிய பேரரசுகள் எனக் கூறிக்கொள்ளும் நாடுகளும் கடந்து செல்கின்றன.-Vidivelli
- ஓட்டமாவடி
எம்.ஐ.முஹம்மது ஸப்ஷாத்
மொறட்டுவ பல்கலைக்கழகம்