‘‘பயங்கரவாதி சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக கொலை முயற்சியிலிருந்து இறைவனின் உதவியினால் உயிர் தப்பிய நான் கடந்த 10 மாதங்களாக எழும்பி நடக்க முடியாமல் படுத்த படுக்கையிலிருந்தே சிகிச்சை பெற்று வருகின்றேன்‘‘ என மாவனல்லை, தனாகமை பிரதேசத்தினைச் சேர்ந்த 38 வயதான ராஸீக் முஹம்மது தஸ்லீம் விடிவெள்ளியிடம் கூறினார்.
மாவனல்லை பிரதேசத்தில் சில அடிப்படைவாதிகளினால் புத்தர் சிலை உடைக்கப்பட்டபோது அப்பிரதேசத்தில் சிங்கள – முஸ்லிம் கலவரமொன்று ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்பட்டது. இதனைத் தவிர்க்கும் முகமாகவும், நாட்டின் நல்லிணக்கத்திற்காகவும் சிலையினை உடைத்தவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன்நிறுத்தும் நடவடிக்கையில் முன்னின்று செயற்பட்டதாலேயே தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த உழைப்பிற்கான பரிசாகவே நான் சுடப்பட்டேன். இதனால் கடந்த 10 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டவனைப் போன்று நான்கு சுவர்களுக்கு மத்தியில் சிக்குண்டு சிகிச்சை பெற்று வருகிறேன் என்றும் அவர் தனது நிலைமையை விளக்கினார். இந்த சம்பவத்தின் பின்னர் மூன்று குழந்தைகளைக் கொண்ட தனது குடும்பம் இன்று பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் முஸ்லிம் சமூகத்திற்காகவும் நாட்டிற்காகவும் செய்த சேவைக்காக யாசகம் கேட்டுக்கும் நிலைக்கு என்னைத் தள்ளிவிட வேண்டாம் என்றும் தான் பகிரங்கமாக வேண்டுகோள் விடுப்பதாக தஸ்லீம் கூறுகிறார்.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதி சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான குழுவினரால் கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள மூன்று, ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலினால் 45 வெளிநாட்டவர்கள் உட்பட 259 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தினால் நாடளாவிய ரீதியில் பல்வேறு தரப்பினர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பாதிப்பிலிருந்து இன்று வரை மீளமுடியாத நிலையே காணப்படுகின்றனர்.
இந்த தற்கொலை தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான குழுவினரால் வெள்ளோட்ட நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட சம்பவமே மாவனெல்லை நகரை அண்டிய பிரதேசங்களில் காணப்பட்ட புத்தர் சிலைகள் தாக்கப்பட்டமையாகும். கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதலினை சாதீக் இப்ராஹிம் மற்றும் சாஹீத் இப்ராஹிம் சகோதரர்கள் தலைமையேற்று வழிநடத்தினர். குறித்த சம்பவத்தின் பின்னணியிலிருந்தவர்களை பொலிஸார் கைது செய்வதற்கு உதவியாக செயற்பட்டவரே இந்த தஸ்லீம்.
இதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே கடந்த 2019 மார்ச் 9 ஆம் திகதி அதிகாலை பயங்கரவாதிகளினால் தஸ்லீம் சுடப்பட்டார். இவர் உறக்கத்தில் இருந்த போது, அத்துமீறி வீடு புகுந்த பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர், பல மாதங்களாக நினைவிழந்து காணப்பட்டார்.
வைத்தியர்களின் தீவிர முயற்சி காரணமாக தற்போது தேறி வருகின்ற போதிலும் தலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு காரணமாக அவரது உடலின் இடது பக்க பகுதி செயலிழந்துள்ளதுடன் எழும்பி நிற்க முடியாத படி படுக்கையிலேயே தனது நாட்களைக் கடத்தி வருகிறார். இவர் எப்போது பழைய நிலைக்கு மீள்வார் என்பதை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் தஸ்லீம் தன்னைக் கொல்ல முயற்சித்ததன் பின்னணி, அதனால் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தனது குடும்பத்தின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து விடிவெள்ளியுடன் மனந்திறந்து பேசினார். அதன் விபரம் வருமாறு :
Q உங்கள் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டதன் பின்னணி என்ன?
கடந்த வருட இறுதியில் மாவனல்லையை அண்டிய பிரதேசங்களில் சில புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டன. இதனால் அப்பிரதேசத்தில் சிங்கள – முஸ்லிம் கலவரமொன்று ஏற்படக் கூடிய வாய்ப்பொன்று காணப்பட்டது. அக்காலப் பகுதியில் அமைச்சராக செயற்பட்ட கபீர் ஹாசீமின் இணைப்புச் செயலாளராக நான் செயற்பட்டேன். அவரின் அறிவுறுத்தலுக்கமைய பொலிஸாருக்கு உதவியாக சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நான் உதவி புரிந்தேன்.
இந்த விவகாரத்துடன் கைது செய்யப்பட்டவர்களின் தொலைபேசி உரையாடல்களை பரிசீலித்த போது பல்வேறு தகவல்கள் வெளியாகின. சந்தேக நபர்களுடன் தொடர்புடைய குழுவொன்று புத்தளத்திலுள்ள விடயமும் தெரிய வந்தது.
இதனையடுத்து குறித்த குழுவினரை தேடி பொலிஸாருடன் நான் புத்தளம் சென்றேன். இதன்போது குறித்த குழுவினருடன் பொலிஸார் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர். எனினும் பொலிஸாருக்கு தமிழ் தெரியாது. அதேபோன்று அங்குள்ளவர்களுக்கு சிங்களம் தெரியாது. இதனால் தொடர்பாடல் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் குறித்த குழுவினருடன் நான் உரையாடினேன். அப்போது அவர்கள் அக்குறணையில் இருப்பதாக குறிப்பிட்டனர். எனினும் பொலிஸாரின் தொலைபேசி தொடர்பாடல் கண்காணிப்பின் மூலம் புத்தளம், வணாத்தவில்லு பிரதேசத்திலேயே அவர்கள் இருக்கின்ற விடயம் தெரிய வந்தது. இதனையடுத்து பொலிஸாரின் வாகனத்தினை புத்தளம் பொலிஸில் நிறுத்திவிட்டு புத்தளத்திலுள்ள எனது நண்பரின் முச்சக்கர வண்டியில் குறித்த இடத்திற்கு சென்றோம்.
அங்கு சென்ற போதுதான் நூற்றுக்கணக்கான எடைகொண்ட பாரிய வெடிபொருட்கள் மற்றும் நாசகார திரவியங்கள் கைப்பற்றப்பட்டன. இதுபோன்ற பாரிய வெடிபொருட்கள் இங்கு கைப்பற்றப்படும் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
சந்தேகநபர்களை கைது செய்யச் சென்ற போதே எதிர்பாராதவிதமாக இவை கைப்பற்றப்பட்டதுடன் அச் சமயத்தில் அங்கு தங்கியிருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் பொலிசார் மற்றும் இராணுவத்தின் அருகே நானும் நிற்கின்ற புகைப்படமொன்று ஊடகங்களில் வெளியாகின.
இதனையடுத்தே பயங்கரவாதிகளின் திசை என் மீது திரும்பியது. இது தொடர்பில் அந்நாட்களில் பொலிஸ் முக்கியஸ்தர் ஒருவர் என்னை தொடர்புகொண்டு அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
Q வணாத்தவில்லு பிரதேசத்தில் பாரிய வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது உங்களின் மனநிலை எவ்வாறு காணப்பட்டது?
இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது சாதிக் மற்றும் சாஹித் சகோதரர்கள் கைது செய்யப்படவில்லை. இதன் உரிமையாளர்கள் அவர்கள் என அந்த தோட்டத்திலிருந்து கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக குறித்த சகோதரர்களினால் ஏதாவதொரு அசம்பாவிதம் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படலாம் என நான் அஞ்சினேன். இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கும் நான் தெரிவித்தேன்.
Q உங்கள் மீது துப்பாக்கிப் பிரேயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் நினைவிருக்கிறதா?
மார்ச் ஒன்பதாம் திகதி அதிகாலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக மனைவி எனக்குத் தெரிவித்தார். அதற்கு முதல் நாள் இரவு மாவனெல்லை நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு அங்கிருந்து இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பிய போது மனைவியும், கடைசி மகனும் கட்டிலில் உறங்கினர். நானும் அவர்களுடன் இணைந்து உறங்கினேன். அவ்வளவும் தான் எனக்குத் தெரியும். அதன் பின்னர் நடந்த விடயங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. சம்பவம் நடந்து சில மாதங்களின் பின்னரே எனக்கு நினைவு மீண்டது. அப்போது நான் வைத்தியசாலை கட்டிலில் இருந்தேன்.
இந்த சம்பவம் தொடர்பில் தஸ்லீமின் மனைவியான பாத்திமா ஜன்னத் எம்முடன் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
‘‘ துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற போது கணவர் தஸ்லீமுடன் நானும் எனது சிறிய மகனும் கட்டிலில் உறங்கியிருந்தோம். மார்ச் 9ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.
பயங்கரவாதிகள் சமையலறை கதவினை உடைத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்து, நாங்கள் உறங்கியிருந்த கட்டிலின் அருகே காணப்பட்ட ஜன்னல் கதவை திறந்துவிட்டு வெளியே சென்றுள்ளனர். வெளியே நின்றவாறு சத்தம் வெளிவராத வகையில் சைலன்சரை பயன்படுத்தியே இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டுள்ளனர். இதனால் பாரிய சத்தம் எதுவும் எழவில்லை.
சிறிய சத்தமொன்றுதான் எனது காதுக்கு கேட்டது. கைத்தொலைபேசியின் சார்ஜர் வெடித்திருக்கலாம் என நினைத்தேன். எனினும் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. பின்னர் மின்சாரக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று பரிசோதித்தேன். அப்படியுமில்லை. இந் நிலையில்தான் அறையினுள் தூர்நாற்றமொன்று வீசியது. இது தொடர்பில் கணவரிடம் வினவினேன். அவரிடமிருந்து பதிலெதுவுமில்லை. அப்போதுதான் அவர் மயக்கமுற்று கட்டிலிலிருந்து கீழே விழப்போவதை உணர்ந்தேன். அவர் இறந்துவிட்டதாகவே நினைத்து, கட்டிலில் அவரைப் பாதுகாப்பாக கிடத்திவிட்டு அயலவர்களை அழைப்பதற்காக அறையிலிருந்து வெளியேறினேன்.
அப்போதுதான், சமையலறை கதவின் ஒரு பாதி திறக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். வெளியே சென்று அயலவர்களை அழைத்த போது, வீட்டின் பின் பக்கமாகவிருந்து இருவர் ஓடுவதை இருளுக்குள் மத்தியில் கண்டேன். இதனால் துப்பாக்கிதாரிகள்தான் வீட்டுக்கு வந்திருப்பதை உணர்ந்து கொண்டேன். பின்னர் கணவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றோம். இந்த சம்பவத்தின் போது வீட்டிலிருந்த ஒன்பது வயதான எனது மகன் அதிர்ச்சியடைந்து கடுமையாக பாதிக்கப்பட்டார். இன்று வரை அவர் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
மீண்டும் நாம் தஸ்லீமுடன் பேசினோம். அவர் மேலும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
Q உங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை எவ்வாறு இனங்காண முடிந்தது?
கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி மானவல்லை நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளின் போது என்னைச் சுட்ட இருவரை அடையாளம் காட்டினேன்.
அவர்கள் இருவரும் இந்த சம்பவத்திற்கு இரு வாரங்களுக்கு முன்னர் என்னுடன் தொலைபேசில் தொடர்புகொண்டு என்னை நேரில் சந்திக்க வேண்டுமெனக் கூறினர். அவர்களின் கோரிக்கைக்கிணங்க மாவனெல்லை சம்பத் வங்கிக்கு அருகில் நான் அவர்களைச் சந்தித்தேன்.
அதன்போது, ஆடுகள் தொடர்பிலும் என்னுடைய வீட்டிலுள்ள ஆட்டுத் தொழுவம் தொடர்பிலும் கேள்வி எழுப்பினர். இதனால் அவர்கள் எனது வீட்டுக்கு முன்கூட்டியே வத்து சென்றுள்ளதை நான் அறிந்துகொண்டேன்.
எனினும் இவர்கள் என்னைக் கொல்வதற்காகவே சதி செய்கின்றனர் என்பதை நான் உணரவில்லை. குறித்த அந்த நபர்கள் இருவரையும் அடையாள அணிவகுப்பின்போது நீதிமன்ற வளாகத்தில் கண்ட போதே, இவர்கள் என்னை கொல்வதற்காகவே தேடி வந்து சந்தித்தனர் என்பதை முதன் முறையாக உணர்ந்தேன்.
Q உங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்கள் யார் என்று தெரியுமா?
குறித்த சம்பவம் இடம்பெற்ற போது இவர்கள் யார் என்று தெரியாது. எனினும் பயங்கரவாதி சஹ்ரான் குழுவின் ஆயுதப் பிரிவு பிரதானியாக கருதப்படும் மொஹம்மட் மில்ஹான் மற்றும் சஹ்ரானின் சாரதியான கபூர் மாமா ஆகியோரை என்னைச் சூடுவதற்கு வந்தவர்கள் என்பதை பின்னர் அறிந்துகொண்டேன்.
அது மாத்திரமல்லாமல் மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரணில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரை கொலை செய்துவிட்டு அவர்களிடமிருந்து அபகரித்த ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் ஊடாகவே என் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் பின்னர் நான் அறிந்துகொண்டேன்.
Q தற்போது உங்களின் உடல் நிலை எவ்வாறுள்ளது?
இறைவனின் உதவியினாலும் வைத்தியர்களின் தீவிர முயற்சியினாலும் இன்று நான் உயிர் தப்பியுள்ளேன். எனினும் என்னால் எழும்பி நடக்க முடியாமல் கட்டிலில் இருந்தவாறே கடந்த 10 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகின்றேன்.
நாட்டில் அடிப்படைவாதிகள் , தீவிரவாதிகள் உருவாக இடமளிக்க கூடாது என்பதற்காகவே நான் எனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது வணாத்தவில்லு வரை சென்று சந்தேக நபர்களை தேட பொலிசாருக்கு உதவினேன். அன்று நான் என்னையே அர்ப்பணித்தது ஏப்ரல் 21 போன்றதொரு அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே ஆகும்.
இந்த உழைப்பிற்கான பரிசாகவே நான் சுடப்பட்டேன். இதனால், மூன்று குழந்தைகளைக் கொண்ட எனது குடும்பம் இன்று பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
முஸ்லிம் சமூகத்திற்காகவும் நாட்டிற்காகவும் நான் செய்த சேவைக்காக யாசகம் கேட்கும் நிலைக்கு என்னை மாற்றி விட வேண்டாம். நான் எழுந்து நடப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காகவும், குடும்பத்தின் பொருளாதார கஷ்டத்திற்காகவும் முடியுமானவர்கள் உதவி செய்யுமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.-Vidivelli
- நேர்கண்டவர் – றிப்தி அலி