முஸ்லிம்களின் கட்டாயக் கடமைகளில் இறுதிக் கடமை ஹஜ்ஜாகும். 2020 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை மேற்கொள்வதற்கு இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
அதற்கான ஏற்பாடுகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர் மற்றும் புதிய அரசாங்கம் ஒன்று நிறுவப்பட்டுள்ள நிலையில் 2020 க்கான ஹஜ் ஏற்பாடுகளில் மாற்றங்கள் நிகழக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கென தனியான அமைச்சொன்று இயங்கியது. கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம் விவகார அமைச்சராக எம்.எச்.ஏ.ஹலீம் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது தலைமையின் கீழ் அரச ஹஜ் குழுவும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுத்து வந்தன. ஆனால் புதிய அரசாங்கம் பதவியேற்றதும் அரச ஹஜ் குழுவொன்று நியமிக்கப்படாமலே ஹஜ் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
ஹஜ் தூதுக்குழுவின் சவூதி விஜயம்
ஒவ்வொரு வருடமும் சவூதி ஹஜ் அமைச்சு ஒவ்வொரு நாடுகளின் தூதுக் குழுவினரை அழைத்து வருடாந்தம் வழங்கப்படும் ஹஜ் கோட்டா உட்பட ஹஜ் சார்ந்த ஏனைய விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடி உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவது வழக்கமாகும்.
அந்த வகையில் கடந்த 19 ஆம் திகதி சவூதி ஹஜ் அமைச்சு கலந்துரையாடலுக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் உத்தியோகபூர்வ அழைப்பொன்றினை அனுப்பி வைத்திருந்தது. அந்த அழைப்பினை ஏற்று சவூதி அரேபியாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக்கினால் மேற்கொள்ளப்பட்டன. கலாசார அமைச்சின் அதிகாரியொருவர் மற்றும் ஹஜ் முகவர் ஒருவர் உட்பட மூவரும் சவூதி அரேபியாவுக்குச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கலாசார அமைச்சின் செயலாளரினால் அது தடைசெய்யப்பட்டு சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவரும் கொன்சியுலர் ஜெனரலும் சவூதி ஹஜ் அமைச்சருடனான கலந்துரையாடலில் பங்கு கொள்வார்கள். இலங்கையிலிருந்து தூதுக் குழுவொன்று அனுப்பி வைக்கப்படத் தேவையில்லை என கலாசார அமைச்சின் செயலாளர் தீர்மானித்தார். அது தொடர்பில் சவூதியிலுள்ள இலங்கைத் தூதருக்கும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையிலே பிரதமரும் கலாசார அமைச்சருமான மஹிந்த ராஜபக் ஷ இலங்கையிலிருந்து ஹஜ் தூதுக் குழுவொன்றினை அனுப்பி வைக்கத் தீர்மானித்து முன்னாள் பேருவளை நகரசபைத் தலைவர் மர்ஜான் பளீலின் தலைமையில் குழுவொன்றினை நியமித்தார். இத்தூதுக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக அப்துல் சத்தார், நகீப் மெளலானா, அஹ்கம் உவைஸ், புவாட் ஜெமீல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த ஹஜ் குழு கடந்த 23 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டது.
வழமைக்கு மாறான நகர்வுகள்
வருடாந்தம் ஹஜ் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு இலங்கையிலிருந்து முஸ்லிம் சமய விவகார அமைச்சர் (அவர் முஸ்லிமாக இருந்தால்) மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், அரச ஹஜ் குழுவின் தலைவர் உள்ளிட்டோரே பயணமாகினர். ஆனால் 2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கான குழுவில் இவ்வாறானவர்கள் இடம்பெறவில்லை. கடந்தகால ஆட்சியில் முஸ்லிம் சமய விவகாரத்துக்கென தனியான அமைச்சு இயங்கியது. முஸ்லிம் அமைச்சரொருவரே இருந்தார். தற்போது முஸ்லிம் சமய விவகாரங்கள் கலாசார அமைச்சினாலே முன்னெடுக்கப்படுகின்றன. கலாசார அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவே செயற்பட்டு வருகிறார். இவ்வாறான நிலையில் அவரால் ஹஜ் தூதுக்குழுவில் பங்குகொள்ள முடியாத நிலைமை இருந்தாலும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் கட்டாயமாக ஹஜ் தூதுக்குழுவில் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
ஆனால், 2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் நகர்வுகளில் வழமைக்கு மாறான முறைகளே பின்பற்றப்பட்டுள்ளமையை அறியமுடிகிறது. கலாசார அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தனது ஆதரவாளர்களை மாத்திரமே இக்குழுவில் இணைத்துள்ளார்.
கலாசார அமைச்சு 2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் விவகாரங்களை முன்னெடுப்பதற்கு தாமதியாது அரச ஹஜ் குழுவொன்றினை நியமிக்க வேண்டும். அக்குழுவில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரும் உள்வாங்கப்பட வேண்டும். ஹஜ் விவகாரங்களில் அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்படவேண்டும். இதனையே சமூகம் எதிர்பார்க்கிறது. புனிதமான கடமைக்கான ஏற்பாடுகள் புனிதமானவைகளாக அமையவேண்டும். இதில் ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்கக்கூடாது.
இலங்கைக்கு 3500 கோட்டா
கடந்த வாரம் இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்குப் பயணமான ஹஜ் தூதுக்குழு சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சில் இலங்கை ஹஜ் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டது. மர்ஜான் பளீலின் தலைமையில் பயணமான ஐவர் கொண்ட தூதுக்குழுவுடன் சவூதியில் இருக்கும் இலங்கைப் பிரதிநிதிகள் சிலரும் இணைந்து கொண்டனர்.
சவூதி ஹஜ் அமைச்சின் சார்பில் சவூதி அரேபியாவின் ஹஜ் விவகார பிரதியமைச்சர் கலாநிதி அப்துல் சுலைமான், மக்கா ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி ரவூப் பின் இஸ்மாயில் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இலங்கைக் குழுவுடன் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அஸ்மி தாசிம், முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதியும் ஜித்தா உயர் ஸ்தானிகராலயத்தின் கொன்சியுலர் ஜெனரலுமான ஏ.டப்ளியு. ஏ.சலாம், மக்கா ஹரத்தின் குர்ஆன் பதிப்பகத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் சாதிக் சாதிஹான் செய்லானி, அப்துல் காதர் மசூர் மெளலானா ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.
2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் கோட்டா உடன்படிக்கையில் இலங்கைக் குழுவின் தலைவர் மர்ஜான் பளீலும், சவூதி ஹஜ் விவகார பிரதியமைச்சர் கலாநிதி அப்துல் சுலைமானும் கையொப்பமிட்டனர்.
இலங்கை தூதுக்குழுவினர் சவூதி அரேபிய விமானசேவை அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஹஜ் யாத்திரிகர்களுக்கு நிவாரண விலையில் விமான பயணச்சீட்டுகளை பெற்றுத்தருமாறு இலங்கைக் குழுவினரால் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்தோடு இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் மக்கா, மதீனா போக்குவரத்து வசதிகள், தங்குமிட வசதிகள் என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
சவூதி ஹஜ் அமைச்சு உறுதி
2020 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் இலங்கையர் களுக்கு உரிய சலுகைகள், வசதிகளை வழங்குவதற்கு சவூதி ஹஜ் அமைச்சு தயாராக இருப்பதாகவும் அதற்கான அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் எனவும் சவூதி அரேபியாவின் ஹஜ் விவகார பிரதியமைச்சர் கலாநிதி அப்துல் சுலைமான் உறுதியளித்துள்ளதாக மர்ஜான் பளீல் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து சென்ற ஹஜ் தூதுக்குழு இவ்வாறான உறுதிமொழிகளை சவூதி ஹஜ் அமைச்சிடமிருந்து பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும். கடந்த காலங்களில் இலங்கையின் ஹஜ் யாத்திரிகர்களில் பெரும்பாலானோர் ஹஜ் கடமையின்போது பல்வேறு அசெளகரியங்களுக்கு உட்பட்டமை அனைவரும் அறிந்ததே. ஹஜ் முகவர்கள் சிலர் தாம் ஹஜ் யாத்திரிகர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை மீறினர். உறுதியளித்தபடி தங்குமிட வசதிகளோ, உணவு ஏற்பாடுகளோ அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் இலங்கை யாத்திரிகர்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகினார்கள். புதிய அரசாங்கத்தின் கலாசார அமைச்சு இவ்வாறான ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஹஜ் விவகாரத்தைக் கையாள வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
முகவர்களுக்கு ஆப்பு வைக்கப்படுமா?
ஹஜ் தூதுக்குழு இலங்கையின் ஹஜ் விவகாரத்தில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி ஹஜ் யாத்திரிகர்களுக்கு சிறந்த சேவையைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக ஹஜ் தூதுக்குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஹஜ் யாத்திரிகர்களை ஹஜ் முகவர்கள் ஊடாக அனுப்பி வைப்பதா? அல்லது மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதா? என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக மர்ஜான் பளீல் தெரிவித்துள்ளார். ஹஜ் தூதுக்குழு இது தொடர்பில் அறிக்கையொன்றினை பிரதமரிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். ஹஜ் ஏற்பாடுகள் எதிர்வரும் காலங்களில் ஊழல்களின்றி சிறப்பாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹஜ் முகவர்கள் சிலரின் ஊழல் மோசடிக்கு முடிவு கட்டவேண்டும் என்றே சமூகம் எதிர்பார்க்கிறது. சில ஹஜ் முகவர்கள் புனித கடமைக்கான ஏற்பாடுகளில் கொள்ளையடிக்கிறார்கள். இதனை ஒரு வர்த்தகமாகக் கருதி வருடாந்தம் மில்லியன் கணக்கில் தமது பைகளை நிறைத்துக் கொள்கிறார்கள். இவற்றுக்கு புதிய அரசு தீர்வு வழங்கவேண்டும்.
ஹஜ் ஏற்பாடுகளுக்கு மாற்று வழியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமே தலைமை தாங்கலாம். இதன் மூலம் ஹஜ் முகவர் மாபியாவுக்கு முடிவு கட்டமுடியும்.
இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளின் போது இரண்டு ஹஜ் முகவர் நிலையங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஹஜ் யாத்திரிகர்களை இறுதிநேரத்தில் அசெளகரியங்களுக்கு உட்படுத்தியமை நாடறிந்த ஈனச் செயலாகும். ஆறு ஹஜ் யாத்திரிகர்கள் ஒவ்வொருவரும் 7 இலட்சம் ரூபா கட்டணம் செலுத்தியும் இறுதி நேரத்தில் அவர்களால் ஹஜ் கடமையை முன்னெடுக்க முடியாமற்போனமை மன்னிக்க முடியாத குற்றமாகும்.
ஹஜ் ஏற்பாடுகளின் எந்தவொரு விதிமுறையென்றாலும் அதன் முன்னேற்றம் கருதி சமூகத்துடன் அல்லது பங்குதாரர்களுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடவேண்டும். சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்ட குழு உணர்வு பூர்வமாக தனது புதிய வழிமுறைகளை சமூகத்திற்கு முன்வைக்கவேண்டும். அவற்றில் அரசியல் கலப்படம் இருக்கவே கூடாது. புதிய ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களிடம் சென்று அவற்றை மீளாய்வு செய்வதற்குப் பின்நிற்கக்கூடாது.
அரசாங்கம் தான் நினைத்தவாறு ஹஜ் ஏற்பாடுகளை மாற்றியமைப்பதற்கு இடமளிக்காது பொதுமக்களும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
கடந்த அரசாங்க கால ஹஜ் ஏற்பாடுகள்
2015 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய விவகார அமைச்சரினால் ஹஜ் ஏற்பாடுகளில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. 2016 முதல் ஹஜ் குழு பல புதியமுறைகளை அமுல்படுத்தியது. இதில் குறிப்பாக கோட்டா பகிர்வு முறையைக் குறிப்பிடலாம். ஹஜ் கட்டணத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஹஜ் முகவர்களின் ஏகபோகத் தனியுரிமை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஹஜ் முறைப்பாடுகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அத்தோடு ஹஜ் யாத்திரிகர்களின் பதிவுகள் சீரமைக்கப்பட்டதுடன் இணையத்தளம் ஊடாக பதிவும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதேவேளை, இந்த ஏற்பாடுகளில் பல குறைபாடுகளும் காணப்பட்டன. மக்கள் ஹஜ் யாத்திரைக்காக தங்களைப் பதிவு செய்துவிட்டு தங்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும்வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. திணைக்களம் காத்திருப்போர் பட்டியலொன்றினைத் தயாரிப்பதாக இல்லை. அவ்வாறான பட்டியல் ஒன்று நடைமுறையில் இருந்தால் யாத்திரிகர்கள் தங்கள் பயணம் குறித்து உரிமைகோர முடியும்.
பதிவுக்கட்டணம் 25 ஆயிரம் ரூபா செலுத்தப்படவேண்டும் என்பதை பலர் அறியாதிருக்கிறார்கள். இறுதி நேரத்திலே திணைக்களம் 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணம் செலுத்தும்படி கடிதங்களை அனுப்பிவைக்கிறது.
ஹஜ் முகவர்கள் தலா 25 ஆயிரம் ரூபா கட்டணம் செலுத்தி பல பதிவுகளைச் செய்து பின்பு அப்பதிவுகளில் திருத்தங்களைச் செய்கிறார்கள். இது வருடாந்தம் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில முகவர்கள் 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு முழுமையாக ஹஜ் கட்டணத்தையும் அறவிட்டுக்கொள்கிறார்கள். பதிவுக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாவை ஹஜ் கட்டணத்திலிருந்து கழிப்பதில்லை. பதிவுக்கட்டணம் 25 ஆயிரம் ரூபா திணைக்களத்துக்குரியது எனக்கூறி யாத்திரிகர்களை ஏமாற்றுகிறார்கள்.
திணைக்களம் ஹஜ் யாத்திரிகர்களுடன் முறையான தொடர்பாடல்களை மேற்கொள்வதில்லை. இதன் காரணமாகவும் ஹஜ் முகவர்கள் ஹஜ் யாத்திரிகர்கள் மீது பல வகையில் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.
3500 பேர் பயணத்தை உறுதி செய்துள்ளனர்
2020 ஆம் ஆண்டுக்கு 3500 ஹஜ் கோட்டா கிடைக்கப்பெற்றுள்ளது. இதேவேளை மேலதிக ஹஜ் கோட்டாவை வழங்குமாறு சவூதி ஹஜ் அமைச்சிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்தை மீளப்பெறக்கூடிய பதிவுக் கடணடணமாக 25 ஆயிரம் ரூபா செலுத்தி 3500 ஹஜ் விண்ணப்பதாரிகள் உறுதி செய்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார்.
அத்தோடு அடுத்த வருட ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஹஜ் முகவர் நியமனமும் இடம்பெறவுள்ளதாகக் கூறினார். அதற்கான நேர்முகப் பரீட்சை அடுத்த மாதம் ஜனவரியில் நடத்தப்படவுள்ளது.
எனவே, அரச ஹஜ் குழுவொன்று உடனடியாக நியமிக்கப்படுவது அவசியமாகும். முகவர் நியமனங்களிலும் அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது. தகுதியுள்ளவர்களுக்கும் ஊழல் மோசடிகளில் ஈடுபடாதவர்களுக்குமே நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.
ஹஜ் சட்ட மூலம்
தற்போதைய ஹஜ் ஏற்பாடுகளில் நிலவும் குறைபாடுகளையும் ஊழல் மோசடிகளையும் தவிர்ப்பதற்கு சிறந்தவோர் தீர்வாக ஹஜ் ஏற்பாடுகளுக்கென்று தனியான சட்டமொன்றை இயற்றிக்கொள்வதாகும். கடந்தகால அரசாங்கத்தில் இதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதைய முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமினால் இதற்கென அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அனுமதியை அமைச்சரவையும் வழங்கியுள்ளது.
சட்டவரைபு திணைக்களத்திலும் ஆராயப்பட்டு தற்போது இச்சட்டமூலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அச்சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவேண்டும்.
தற்போதைய அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் எவரும் இல்லை. அரச தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக முஸ்லிம் சமயத்தைச் சேர்ந்த இருவரே இருக்கிறார்கள். ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தரப்பிலே இருக்கிறார்கள்.
எனவே, அரச தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹஜ் சட்டமூலத்தை விரைவுபடுத்துவதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டும்.
2020 இல் ஹஜ் கடமையை நிறைவேற்ற தயார் நிலையில் உள்ளவர்களும் அதன் பின்னரான ஹஜ் கடமையும் சீரான முறையில் அமைவதற்கு அரசு உறுதியளிக்க வேண்டும்.
ஊழல் மோசடிகளற்ற, அரசியல் கலப்பற்ற ஹஜ் ஏற்பாடுகளையே சமூகம் எதிர்பார்த்துள்ளது. புதிய அரசாங்கமும் புதிய கலாசார அமைச்சரும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளார்கள்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்