சவூதி அரேபியாவின் நீதியமைச்சு 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களின் திருமணத்துக்கு தடை விதித்துள்ளது. திருமணம் செய்து கொள்வதற்கான ஆகக்குறைந்த வயதெல்லை 18 என அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் நீதியமைச்சரும், உயர் நீதிச்சபையின் தலைவருமான ஷேக்.கலாநிதி வலீத் அல்ஸமானி 18 வயதுக்குட்பட்டவர்களின் திருமணத்துக்கு தடை விதிக்குமாறு வலியுறுத்தி அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்று நிருபம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். 18 வயதுக்குட்பட்டவர்களின் திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அச்சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற அனைத்து கோரிக்கைகளும், சர்வதேச சிறுவர் பாதுகாப்புச் சட்ட விதிகளை பூரணப்படுத்துவதற்கும் நிறுவப்பட்டுள்ள விதிமுறைகளை அமுல்படுத்துவதற்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்படவுள்ளது.
நீதியமைச்சர் வலீத் அல்ஸமானியின் கட்டளைகள் சிறுவர் பாதுகாப்புச் சட்டத்தின் நிறைவேற்று விதிமுறைகளின் பிரிவு 16/3 ஐ அடிப்படையாகக் கொண்டவை. இது திருமண ஒப்பந்தங்களை நடத்துவதற்கு முன்பு 18 வயதுக்குட்பட்ட ஒருவர் திருமணம் செய்வதானது அவ்ஆணின் அல்லது அப்பெண்ணின் சிறந்த நலன்களை அடைவதில் தீங்கு விளைவிக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவு தெரிவிக்கிறது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்