சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இலங்கைத் தீவைப் பேரழிவுக்குள்ளாக்கிய இந்த அனர்த்தத்தை இலகுவில் மறந்துவிட முடியாது. எனினும் இதன் பாதிப்புகளிலிருந்து இலங்கை மக்களை மீட்டெடுக்க பல்வேறு நாடுகளும் தொண்டு நிறுவனங்களும் கைகொடுத்தன. உயிரிழப்புகளைத் தவிர ஏனைய இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் அந்த உதவிகள் அமைந்திருந்தன என்பதை மறுப்பதற்கில்லை.
அவ்வாறானதொரு உதவித்திட்டம்தான் சவூதி அரேபிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டமாகும். ஏறக்குறைய 40 ஏக்கர் காணியில் இலங்கை நாணயப் பெறுமதியில் 552 மில்லியன் நிதியில் ஆண், பெண்களுக்கான தனியான பாடசாலைகள், வைத்தியசாலை, சந்தைத் தொகுதி, பொது வைபவங்களுக்கான மண்டபம், விளையாட்டு மைதானம், பள்ளிவாசல் மற்றும் பஸ் தரிப்பிடமும் கொண்டதொரு நவீன நகரமாக இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டது. இவ்வீட்டுத்திட்டத்தை கொண்டு வந்ததில் அப்போதைய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் பெரும்பங்கு வகித்திருந்தார்.
எனினும் ஜாதிக ஹெல உறுமய, நுரைச்சோலை வீடுகளை முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. இவ்வழக்கின் பிரகாரம் நுரைச்சோலை வீடுகளை தனி இனமொன்றுக்கு வழங்கக்கூடாது என்றும் அனைத்து இனத்தவர்களையும் உள்ளடக்கி இவ்வீடுகள் நீதியாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இத்தீர்ப்பு வழங்கப்பட்டு 10 வருடங்கள் கடந்தும் இவ் வீடுகள் இன்று வரை பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாது இழுத்தடிப்புச் செய்யப்படுவது கவலைக்குரியதாகும். இவ்வீட்டுத்திட்டம் தீகவாபி புனித பிரதேசத்தின் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்புக்குள் உள்ளதால் இவ்வீட்டுத்திட்டம் தனியே முஸ்லிம்களுக்கு மாத்திரம் சென்று விடக் கூடாது அல்லது இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் குடியேறக் கூடாது என்பதில் அம்பாறைப் பிரதேசத்திலுள்ள பெரும்பான்மை அரசியல்வாதிகளும் கடும்போக்காளர்களும் மிகவும் அவதானமாக இருந்து வருகின்றனர்.
இருப்பினும், கடந்த 2015 இல் உருவாக்கப்பட்ட நல்லாட்சியின் மூலம் இந்த வீடுகள் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்று அம்மக்கள் எதிர்பார்த்தார்கள். ஏனெனில், நல்லாட்சி உருவாவதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளில் பெரும்பாலானவர்களும் இம்மாவட்டத்தின் பெரும்பாலான முஸ்லிம்களும் வாக்களித்திருக்கிறார்கள். அவ்வாறு வாக்களித்தும் இம்மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை. இன்று அந்த அரசாங்கமும் ஆட்சியில் இல்லை.
கடந்த ஆட்சியில் அரசியல்வாதிகள் அமைச்சுப் பதவிகளையும், வெளிநாட்டுத் தூதுவர் பதவிகளையும், நிறுவனத் தலைவர்கள் பதவிகளையும் தங்களுக்கும், தங்களது கட்சிக்காரர்களுக்கும் பெற்றுக்கொடுக்க எடுத்த முயற்சியளவிற்கு சுனாமியினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த இம்மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பெற்றுக்கொடுக்க முயற்சி எடுக்கவில்லை என்ற இம்மக்களின் குற்றச்சாட்டுக்களில் நியாயமில்லாமலில்லை.
இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மாவட்ட இன விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு காணிக்கச்சேரி வைத்து காணி இல்லாதவர்களுக்கு இவ்வீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டன. கடந்த வருடம் கூட இவ் வீடுகளை வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் பூரணப்படுத்தப்பட்டது. எனினும் இதுவரை வழங்கப்படவில்லை.
இதற்கப்பால் இந்த வீட்டுத் திட்டம் மனிதர்கள் வசிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பற்றைக்காடுகள் வளர்ந்து விலங்குகளின் வாழ்விடமாக மாறியுள்ளது. கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந் நிலையில் இந்த வீடுகளை மக்களுக்கு பகிர்ந்தளித்தாலும் அதில் அவர்களால் வாழ முடியுமா என்பதும் கேள்விக்குறியாகவே மாறியுள்ளது.
எப்படியிருந்த போதிலும் ஏறக்குறைய 40 ஏக்கர் காணியில் 552 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த சுனாமி வீட்டுத் திட்டம் வீண் போக இடமளிக்க முடியாது. இது விடயத்தில் புதிய அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ கவனம் செலுத்த வேண்டும்.
இராணுவத்தின் உதவியுடன் இவ் வீட்டுத் திட்டத்தை மீளப் புனரமைத்து உடனடியாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது விடயத்தில் இனவாத ரீதியான நகர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.-Vidivelli