இன்றைய மாணவர்களே எதிர்காலத்தை வழிநடத்தும் தலைவர்களாக உருவாகப்போகின்றனர். ஆக, மாணவர் சமூகத்தின் இன்றைய செயற்பாடுகள் எதிர்காலம் குறித்த அச்சத்தை தோற்றுவித்துள்ளன. அந்தவகையில் தெற்கில் கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் இடம்பெற்ற இரு மாணவர்களின் இழப்பு மற்றும் மரணத்தின் பின்புலத்திலான காரணிகளை நோக்கும்போது எதிர்கால சந்ததியினரின் மனோநிலையை புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.
பேருவளை: மாணவர்கள் கைகலப்பு
கடந்த வியாழக்கிழமை 22 ஆம் திகதி பேருவளை அல்ஹுமைஸரா பாடசாலை வழமைபோன்று உற்சாகமாகத்தான் ஆரம்பமானது. என்றும்போல் மாணவ தலைவர்கள் சக மாணவர்களை வழிநடத்திக்கொண்டிருந்தனர்.
பாடசாலையில் க.பொ உயர்தர கணிதப் பிரிவில் கல்விபயிலும் பேருவளைஹேன பகுதியைச் சேர்ந்த முஹம்மத் தாரிக் சிறப்பு சிரேஷ்ட மாணவ தலைவராவார்.
அவர் தரம் ஒன்பதுக்குள் சென்றபோது ஏதோ ஒருவகையில் முறுகல் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன்போது மாணவன் ஒருவனால் தாரிக் தள்ளி வீழ்த்தப்பட்டதாகவும் இதன்போது அவரது தலையில் அடிபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் தாரிக் மற்ற மாணவனுக்கு பதிலுக்கு அடித்ததாகவும் இதனை ஆசிரியர் ஒருவர் கண்டதாகவும் சொல்லப்படுகின்றது. இவ்வாறான நிலையில் தாரிக்குக்கு தண்டனையாக வெயிலில் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் பாடசாலை தரப்பு இதனை முற்றாக மறுத்துள்ளது.
இவ்வாறான நிலையில் மாணவன் தாரிக் வாந்தி எடுத்த நிலையில் பின்னர் களுத்துறை தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
மரணம்
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய ஆஸ்பத்திரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் நாகொட பெரியாஸ்பத்திரியில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த மாணவன் தாரிக் மரணமானார்.
களுத்துறை பதில் நீதவான் வஜிர லக் ஷ்மன் அசுரப்புலி நாகொடை ஆஸ்பத்திரிக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதோடு சம்பவம் இடம்பெற்ற பாடசாலையின் வகுப்பறையையும் பார்வையிட்டார்.
பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நாகொட ஆஸ்பத்திரி சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
பிரேத பரிசோதனையின் பின் சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசல் மையவாடியில் ஜனாஸா கடந்த திங்கட்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
கைது
சம்பவம் தொடர்பில் மாணவன் ஒருவனை பேருவளை பொலிஸார் கைது செய்தனர். களுத்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்ததோடு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தான். காயமுற்ற மாணவன் தாரிக் மரணமானதையடுத்து மீண்டும் குறித்த மாணவன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
களுத்துறை பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மல் பொடிதுவக்கு, களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் உபுல் நில்மினி ஆரியரத்ன, களுத்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாஸ ஆகியோரின் பணிப்பில் பேருவளை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சரத் குமார தலைமையிலான பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.
விளக்கமறியல்
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட மாணவன் களுத்துறை மேலதிக நீதிவான் திருமதி என். நாணயக்கார முன்னிலையில் ஆஜர் செய்தபோது டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மாக்கொல சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.
பாடசாலை சுற்றி வளைப்பு
அதேசமயம், பிரதேச இளைஞர்கள் குறித்த பாடசாலையை கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுற்றிவளைத்ததையடுத்து பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜனக விதான, களுத்துறை கல்விப் பணிப்பாளர் பிரியானி முதலிகேயிடம் விடுத்த வேண்டுகோளினை கருத்திற் கொண்டு பாடசாலை இரு நாட்கள் மூடப்பட்டன.
அத்துடன் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த பேருவளை சீனன் கோட்டை அல்–ஹுமைஸரா தேசிய பாடசாலை மீண்டும் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட பாடசாலை வழமைபோல் இயங்கியது.
பாடசாலையில் ஆண்டிறுதிப் பரீட்சைகள் நடத்தப்பட்டு வந்தநிலையில் 26 ஆம் திகதி நடைபெறவிருந்த இரு பாடங்களுக்கான பரீட்சைகள் நேற்று முன்தினம் நடத்தப்பட்டன.
மாத்தறை சம்பவம்
மாத்தறை – எலவில்ல வீதியிலுள்ள மேலதிக வகுப்புக்கு அருகில் வைத்து, கடந்த சனிக்கிழமை (26) 17 வயதான மாணவர் ஒருவர் மற்றுமொரு மாணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் அவர் மரணமடைந்தார்.
இச்சம்பவத்தில் திஹகொடை, நாய்ம்பல, மாஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ரவிந்து ஜிம்ஹான் என்ற மாணவரே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மாணவர்கள், மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக வந்த மற்றும் சில மாணவர்களை தாக்கி, அதில் ஒரு மாணவனை அவர்களில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்குவதோடு, அதனைத் தொடர்ந்து அம்மாணவன் காயமுற்று நிலத்தில் வீழ்வது தொடர்பான CCTV காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டிருந்தன.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் தொடர்பிலும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டதோடு, அவர்களை கைது செய்வதற்கு கந்தறை, திஹகொட பொலிஸ் நிலையம் மற்றும் புலனாய்வு பிரிவு ஆகிய மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான 17 வயது மாணவன் கடந்த திங்கட்கிழமை (26) மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் குறித்த சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மற்றுமொரு 17 வயது மாணவன் மாத்தறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து குறித்த இருவருக்கும் மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றம், எதிர்வரும் டிசம்பர் 03 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதித்துள்ளது.
குறித்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனையை அடுத்து கடந்த ஞாயிறன்று அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதன்போது அங்கு பெருந்திரளான மக்கள் குழுமியிருந்தார்கள்.
இதற்கு முன்னர் இடம்பெற்ற பிரச்சினை ஒன்றை மையமாக வைத்து இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு மாணவர்களின் குரோத மனநிலை படுகொலை வரை செல்கின்றமையானது எதிர்காலத் தலைமைகளின் இலட்சணங்களை வெட்டவெளிக்கு கொண்டு வருவதாகவே இருக்கிறது.
கடந்த காலங்களில் கொழும்பில் தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் மற்றும் ரோயல் கல்லூரி மாணவர்கள் குழுக்களிடையே அடிக்கடி வீதிச் சண்டைகள் வருவதுண்டு. அத்துடன் கண்டியின் பிரபல முஸ்லிம் தேசிய பாடசாலை மாணவர்களுக்கிடையேயான பிக் மெட்ச் ஒன்றின்போது தேசிய கிரிக்கெட் மைதானமொன்று சேதப்படுத்தப்பட்டது முஸ்லிம் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறு ஆரேக்கியமற்ற மாணவர்கள் நடத்தைகளானது எதிர்காலத்தை கேள்விக்குட் படுத்துவதாகவே இருக்கிறது. அத்துடன் இவ்வாறான நடத்தை பிறழ்வு குறித்து அதிவிசேட கவனத்தை கல்வியமைச்சு செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.
-Vidivelli