வேண்டுமென்றே திட்டமிட்டு 19 ஆவது திருத்தச் சட்டம் பெரும் சிக்கலொன்றாகக் கட்டமைக்கப்பட்டது. 19 ஆவது திருத்தத்தின் மூலம் பிரதமர் ரணில் சக்திமிக்கவராக மாற்றப்பட்டுள்ளதாக நினைத்துப் பொறாமையும் காழ்ப்புணர்வும் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இதைப் பெரும் பிரச்சினையாக்கினார். அதன் செயல்வடிவமாகவே 2018 ஒக்டோபர் 26 சதியின் மூலமாக ரணிலிடமிருந்த பிரதமர் பதவி பிடுங்கி எடுக்கப்பட்டு மஹிந்த ராஜபக் ஷவிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி சிறிசேனவினால் பிரதமர் பதவியைப் பறிக்க முடியாமல் போய்விட்டதனால், எந்த நேரத்திலும் பிரதமரைப் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்க வேண்டுமென சிலர் சொல்லத் தொடங்கினர்.
19 ஆவது திருத்தத்தை எப்படியாவது நீக்கியே ஆகவேண்டுமெனத் தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான ஒரேயொரு தடையாக இருப்பது தற்போதைய பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாமையாகும். அதனால் அடுத்து அமையவுள்ள நாடாளுமன்றத்தில் எப்படியாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கான எல்லா வழிவகைகளையும் கோத்தாபய அரசாங்கம் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த திங்களன்று (2019.12.16) ஊடக நிறுவனங்களின் தலைவர்களோடு நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, 19 ஆம் திருத்தத்தை நிச்சயமாக நீக்கப் போவதாகச் சொல்லியிருந்தார். அதற்கான மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்ளத் தன்னாலான அனைத்தையும் செய்யவிருப்பதாகவும் சொல்லியியிருந்தார்.
19 ஆம் திருத்தம் மிகவும் பலவீனமானதென அவர் சொல்லியிருந்தார். 19 பலவீனமானதா? அது எப்படிப் பலவீனமாகும்? இது ஒரு தெளிவில்லாத கூற்றாகும். “அவ்வாறான பலவீனமான ஒரு யாப்பு ஒரு நாட்டில் இருக்க முடியாது. அதன் மூலமாக அந்த அரசாங்கத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையே பிணக்குகள் எழத் தொடங்கின. ஒரு நாடென்ற வகையில் அதை வருங்காலத்தில் திருத்தியாக வேண்டும். அதில் எந்தவொரு நன்மையும் இருப்பதாகத் தெரியவில்லை. அது நிரூபணமாகி விட்டுள்ளது” என்று அவர் பேசியுள்ளார்.
19ஐ முழுவதும் நீக்க வேண்டுமா அல்லது குறிப்பிட்ட சில பகுதிகளை நீக்க வேண்டுமா எனப் பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “முழுமையாக நீக்க வேண்டும்” என்று கோத்தாபய ராஜபக் ஷ பதிலளித்தார்.
இந்தப் பேச்சிலிருந்து 19 ஆம் திருத்தம் குறித்த இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாகிறது. அதாவது, 19 ஐ முழுமையாக நீக்க வேண்டும் என்பதாகும்.
2015 ஏப்ரல் 28 ஆம் திகதி பாராளுமன்றத்திலுள்ள எல்லாக் கட்சிகளினதும் ஆதரவோடுதான் 19 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டது. தற்போது பொதுஜன முன்னணியென அறியப்படும் அணியில் அப்போது நாடாளுமன்றத்திலிருந்த சகல எம்.பி.க்களும் இத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
19 ஆம் திருத்தத்தின் மூலம் நிகழ்ந்திருப்பவை குறித்துப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. அது எல்லோருக்கும் தெரியும்.
19க்கு எதிர்ப்புகள் கிளம்பியிருப்பது 19 குறித்த தெளிவின்மை காரணமாக அல்ல. அதை நன்கு புரிந்துகொண்டே அதை எதிர்க்கின்றனர்.
19ஆம் திருத்தம் குழப்பகரமானதல்ல. அது மிகவும் தெளிவானதே. அதனூடாக மிகவும் தெளிவான அரசியல் அமைப்புத் திருத்தமொன்றே மேற்கொள்ளப்பட்டது.
உதாரணமாக, ஜனாதிபதியின் பதவிக்காலத்தை வரையறுப்பது, ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராவதற்கான வாய்ப்புகளை வரையறுப்பது, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை வரையறுத்து நான்கரை ஆண்டுகள் கழிய முன்பாகக் கலைக்க முடியாது என வரையறுத்திருப்பது, அமைச்சரவை உறுப்பினர்கள் 30 எனத் தீர்மானித்திருப்பது, ஜனாதிபதி தனக்கென்றோர் அமைச்சை வைத்துக்கொள்ள முடியாமல் செய்யப்பட்டிருப்பது, ஜனாதிபதிப் பதவியில் இருக்கும் நபருக்கு எதிராக சட்டமா அதிபரைப் பெயர்குறிப்பிட்டு அடிப்படை உரிமைகள் வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியுமான சந்தர்ப்பம் கிடைத்திருப்பது போன்றன 19 ஆம் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் தெளிவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அதுதவிர, தகவலறியும் உரிமை சட்டமும் 19ஆம் திருத்தத்தின் இன்னொரு முக்கிய விடயமாகும். ஆனாலும், இதுகுறித்து அநேகருக்குத் தெளிவில்லாமல் உள்ளது. அரசியலமைப்பின் 14(அ) படி, தங்களைப் பாதிக்கக்கூடிய ஏதாவது செயற்பாடுகள், தகவல்களை அறிந்துகொள்ள அரசு, அமைச்சரவை, திணைக்களங்கள், மாகாண சபைச் சட்டத்தின் கீழான நிறுவனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் சபைகளை அணுகி அதற்கான முறையில் விண்ணப்பித்து, தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். அதன்படி தான் தகவலறியும் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தகவல்களை அறிந்துகொள்வற்கான உரிமைச் சட்டம் பின்னர் சட்டமாக்கப்பட்டுள்ள போதிலும் 19 ஆம் திருத்தத்தின் மூலமாக அது ஓர் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக உள்ளடக்கப்பட்டுள்ளது. அதனூடாகத் தகவல்களை அறிந்துகொள்வதற்கு அப்பால் பிரஜைகளின் உரிமைகள் பாதிக்கப்படும்போது அதற்கெதிராக மீயுயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்யவும் முடியுமாக அமைந்துள்ளது. (அத்தகைய அடிப்படையில் தான் கொழும்புத் துறைமுக நகரம் அமைப்பதற்கு எதிராக ஓர் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது). அதனூடாகத் தகவலறியும் சட்டத்தை மீறிப் பிரஜை ஒருவரின் உரிமைகளை மீறி செயற்படும் ஒருவரிடமிருந்து இழப்பீடு கோரும் உரிமைகூடக் கிடைக்கத்தக்க வகையில் 19 ஆம் திருத்தத்தின் மூலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதுபோன்ற இன்னொரு முக்கியமான விடயம் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாகும். இது 19 இன் மூலம் புதிதாக ஸ்தாபிக்கப்படவில்லை. 17 ஆம் திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டு, 18 ஆம் திருத்தத்தின் மூலம் சுயாதீனத்தன்மை இல்லாமலாக்கப்பட்டிருந்த இவ்வாணைக்குழுக்கள் 19 ஆம் திருத்தத்தின் மூலம் மீண்டும் சுயாதீன ஆணைக்குழுக்களாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஜனாதிபதி தனது அதிகாரங்களை அரசியலமைப்பு நிர்ணய சபையோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பது, பிரதம நீதியரசர், மீயுயர் நீதிமன்ற நீதியரசர்கள் உள்ளிட்ட மேல்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது, அரச உயர் பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பது போன்ற விடயங்கள் யாவும் இந்த 19 ஆவது திருத்தத்தின் மூலமான அரசியலமைப்பு நிர்ணய சபை ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகைய ஜனாதிபதி அதிகாரங்களின் பகிர்வின் ஊடாக ஜனாதிபதியின் கைகள் கட்டப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிகிறது. ஆயினும், அது மிகவும் அவசியமான ஒன்றேயாகும். உதாரணமாக நாட்டின் பிரதம நீதியரசர் நேரடியாக ஜனாதிபதியின் தற்றுணிபின்படி நியமிக்கப்படுமிடத்து அதனால் நீதித்துறைச் சுயாதீனத்தின் மீது எழக்கூடிய அழுத்தங்களைப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. 19ஆம் திருத்தத்தின் மூலமான அரசியலமைப்பு நிர்ணய சபை ஊடாக 2015 முதல் செய்யப்பட்ட நியமனங்களை அவதானிக்கும்போது அப்பதவிகளுக்கு மிகவும் பொருத்தமான, பக்கச்சார்பற்ற நபர்களே பெரும்பாலும் நியமிக்கப்பட்டுள்ளனர் எனக் காணமுடிகிறது.
19ஆம் திருத்தம் எவ்வளவு முக்கியத்துவம் மிக்கது என்பதை மதிப்பீடு செய்வதற்கு 2015 ஏப்ரல் – 2019 காலப்பகுதியில் நடந்த நிகழ்வுகளை அலசுவது பொருத்தமானது. அதில் பிரதானமானது, 19 இல் குறைபாடுகள், தெளிவின்மைகள் இருப்பதாக வெளிப்படாமை ஆகும். தனக்குத் தேவையானபடியெல்லாம் அதிகாரங்களைப் பாவிக்க முடியாதென்பதைத் தெரிந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19 உட்பட மொத்த அரசியலமைப்பையுமே மீறிச்செயற்பட்டார் என்பதை அக்காலப்பகுதி தெளிவாகக் காட்டிவிட்டது.
19ஆம் திருத்தத்தைக் கொணர்ந்து செயற்படுத்துவதில் தானே முக்கிய புள்ளியாகப் பிரசாரம் செய்துவந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலத்தின் முடிவில் 19ஆம் திருத்தத்தின் பரம வைரியாகவே மாறிவிட்டார். 19ஆம் திருத்தத்தை நீக்கியே தீரவேண்டுமெனும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுவிட்டார். அதுகுறித்துப் பேசும்போது, “பிரேத பரிசோதனை செய்யவேண்டிய ஒரு காலம் வந்துவிட்டது. நான்கரை ஆண்டுகள் அரசாங்கம் மோசமாக இருந்தது எனச் சொல்வதாயின் அதற்கான காரணம் 19ஆம் திருத்தமே ஆகும். 19ஆம் திருத்தம் வந்திருக்காவிட்டால் இவ்வரசாங்கம் சிறந்ததோர் அரசாங்கமாகத் திகழ்ந்திருக்கும். நானும் பிரதமரும் இரண்டு பக்கங்களுக்கு இழுக்கும் இழுபறிச் சண்டையில் இருந்ததாக நாட்டு மக்கள் குற்றம் சாட்டினர். அவ்வாறு இரண்டு பக்கங்களுக்கு இழுபறி நிகழக் காரணமாக அமைந்தது இந்த 19ஆம் திருத்தமே ஆகும்” எனச் சொன்னார்.
ஜனாதிபதியான தனது அதிகாரங்களை 19ஆம் திருத்தத்தின் மூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பறித்துத் தன்னைப் பலப்படுத்திக்கொண்டு சதிசெய்துள்ளார் எனக் கருதியே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார்.
ஆயினும் நுணுக்கமாகப் பரிசீலிக்கும்போது 19ஆம் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகமாக நீக்கப்பட்டிருப்பதாகவோ பிரதமர் மிகவும் அதிகமாகப் பலப்படுத்தப்பட்டுள்ளார் என்றோ சொல்ல முடியாது. 19ஆம் திருத்தத்தின் மூலமாக ஜனாதிபதிப் பதவியானது வில்லியம் கோபல்லாவவின் பெயரளவிலான ஜனாதிபதி போல ஆக்கப்பட்டு விட்டது போன்ற கருத்துக்களை மக்களிடையே முன்வைப்போர் 19இன் யதார்த்தத்தைச் சரியாக உணராமலேயே இவ்வாறு பேசுகின்றனர்.
அதனாலேயே 19 குறித்த சர்ச்சைகள் செயற்கையாக சித்திரிக்கப்பட்டவை,
உருவாக்கப்பட்டவை என்கிறோம். ரணில் விக்கிரமசிங்க பலப்படுத்தப்பட்டு விட்டார் எனும் காழ்ப்புணர்வில் 19ஆம் திருத்தம் பாரியதொரு சிக்கலென ஆக்கப்பட்டிருப்பது ஜனாதிபதி சிறிசேனவினால்தான். அதன் விளைவாகவே 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி சதிமுயற்சியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டு மஹிந்த ராஜபக் ஷ பிரதமராக்கப்பட்டார்.
இது நிகழ்ந்தது 19ஆம் திருத்தத்திலிருந்த குழப்பத்தால் அல்ல. ஜனாதிபதி சிறிசேன வேண்டுமென்றே 19ஆம் திருத்தத்தை மீறிச் சதி செய்ததால்தான் இது நடந்தது. 19ஆம் திருத்தத்திற்கு ஏற்ப, அதாவது தற்போதைய அரசியலமைப்பின்படி பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. 19ற்கு முன்புதான் ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் இருந்தது. ஆயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதை மீறிச் செயற்பட்டார்.
பிரதமராக மஹிந்த ராஜபக் ஷவை ஜனாதிபதி நியமித்த போதிலும் அதற்கான பெரும்பான்மைப் பலம் மஹிந்த ராஜபக் ஷவுக்கு நாடாளுமன்றத்தில் இல்லாமல் இருந்ததால் சிறிசேன, அரசாங்கத்தைக் கலைத்துவிட்டுப் பொதுத் தேர்தலுக்குத் திகதி குறிப்பிட்டார். அதுவும் அரசியலமைப்புக்கு எதிரான, முற்றிலும் முரணான நடவடிக்கையாகும். அதற்குக் காரணம் 19ஆம் திருத்தத்தில் இருந்த குழப்பநிலையல்ல. நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பில் மீயுயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தது அரசியலமைப்பை மீறும் செயலாகும்” என வழங்கப்பட்ட தீர்ப்பு இதை மிகவும் தெளிவாகப் பிரகடனம் செய்துவிட்டது. அப்போது மீயுயர் நீதிமன்றம் 19 ஆம் திருத்தத்தின்படியே தெளிவாகத் தீர்ப்பு வழங்கியது.
19ஆம் திருத்தத்தின்படி நாடாளுமன்றமானது தொடங்கப்பட்ட முதல் தினத்திலிருந்து நான்கரை ஆண்டுகள் முழுமை அடையும்வரை நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. இந்த அடிப்படைச் சட்டவிதியைப் படுமோசமாக மீறி, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக செயற்பட்ட ஜனாதிபதி 19ஐ விமர்சிக்கத் தொடங்கினார். தனக்குத் தேவையானவாறாக அரசியலமைப்பை வளைத்துப்போட முடியவில்லையே எனும் கோபத்தில்தான் அவர் இப்படியெல்லாம் விமர்சிக்கத் தொடங்கினார் என்பதுதான் உண்மை. அதனால் 19இல்தான் கோளாறுள்ளது எனச் சொல்ல வேண்டுமா?
நான்கரை ஆண்டுகள் கழியும் முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட முடியாது எனும் விதி சேர்க்கப்பட்டதே, ஜனாதிபதி ஒருவர் தான் நினைத்த மாதிரி நினைத்த நேரத்தில் நாடாளுமன்றத்தைக் கலைக்க இருந்த அதிகாரத்தை ஜனாதிபதியிடமிருந்து பிடுங்குவதற்குத்தான். ஜனாதிபதி மக்களாணையைத் தேர்தலில் பெற்றிருப்பதைப் போலவே 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களாணையைத் தேர்தலில் பெற்றே உள்ளனர். ஜனாதிபதிக்கு இருக்கும் பொறுப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் பொறுப்புகளும் வித்தியாசமானவை. நாடாளுமன்றமென்பது ஜனாதிபதியின் கீழுள்ள ஓர் அமைப்பல்ல. அது முற்றிலும் வேறான, சுயாதீனமான, அதிகாரம் கொண்ட உயர் சபையாகும். அந்த அமைப்பை ஜனாதிபதி தான் நினைத்தவாறெல்லாம் கலைத்துவிடும் அதிகாரம் தனக்கு இருக்க வேண்டுமென நினைப்பவர் ஓர் எதேச்சதிகாரியே ஆவார். அவருக்கு / அவளுக்கு அத்தகைய மட்டற்ற அதிகாரங்கள் இருக்க வேண்டுமெனச் சொல்வோரும் அவ்வாறானதோர் எதேச்சதிகாரியை உருவாக்க நினைப்போரும் எதேச்சதிகாரத்தின் அடிமைகளே தவிர ஜனநாயகத்தைப் பாதுகாப்போர் அல்லர்.
52 நாள் அரசியலமைப்புச் சதியின் தோல்விக்குப் பிறகு விரும்பியோ விரும்பாமலோ மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கவும் ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைப்போரை அமைச்சர்களாக நியமிக்கவும் சிறிசேன தள்ளப்பட்டார். ஆயினும், அவ்வாறு செய்யும்போதுகூட மீண்டும் யாப்பை மீறித் தன்னிடம் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு அமைச்சுக்களையும் வைத்துக்கொண்டார். அதுவும் பட்டவர்த்தனமான யாப்பு மீறலாகும். நமது யாப்பின்படி ஜனாதிபதி எந்தவோர் அமைச்சுப் பொறுப்பையும் வைத்துக்கொண்டிருக்க முடியாது. சிறிசேன ஜனாதிபதிக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட வகையில் அவரது காலப்பகுதிக்கு மட்டும் அவர் தன்வசம் மூன்று அமைச்சுக்களை வைத்திருப்பதற்கான அனுமதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆயினும், அந்த மூன்று அமைச்சுக்களுக்குள் பாதுகாப்பு அமைச்சும் சட்ட ஒழுங்கு அமைச்சும் அடங்காது. ஆயினும் யாப்புக்கு முரணாக அவர் இவ்விரு அமைச்சுக்களையும் தன்வசம் வைத்துக்கொண்டிருந்தார். எனினும் அன்று நாட்டில் நிலவிய அரசியல் சூழ்நிலை காரணமாக அதுகுறித்து மீண்டும் மீண்டும் சர்ச்சைகளைத் தொடர விரும்பாததால் ஜனாதிபதி, பதவி விலகும்வரை அவ்விரு அமைச்சுக்களையும் தன்வசமே வைத்துக் கொண்டிருந்தார்.
புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவும் இவ்வாறு பாதுகாப்பு அமைச்சைத் தன்வசம் வைத்துகொண்டிருப்பது அரசியலமைப்புக்கு முரணானதேயாகும். அதுதொடர்பிலான அரசியலமைப்பு ஏற்பாடுகள் மிகவும் தெளிவானவை. தற்போதைய யாப்பின்படி ஜனாதிபதி ஒருவர் எந்தவோர் அமைச்சையும் தன்வசம் வைத்துக்கொண்டிருக்க அதிகாரமோ அனுமதியோ கிடையாது.
19ஆம் திருத்தத்தின்படி, அத்திருத்தம் நடைமுறைக்கு வரும்போது ஜனாதிபதியாக இருக்கும் நபர் – அதாவது, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரம் – அவர் பதவியில் நீடிக்கும் காலத்துக்கு மாத்திரம் அரச பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய மூன்று அமைச்சுக்களை மட்டும் தன்வசம் வைத்திருக்கவும் அத்துறைகளைக் கொண்டு நடத்துவதற்குத் தேவையான ஏனைய துறைகளைத் தன்னகப் படுத்திக்கொள்ளவும் முடியும்.
இதன்மூலம் கருதப்படுவது யாதெனில், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறகு வரக்கூடிய வேறெந்த ஜனாதிபதிக்கும், மீண்டும் சிறிசேனவே இரண்டாம் தடவையாக ஜனாதிபதியானாலும் அவர் எந்தவோர் அமைச்சையும் தன்வசம் வைத்திருக்க முடியாது என்பதாகும்.
இந்தத் திருத்தத்திலே எவ்விதமான வாத விவாதங்களும் இல்லை. அமைச்சரவையின் தலைவராகவும், அதில் ஓர் உறுப்பினராகவும் ஜனாதிபதி இருப்பாரென யாப்பில் சொல்லப்படுவதால் ஜனாதிபதியும் அமைச்சுப் பொறுப்பொன்றை வைத்துக்கொள்ள முடியுமென சிலர் சொல்கின்றனர். ஆயினும் அவ்வாறானதொரு நிலை இருந்தபோதிலும் ஜனாதிபதி ஒருவர் அமைச்சொன்றைத் தன்வசம் வைத்திருக்கக்கூடாதெனும் அபிலாஷையே 19ஆம் திருத்தம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படும்போது நிலைப்பாடாக இருந்தது. 19ஆம் திருத்தமானது மீயுயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டபோது அவ்வாறான அபிப்பிராய பேதங்கள் 19இல் இருப்பதாக நீதிமன்றம் கருதவில்லை. எனவே, ஜனாதிபதியாக நியமனமாகும் ஆணோ பெண்ணோ அமைச்சுப் பதவியொன்றைத் தன்வசம் வைத்துக்கொண்டிருக்க முடியாதென்பது தெளிவானது.
யாப்பு விதி 4(ஆ) ‘நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட மக்களின் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியினால் செயற்படுத்தப்பட வேண்டும்’ எனக் குறிப்பிடுவதாலும், ஜனாதிபதியே முப்படைகளின் தலைவராகவும் இருப்பாரென சொல்லப்பட்டிருப்பதாலும் ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்க வேண்டுமெனவும் சிலர் வாதிக்கின்றனர். ஆயினும், ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் நிறைவேற்றதிகாரத்தையும் கொண்டு நடாத்துவார் என்பதன் மூலமாக அவர் பாதுகாப்பு அமைச்சையும் தன்வசம் வைத்துக் கொள்ள வேண்டுமெனத் தெளிவாகவில்லை என்பதே உண்மையாகும். முப்படைகளின் தலைவரெனினும் பாதுகாப்பு அமைச்சுப் பதவி அதிலிருந்து வேறுபட்டதாகும். அவ்விரு பதவிகளும் வெவ்வேறானவை, அவையிரண்டும் ஒரே நபர் வசமே இருக்க வேண்டும் என்றோ அது அவசியமென்றோ எந்தக் குறிப்புமே இல்லை.
இவை அனைத்தையும் அலசிப்பார்க்கும்போது, 19ஆம் திருத்தத்தில் எந்தக் குழப்பமோ கோளாறோ இல்லையென்பதும் மிகவும் தெளிவாகிறது. 19ஐக் குறைசொல்லி மக்களிடையே தவறான பிரசாரங்களை முன்னெடுப்போர் அரசியலமைப்பை மீறிச் செயற்படத் தொடங்கித் தோற்றுப் போனோர்களே !
ஜனாதிபதி சிறிசேன தன்னிஷ்டப்படி பிரதமரை நீக்கிவிட முடியாமல்போன காரணத்தால் பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்க வேண்டுமென சிலர் சொல்கின்றனர். ஜனாதிபதி சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைக்கப்போய் அந்த முயற்சியும் தோற்றுப் போனதால்தான், நினைக்கும்போது நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்க வேண்டுமென சிலர் சொல்கின்றனர். இந்தப் பேச்சுக்களிலிருந்து வெளிப்படுவது என்னவென்றால், தனக்குத் தேவையான விதத்தில் கலைத்துவிடக்கூடிய கைப்பொம்மையாக, நாடாளுமன்றத்தை ஆட்டுவிக்கக்கூடிய, தன்னிச்சைப்படி பிரதமரைப் பதவி நீக்கம் செய்து தனக்குத் தேவையான ஒருவரைப் பிரதமராக்கிக் கொள்ளக்கூடிய, நினைத்தவாறெல்லாம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தைப் பறித்து மிதித்துப் பந்தாடக்கூடிய, நாடாளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைத்துவிடக்கூடிய எதேச்சதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்க வேண்டும் என்பதா? அவ்வாறான அதிகாரத்தால் உருவாக்கப்படுவது ஜனநாயக ரீதியானதோர் ஆட்சியாளரா? எதேச்சதிகாரியா? என்பதுதான்!
19ஆம் திருத்தத்தை முழுவதுமாக நீக்குவதனூடாக, அதன்மூலம் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களும் இல்லாமலாக்கப்பட்டு நீதித்துறை உள்ளிட்ட சகல துறைகளுக்கும் நிறுவனங்களுக்கும் தனக்குத் தேவைப்பட்டோரைத் தனது கைப்பொம்மைகளாக நியமித்துக்கொள்ளும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடைத்துவிடும். அவ்வாறான எதேச்சதிகார ஆட்சிக் கட்டமைப்பொன்று ஏற்படுவதைத் தடுக்க வேண்டுமெனில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் நாடாளுமன்றத்தில் கிடைப்பதைத் தடுத்தேயாக வேண்டும் !-Vidivelli
- நன்றி: அனித்தா சிங்கள வார இதழ்
- 22.12.2019
- தமிழில்: அஜாஸ் முஹம்மத்