2020 ஆம் ஆண்டு ஹஜ் கடமையினை மேற்கொள்வற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் எதிர்பார்த்தளவு ஹஜ் விண்ணப்பதாரிகள் தங்களது பயணத்தை இதுவரை உறுதி செய்யாததால் திணைக்களம் மேலும் 1800 விண்ணப்பதாரிகளுக்கு தங்களது பயணத்தை உறுதி செய்யுமாறு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2020 ஆம் ஆண்டுக்கு 3500 ஹஜ் பயணிகளின் பயண உறுதியை எதிர்பார்த்து அதற்கான கடிதங்களை அனுப்பி வைத்தும், இதுவரை சுமார் 1800 பேரே தங்களது பயணத்தை உறுதி செய்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார்.
இதேவேளை, திணைக்களம் மேலும் 1800 விண்ணப்பதாரிகளுக்கு பயணத்தை உறுதி செய்யுமாறும் பதிவுக்கட்டணமாக மீள கையளிக்கும் வகையில் 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தைச் செலுத்தி அதற்கான ரசீதினை திணைக்களத்தில் சமர்ப்பிக்கும் படியும் கோரியுள்ளது.
25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரிகளுக்கு ஹஜ் வாய்ப்பு கிடைக்கமாட்டாதென்றும் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்பு ஹஜ் விண்ணப்பதாரிகள் பதிவுக்கட்டணம் செலுத்தி தங்கள் பயணத்தை உறுதிசெய்து கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்