வரலாற்றில் முத்திரை பதித்த சில யாழ்ப்பாண முஸ்லிம் ஆளுமைகள்

0 1,491

இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் தம் திறமை, ஆளுமைகள் மூலம் தடம்பதித்துள்ளனர். அவர்களுள் யாழ்ப்பாணத்தில் பிறந்து வாழ்ந்து மறைந்த முஸ்லிம் மூத்த அறிஞர் பெருமக்கள் நாட்டுக்கும், சமூகத்துக்கும் ஆற்றிய பங்களிப்புகள் குறித்து சிறியதொரு பார்வை இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளது.

துருக்­கித்­தொப்பி வீரர் அட்­வகேட் எம்.சீ. அப்துல் காதர் (1875 – 1946)

02.09.1875 இல் யாழ்ப்­பாணம் சோன­கத்­தெ­ருவில் பிறந்த எம்.சீ. அப்துல் காதர் மெட்ராஸ் பிர­சி­டென்­ஸியில் கல்வி கற்று பட்­ட­தா­ரி­யாகி இலங்கை முஸ்­லிம்­களில் முதன் முத­லா­கப் பட்­ட­தா­ரி­யா­கிய பெரு­மை­யினைப் பெறு­கின்றார். தொடர்ந்து சட்­டத்­துறை பயின்று 1904 இல் இலங்கை முஸ்­லிம்­களில் முத­லா­வது நியா­ய­வாதி (அட்­வகேட்) யாகிய புக­ழையும் பெற்றார். கொழும்பில் சட்­டத்­தொழில் புரிந்தார்.

1905 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆம் திகதி மேன்­மு­றை­யீட்டு வழக்கு ஒன்றில் பிர­தம நீதி­ய­ரசர் சேர். சீ.பீ. லெயார்ட் முன்­னி­லையில் தனது வழ­மை­யான உடை­ய­ணிந்து துருக்கித் தொப்­பி­யுடன் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார். நீதி­ய­ரசர் லெயார்ட், நீதி­மன்­றத்­திற்கு மரி­யாதை செலுத்­து­வ­தற்­காக துருக்கித் தொப்­பியை அல்­லது சப்­பாத்தைக் கழற்­று­மாறு பணித்தார். அட்­வகேட் அப்­துல்­காதர் துருக்கித் தொப்பி அணி­வது நீதி­மன்­றத்­துக்குச் செலுத்தும் இஸ்­லா­மிய மரி­யாதை என்றும், கால­ணி­களைக் கழற்­றச்­சொல்­வது தர்க்­க­மற்ற கூற்று என்றும் வாதிட்டு நீதி­மன்­றத்தை விட்டு வெளி­யே­றினார். 1905 செப்­டெம்பர் 19 இல் உயர்­நீ­தி­மன்றம், நீதி­மன்­றத்­துக்கு துருக்­கித்­தொப்பி அணிந்து வரு­வதைத் தடை செய்து சட்டம் கொண்டு வந்­தது.

1905 டிசம்பர் 31 இல் மரு­தானை பள்­ளி­வாசல் முன்­றலில் இச்­சட்­டத்தை எதிர்த்து மாபெரும் கண்­டனக் கூட்டம் இடம்­பெற்­றது. இறு­தியில் இவ்­வி­டயம் பிரித்­தா­னிய அர­சுக்கு மேன்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டது. இதனை ஆராய்ந்த பிரித்­தா­னிய அரசு, முஸ்­லிம்கள் நீதி­மன்­றத்­திற்கு துருக்கித் தொப்பி அணிந்து செல்­வ­தற்­கான அனு­ம­தியை குடி­யேற்ற நாட்டுச் செய­லாளர் மூலம்­ அ­றி­வித்­தது. இதன்­ மூ­லம்­ து­ருக்­கித் தொப்பி மற்றும் கால­ணிகள் அணி­வது முஸ்லிம் சமூ­கத்தின் மர­பு­ரிமை, அதனைக் காப்­பது தொழிலை விட மேன்­மை­யா­னது என உல­கிற்கு எடுத்­துக்­காட்­டிய அவ­ரது துணிவு மிக்க செயல் அனைத்து முஸ்­லிம்­க­ளாலும் பாராட்­டப்­பட்டு “துருக்­கித்­தொப்பி வழக்­க­றிஞர்” என அழைக்­கப்­பட்டார்.

(தகவல்: எம்.பீ.எம். ஜலீல்­ ஓய்­வு­பெற்ற பிர­திப்­பொது முகா­மை­யாளர் இலங்கை வங்கி)

வழக்­க­றி­ஞர் ­காதி  எஸ்.எம். அபூ­பக்கர் ஜே.பி., யூ.எம்

இவர் 1890 செப்­டெம்­பரில் யாழ்ப்­பா­ணத்தில் பிறந்தார். 1919 இல் சட்­டக்­கல்­வி­யில்­சித்­தி­ய­டைந்து புரக்­ட­ராகச் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்தார். 1936 இல் யாழ். நக­ர­ச­பைத்­தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்றார். 1940 இல் யாழ். நக­ர­ச­பையின் உப தலை­வ­ராகத் தெரிவு செய்­யப்­பட்டார். இலங்கை முஸ்லிம் லீக்கின் கிளை ஒன்றை யாழ்ப்­பா­ணத்தில் ஆரம்­பித்து அதன் தலை­வ­ரா­கவும் விளங்­கினார். 1944 இல் இலங்கை முஸ்லிம் லீக்கின் கொழும்­புக்கு வெளி­யி­லான முத­லா­வது தேசியத் தலை­வ­ராகத் தெரிவு செய்­யப்­பட்டு வர­லாற்றில் இடம்­பெற்றார். யாழ்ப்­பாணம், ஊர்­கா­வற்­துறை, பருத்­தித்­துறைப் பகு­தி­களின் முத­லா­வது காதி­யா­ரா­க­வும்­ப­ணி­யாற்­றினார்.

(நன்றி: அஸீஸ் பவுண்­டேஷன் இணை­யத்­தளம்)

யாழ். மேயர் காதி. எம்.எம். சுல்தான் ஜே.பி., யூ.எம்

யாழ். மத்­திய கல்­லூ­ரி­யிலும், யாழ் இந்துக் கல்­லூ­ரி­யிலும் கல்வி பயின்று பின்னர் சட்டக் கல்­லூ­ரிக்கு சென்று வழக்­க­றி­ஞ­ரா­கவும், பிர­சித்த நொத்­தா­ரி­சா­கவும் திகழ்ந்தார். 1950 ஆம் ஆண்டு மாந­கர சபைக்கு போட்­டி­யின்றித் தெரிவு செய்­யப்­பட்டார். மிகவும் சிறு­பான்­மை­யி­ன­ரா­கவே யாழ்ப்­பா­ணத்தில் முஸ்­லிம்கள் வாழ்ந்த போதும் தமிழ்ப் பிர­தி­நி­தி­க­ளது அபி­மா­னத்தைப் பெற்­றி­ருந்த இவர், யாழ். மாந­கர சபை வர­லாற்­றி­லேயே முதல் முஸ்லிம் மேய­ராகத் தெரிவு செய்­யப்­பட்டார். 1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாந­கர சபை மற்றும் நக­ர­சபைத் தலை­வர்­க­ளுக்­காக அகில இலங்கை முஸ்லிம் லீக் நடத்­திய மகா­நாட்டில் தமிழே முஸ்­லிம்­களின் தாய்­மொழி, தமிழும் சிங்­க­ளமும் சம அந்­தஸ்து பெற­வேண்டும் என வலி­யு­றுத்திப் பேசினார். எனினும் சிங்­கள மொழியே அரச கரும மொழி­யாக வேண்டும் என கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்ட போது அத்­தீர்­மா­னத்தில் கையொப்­ப­மி­டாது வெளி­யே­றினார். யாழ்ப்­பாணம் திரும்­பிய சுல்தானுக்கு யாழ் புகை­யி­ரத நிலை­யத்தில் யாழ் மாந­கர சபை உறுப்­பி­னர்கள் மற்றும் பெரு­ம­ளவு தமிழ் மக்கள் ஒன்று திரண்டு வர­வேற்று தமிழ்­மொ­ழிக்­காக வாதா­டிய பெருந்­தகை எனப் போற்­றினர்.

(நன்றி: தினக்­குரல் 23.08.2009 – யாழ். அஸீம்)

அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ்

1911 ஒக்­டோபர் 04 இல் யாழ்ப்­பா­ணத்தில் பிறந்தார். 1933 இல் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் வர­லாற்றுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார். 1934 இல் கேம்­பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழக புல­மைப்­ப­ரிசில் கிடைத்துச் சென்றார். ஆனால் இதே­ச­மயம் இலங்கை சிவில் சேவைப் (CCS) பரீட்­சையில் சித்­தி­ய­டைந்­ததால் இலங்கை திரும்­பினார். இதனால் இலங்­கையில் தெரிவு செய்­யப்­பட்ட முத­லா­வது முஸ்லிம் சிவில் சேவை­யாளர் என்னும் பெரு­மையைப் பெற்றார். 1935 இல் மாத்­த­ளையில் அரச சேவையை ஆரம்­பித்தார். 1942 இல் விவ­சா­யத்­துறை அமைச்­ச­ராக இருந்த (இலங்­கையின் முதல் பிர­தம மந்­திரி) டீ.எஸ். சேனா­நா­யக்க, அஸீஸை கல்­மு­னைக்கு உதவி அர­சாங்க அதி­ப­ராக நிய­மித்தார். அங்கு விவ­சா­யத்­து­றைக்கு அளப்­ப­ரிய சேவை­யாற்­றினார்.

1948 இல் கொழும்பு ஸாஹிரா கல்­லூ­ரியைப் பொறுப்­பெ­டுத்து அதன் அதி­ப­ராகக் கட­மை­யாற்றி இணை­யற்ற சேவை­யாற்­றினார். 1952 இல் பாரா­ளு­மன்ற மேல­வை­யா­கிய செனட் சபைக்கு செனட்­ட­ராக நிய­மனம் பெற்றார். 1956 இல் கொண்டு வரப்­பட்ட தனிச் சிங்­களச் சட்­டத்தை எதிர்த்து வாக்­க­ளித்­த­துடன் முஸ்­லிம்­களின் தாய்­மொழி தமிழ்­மொ­ழியே என வலி­யு­றுத்­தினார். இவர் இலங்கை பொது­சேவை ஆணைக்­கு­ழுவின் (Public Service Commission) உறுப்­பி­ன­ரா­கவும் விளங்­கினார். இரு­பதாம் நூற்­றாண்டின் கல்வி தொடர்­பா­னதும், சமூக மாற்­றங்கள் தொடர்­பா­னதும் சிந்­த­னையின் முன்­னோ­டி­யாக செனட்டர்­அஸீஸ் விளங்­கினார்.

(தொகுப்பு: மஹ்ரூப் ஏ. காதர்)

டாக்டர். எம்.எச்.எம். அப்­துல்­காதர்

1908 இல் யாழ்ப்­பா­ணத்தில் பிறந்தார். இலங்கை முஸ்­லிம்­களில் முத­லா­வது வைத்­தியப் பட்­ட­தாரிப் பட்டம் (MBBS) பெற்­றவர் இவரே. அத்­துடன் வைத்­தி­யத்­து­றையில் D.Ph (London), D.T.M. & H (Eng), F.R.S.S. (London) ஆகிய மேற்­ப­டிப்­புக்­க­ளையும் கற்ற முதல் இலங்கை முஸ்­லி­மாக இவர் திகழ்ந்தார். உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் (WHO) திட்­டத்­த­லை­வ­ராக, நோய்த்­த­டுப்பு வைத்­திய நிபு­ண­ராக கென்யா போன்ற ஆபி­ரிக்க நாடு­களில் சிறப்­புறச் சேவை­யாற்­றினார்.

டாக்டர் மைமூன் லெப்பை

1920 காலப்­ப­கு­தியில் யாழ்ப்­பா­ணத்தில் பிறந்த இவரே இலங்கை முஸ்லிம் பெண்­களுள் முதன்­மு­தலில் வைத்­தியப் பட்­ட­தா­ரிப்­பட்டம் (MBBS) பெற்­றவர். அத்­துடன் பெண் நோயியல் மற்றும் மகப்­பேற்­றியல் துறை­யிலும் ( Obstetrician & Gynecologist) சிறப்­புப்­பட்டம் பெற்ற முத­லா­வது இலங்கை முஸ்லிம் பெண்­ணாக இவர் விளங்­கினார்.

(தகவல்: ஏ.ஆர்.எம். உனைஸ் – பிரதி அதிபர்)

நீதி­ய­ரசர் எம்.எம். அப்துல் காதர்

22.05.1920 இல் யாழ்ப்­பா­ணத்தில் பிறந்த இவர், இலங்கை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற (Appeal Court) நீதி­ய­ரசர் குழாமின் தலைவர் பதவி வகித்த முத­லா­வது இலங்கை முஸ்லிம் ஆவார். கொழும்பு பல்­க­லைக்­க­ழக பட்­ட­தா­ரி­யான இவர், 1946 இல் அட்­வகேட் ஆனார். நீதி­வா­னாக நிய­மனம் பெற்­றபின், மாவட்ட நீதி­பதி, மேல் நீதி­மன்ற நீதி­பதி, மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­ய­ரசர், உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் பத­வி­க­ளுக்கு உயர்ந்தார். 1982 இல் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள் குழாமின் தலை­வ­ராக நிய­மனம் பெற்றார்.

(தகவல்: சட்­டத்­த­ரணி சகீன் ஏ.காதர் – மகன்)

அர­சாங்க அதிபர் எம்.எம். மக்பூல்

20.04.1942 இல் யாழ்ப்­பா­ணத்தில் சாதா­ரண குடும்­ப­மொன்றில் பிறந்த இவர் பட்­ட­தா­ரி­யாகி, ஆசி­ரியத் தொழிலில் இணைந்து, பின்னர் இலங்கை வங்­கியில் பத­வி­நிலை உத்­தி­யோ­கத்­த­ராகச் சேர்ந்தார். 1968 இல் இலங்கை நிர்­வாக சேவை பரீட்­சையில் சித்­தி­ய­டைந்து, நிர்­வாக சேவையில் இணைந்­த­துடன் பல்­வேறு பிர­தே­சங்­களில் பல்­வேறு பத­வி­களை வகித்­த­துடன் 1984 இல் நிர்­வாக சேவையின் தரம் 1 க்கு உயர்ந்து 1985 ஒக்­டோ­பரில் மன்னார் மாவட்ட அர­சாங்க அதி­ப­ரானார். சிறந்த நிர்­வாகத் திறனும், உயர்ந்த ஆளு­மையும் கொண்ட முஸ்லிம் அர­சாங்க அதி­ப­ராக விளங்­கிய இவரை 1988 இல் புலிகள் சுட்டுக் கொன்­றனர். இவரே முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் வரி­சையில் புலி­களால் கொல்­லப்­பட்ட முத­லா­வது அர­சாங்க அதிபர்.

(தகவல்: யாழ் அஸீம்)

அமைச்­ச­ரவைச்  செய­லாளர் எம்.எஸ். ஆலிப்

யாழ்ப்­பா­ணத்தில் சிறாப்பர் குடும்­பத்தில் 1924 இல் பிறந்த ஆலிப் சிறந்த வழக்­க­றி­ஞ­ரா­கவும், நகர நாடு திட்­ட­மிடல் துறையில் MSc பட்டம் பெற்­ற­வரும் ஆவார். இலங்கை முஸ்­லிம்­க­ளுக்­கென வட்­டி­யற்ற தனி­யான வங்­கிச்­சேவை முறைமை பற்றிச் சிந்­தித்து அதன் கருப்­பொ­ருளில் முதன் முத­லாக “அமானா” வங்கி உரு­வாக வழி­செய்தார். முத­லா­வது இஸ்­லா­மிய பெண்கள் சர்­வ­தேச பாட­சா­லை­யான “இல்மா” வை உரு­வாக்­கு­வ­திலும் பெரும்­பங்­காற்றி அதனை அறக்­கட்­ட­ளை­யாக (Trust) அமைத்­த­வரும் இவரே. அமைச்­ச­ர­வைக்­கான செய­லா­ள­ரா­கவும், அமைச்­ச­ரவை விவ­கா­ரங்­க­ளுக்­கான பணிப்­பா­ள­ரா­கவும் பத­வி­வ­கித்த முதல் முஸ்லிம் இவரே.

(தகவல்: எம்.பீ.எம். ஜலீல் ஓய்­வு­பெற்ற இலங்கை வங்கி உத­விப்­பொது முகா­மை­யா­ளர், ­நன்றி: மஹ்ரூப் ஏ.காதர்)

ஹாஜி அப்துல் லதீப் ஆலிம்  (சீனித்­தம்பி ஆலிம் சாஹிப்)

இந்­தி­யாவின் பாக்­கி­யாத்துஸ் ஸாலிஹாத் மத்­ர­ஸாவில் மார்க்­கக்­கல்வி கற்றார். இவர் அரபு மொழியில் பல நூல்­களை யாத்தார். அவர்­க­ளிடம் “றவ்­ழா­ஷரீப்”- என்னும் அரிய அர­புக்­கி­ரந்தம் இருந்­தது. இவர் கால­மான பின்பு யாழ் மீரா­னியாக் கல்­லூ­ரி­யில்­பா­து­காக்­கப்­பட்­டி­ருந்த இதனை நீதி­ய­ரசர் அப்துல் காதர் சிதை­வ­டையும்’ நிலை­யி­லி­ருந்து பாது­காப்­ப­தற்­காக அரபு மொழியில் பரிச்­ச­ய­முள்ள உலமா ஒரு­வ­ரிடம் கையெ­ழுத்­துப்­பி­ர­தி­யாக எழு­து­மாறு கொடுத்து பின்னர் பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்­யா­வுக்குக் கொடுப்­ப­தற்குத் தீர்­மா­னித்­தி­ருந்தார். அவ் உலமா வபாத்­தா­னதும் அப்­பி­ரதி பற்­றிய விபரம் எதுவும் கிடைக்­காத நிலை ஏற்­பட்­டது.

(தகவல்: எம்.எஸ்.ஏ. காதர்)

இலங்கை வானொலி புகழ் எம்.ஐ.எம். மீரான் முஹி­யித்தீன் ஆலிம்

அக்­கா­லத்தில் இலங்கை வானொ­லியில் மார்க்க உபந்­நி­யாசம் செய்த ஒரு சில இலங்கை உல­மாக்­களில் இவரும் ஒருவர். வெலி­காமம் பாரி அர­புக்­க­லா­சா­லை­யில்­ த­னது மார்க்கக் கல்­வி­யைப்­பெற்று 1915 இல்­ ஆ­லி­மாக வெளி­யேறி, மார்க்­கச்­சட்­டங்­களில் சிறப்­புத்­தேர்ச்சி பெற இந்­தியா வேலூர் ஜமா­லியா அரபுக் கல்­லூ­ரி­யில்­ இ­ணைந்து கற்று 1919 இல் தாயகம் திரும்­பினார். முஸ்லிம் மக்­க­ளி­டையே பிள­வு­கள்­பி­ரி­வி­னைகள் ஏற்­பட்டு விடக்­கூ­டாது என்­பதில் ஆலிம்சா அப்பா அவர்கள் ஆழ்ந்த அக்­கறை செலுத்திச் செயற்­பட்டார்.

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் திருக்­குர்ஆன் விரி­வு­ரை­யா­ள­ராக 1950 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை மார்க்­கப்­பணி புரிந்தார். 1976 இல் சமா­தான நீதி­வா­னாக நிய­மிக்­கப்­பட்ட இவர், யாழ் மாவட்ட சர்வ மத சம்­மே­ள­னத்­தின்­பி­ர­தி­நி­தி­யா­கவும் விளங்­கினார்.
அக்­காலப் பகு­தியில் மார்க்கப் பணி புரிந்த தப்லீக் ஜமா­அத்தின் அமீ­ரா­கவும்,யாழ் ­மா­வட்ட உலமா சபைத் ­த­லை­வ­ரா­கவும் விளங்­கினார்.

(உசாத்­துணை: யாழ் முஸ்லிம் வர­லாற்றுப் பார்வை – JMRO வெளி­யீடு )

இலக்­கிய கர்த்­தாக்கள்

பதுர்தீன் புலவர்

தமிழ்­மொ­ழியை வளர்ப்­பதில் தமிழ் மக்­க­ளோடு முஸ்­லிம்­க­ளும்­பெரும் பங்­காற்­றினர். தமி­ழுக்குப் புகழ் மணம் சேர்த்த முஸ்லிம் புல­வர்­க­ளுள் ­யாழ்ப்­பாணம் பதுர்தீன் புலவர் முதன்­மை­யா­னவர் ஆவார். இஸ்­லா­மியர் இயற்­றிய தமிழ் இலக்­கி­யங்­களுள் முதன்­மை­யா­னது உமறுப் புலவர் தந்த சீறாப்­பு­ரா­ண­மாகும். அடுத்­த­தான இஸ்­லா­மியத் தமி­ழி­லக்­கி­ய­மாக தமிழ் நல்­ல­றி­ஞர்கள், பதுர்தீன் புல­வர்­ இ­யற்­றிய “முஹி­யித்தீன் புரா­ணத்­தையே’ குறிப்­பி­டு­கின்­றனர்.

(உசாத்­துணை: உலக இஸ்­லா­மிய தமி­ழி­லக்­கிய மாநாடு சிறப்பு மலர் 2002. நன்றி: யாழ்­அஸீம்)

அச­னா­லெப்பை புலவர்

ஈழத்­தி­லி­ருந்து அற­புத்­தமிழ் இலக்­கியம் வளர்த்த தலை­சி­றந்த தமிழ் புல­வர் ­யாழ்ப்­பாணம் தந்த அச­னா­லெப்பை புல­வ­ராவார். நவ­ரத்­தினத் திருப்­புகழ், முஹி­யித்தீன் ஆண்­டகை பேரில் ஆசி­ரிய விருத்தம், பதா­யி­ருப்­ப­திற்றுத் திருக்­கந்­தாதி, சாஹுல்­ஹ­மீது ஆண்­டகை பேரில் முனா­ஜாத்து என்­பன இடம்­பெ­றும்“­பு­கழ்ப்­பா­வணி” என்னும் தொகுப்பை வெளி­யிட்டார். அறபுத் தமி­ழி­லக்­கியம் படைத்தோர் யாவரும் அச­னா­லெப்பைப் புல­வரின் சாற்­றுக்­க­வியை தத்தம் நூலுக்­க­ணி­யாகக் கொண்­டார்கள். அர­பியில். நபிகள் நாயகம் பெய­ரிலும், முஹி­யித்தீன் அப்துல் காதர் ஆண்­டகை பேரிலும், ஐத்றூஸ் தங்கள் பேரிலும், காதி­ரிய்யா தரீக்கா பேரிலும் பைத்­துக்கள் இயற்­றினார்.

(நன்றி: அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் தின­கரன்.12.1963)

அப்­துல்லா லெப்பை புலவர்

இவர் யாழ்ப்­பாணம் அச­னா­லெப்பை புலவர், காதி அபூ­பக்கர் ஆகி­யோ­ரது மைத்­து­னர்­ஆவார். நல்­வழிக் கவி­தைகள், நல்­வழித் திரு­நபிக் கவி­தைகள், திரு­நபிப் புகழ். கீதம், குத்பு நாயகம் பாமாலை, ஷாஹுல்­ஹ­மீது நாயகம் பாமாலை, ஆகிய கவிதை நூல்­களை எழு­தினார். இவர் எழு­திய நோன்பின் மாண்பு, கர்­பலா, ஹிஜ்ரத் என்­னும்­சி­று­நூல்கள் வாலிபர் சங்­கங்­களால் வெளி­யி­டப்­பட்­டன.

(நன்றி: எம்.எம். அப்துல் குத்தூஸ் – ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் நாயகம்)

சுபைர் இளங்கீரன்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுபைர் இளங்கீரன் ஈழத்தின் நாவல் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராவார். 1950 – 1978 காலப்பகுதியில்“நீதியே நீ கேள்”, “பைத்தியக்காரி”, “அவளுக்கு ஒரு வேலை வேண்டும்”, ’இங்கிருந்து எங்கே”, நீதிபதி”, “தென்றலும் புயலும்” முதலான 25 நாவல்களை எழுதியுள்ளார். “கருகிய மொட்டு”. “தாலிக்கொடி” அடங்கலாக 5 சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டார். “இலங்கையின் இரு மொழிகள்”, “பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துக்களும்“ ஆகிய கட்டுரைத் தொகுதிகளையும் வெளியிட்டார். “மகாபாரதி”:, “தடயம்”, “பாலஸ்தினம்” ஆகிய நாடகங்கள் தொகுப்பையும் வெளியிட்டார். இலங்கை வானொலியில்“மனித புராணம்” என்னும் நாடகம் ஒரு வருடத்துக்கு மேலாக ஒலிபரப்பப்பட்டது. “வாழப் பிறந்தவர்கள்” என்னும் நாடகம் இரண்டரை வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது.

(தகவல்: எம்.ஜீ.பஷீர் – முன்னாள் யாழ் உதவி மேயர்)
நன்றி – “யாழ். முஸ்லிம்களின் பூர்வீகமும் வாழ்வியலும்” வெளியீடு – (முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்) தேசிய மீலாதுன்நபி 2017 – யாழ்ப்பாணம்.-Vidivelli

  • தொகுப்பு:
    ஏ.எம். முஹம்மத் ஸப்வான்,
    சீனன்கோட்டை, பேருவளை.

Leave A Reply

Your email address will not be published.