கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தாவிடின் போராட்டம் வெடிக்கும்
கோடீஸ்வரன் எம்.பி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாவிட்டால் அம்பாறையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் மக்களை ஒன்று திரட்டி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எதிராகவும் மஹிந்த ராஜபக் ஷ, கோத்தாபய ராஜபக் ஷ ஆகியோருக்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராக இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மல்வத்தை அப்பிள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்தில் அடிப்படைத் தேவையாக தமிழ் பகுதிகளில் மூன்று பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகளின் அவசியம் இருக்கின்றன. புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்க வேண்டிய கடமைப்பாடுகளில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும். பொத்துவில் பிரதேசத்தில் கோமதியை மையமாகக்கொண்டு ஒரு பிரதேச செயலகமும், சம்மாந்துறை பிரதேசத்தில் மல்வத்தையை அடிப்படையாக கொண்ட பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டிய அவசியப்பாடு அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகிறது.
இதற்கு காரணம் எங்களது நிலம் ஆக்கிரமிக்கப்படுறது. எமது பொருளாதார வளம் சுரண்டப்படுகிறது. திட்டமிடப்பட்ட முறையில் ஏனைய சமூகங்களால் கலை, கலாசாரம் கல்வியை தேசியத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கபடும்போது தான் தன்னிறைவு பெற்ற சமூகமாக மாற்றம் பெறும். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவற்காக நாங்கள் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி கொடுக்க வேண்டுமெனக் கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடார்த்தியிருந்தோம், பல்வேறு அழுத்தங்களை கொடுத்தோம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தரமுயர்த்தி தருவதாக இறுதிவரை சொல்லி சொல்லி எங்களை ஏமாற்றிவிட்டது .
தேர்தல் காலத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ பிரசார மேடைகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவிற்கு வாக்களிக்குமாறு வாக்கு கேட்டார். மக்கள் அதற்கு இசைந்து கணிசமான வாக்குகளை வழங்கினர்.
ஜனாதிபதியானால் மூன்று நாட்களில் தரமுயர்த்தி கொடுக்கப்படும் என்று முழங்கினார். ஆனால் மாதங்கள் கடந்தும் தரமுயத்தப்படவில்லை. இன்றுகூட கல்முனை பிரதேச செயலக விடயம் எட்டாக்கனியாகவே காணப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் புனர்வாழ்வு அமைச்சராக இருந்தவர். அந்த நேரம் செய்யாத விடயத்தை, சொல்லாத விடயத்தை இன்று கூக்குரலிட்டுத் திரிகின்றார். இன்று மக்களை திசை திருப்புகின்ற போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தை பேசும் பொருளாக, தேசிய பிரச்சினையாக, சர்வதேச பிரச்சினையாக கொண்டு வந்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதை மறந்துவிடக்கூடாது. தரமுயர்த்தி தருவோமென சொல்ல வைத்தவர்கள் நாங்கள். அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழுத்தங்களை கொடுத்தது போல் தற்போதிருக்கின்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு அழுத்தங்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொடுக்கும். கல்முனை பிரதேச செயலகம் தரமுயரும் என்ற விடயத்தில் கூடுதலான அழுத்தங்களை கொடுத்து தரமுயர்த்தும் வரை போராடிக் கொண்டே இருப்போம் அடுத்தகட்டமாக பிரதமர் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து தராவிட்டால் கல்முனையில் வாழும் தமிழ் மக்கள் மட்டுமல்ல, அம்பாறையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் மக்களை ஒன்றுதிரட்டிப் போராடுவதற்குத் தயாராக இருக்கின்றோம்.
எப்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக நாங்கள் போராட்டங்களை முன்னெடுத்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தோமோ அதேபோன்று பொதுஜன பெரமுன எதிராக மஹிந்த ராஜபக் ஷ, கோத்தாபய ராஜபக் ஷ ஆகியோருக்கு எதிராக அழுத்தங்களையும் போராட்டங்களையும் எங்களது தமிழ் மக்கள் முன்னெடுத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த நிகழ்விற்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில், சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வெ. ஜெயச்சந்திரன், இலங்கை தமிழரசு கட்சியின் வாலிப முன்னணியின் துணை செயலாளர் அ.நிதான்சன், மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலய அதிபர் திருமதி ஜி.கணேஸ்வரன் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.-Vidivelli
- பாறுக் ஷிஹான்