தொடர்ந்தும் சீரற்ற காலநிலை
34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு ,16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் ,6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ,பல நீர் தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
நாட்டின் பல பாகங்களிலும் கடந்த ஓரிரு வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலை இன்றும் தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம் மாதத்தில் மாத்திரம் கடும் மழை, வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் மூவர் உயிரிழந்துள்ளதோடு, 9962 குடும்பங்களைச் சேர்ந்த 34, 842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தங்களால் 49 குடியிருப்புக்கள் முழுமையாகவும் 1017 குடியிருப்புக்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள 4904 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 892 பேர் 120 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளதோடு, சில மாவட்டங்களில் 150– – 200 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
மழை வீழ்ச்சி
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை இன்றும் தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம், பொலனறுவை, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் கடும் மழை பெய்யும் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இம் மாவட்டங்களில் 150 -– 200 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். அதே வேளை மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, மாத்தளை, புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் 100 –- 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது. இப் பிரதேசங்கள் தவிர தென் மாகாணத்திலும் கண்டி, குருநாகல் , முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 100 மில்லி மீற்றரை அண்மித்த மழை வீழ்ச்சி பதிவாகும்.
மன்னார், வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம், பொலனறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா, கேகாலை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, பதுளை, நுவரெலியா, மொனராகலை, அம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழை தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை
மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளை
மாத்தளை மாவட்டத்தில் அம்பன்கங்க கோரள, உக்குவெள, பல்லேபொல, மாத்தளை, லக்கல – பல்லேகம, யடவத்த, நாவுல, வீல்கமுவ, இறத்தோட்டை ஆகிய பிரதேசங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி
கண்டி மாவட்டத்தில் பாதஹேவாஹெட்ட , உடுதும்பர மற்றும் மெததும்பர ஆகிய பிரதேசங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா
நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குராங்கெத்த மற்றும் வலப்பனை பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை
பதுளை மாவட்டத்தில் பதுளை, பண்டாரவளை, வெலிமட, ஹாலிஎல, ஊவாபரணகம, எல்ல, ஹல்துமுல்ல, பசரை , அப்புதளை, சொரனதோட்ட மற்றும் லுனுகம ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொனராகலை
மொனராகலை மாவட்டத்தில் படல்கும்புர, மெதகம, பிபில ஆகிய பிரதேசங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி
இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேசங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆறுகளின் நீர்மட்டம்
மீஓயா
மீஓயா கல்கமுவ ஆற்றின் நீர்மட்டம் உயர்வடையும் பட்சத்தில் வெள்ளம் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் நீர்மட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 4.84 மீற்றராக காணப்பட்டது. இந்நீர்மட்டம் 5.94 மீற்றர் வரை அதிகரித்தால் சிறியளவிலான வெள்ளமும் 7.00 மீற்றர் வரை அதிகரித்தால் பாரியளவிலான வெள்ளமும் ஏற்படக் கூடும்.
மாணிக்ககங்கை
மாணிக்க கங்கையின் நீர்மட்டம் நேற்று மாலை வரை 3.50 மீற்றராகக் காணப்பட்டது. இந்நீர்மட்டம் 4.00 மீற்றர் வரை அதிகரித்தால் சிறியளவிலான வெள்ளமும் 5.00 மீற்றர் வரை அதிகரித்தால் பாரியளவிலான வெள்ளமும் ஏற்படக் கூடும்.
மகாவலி கங்கை
மகாவலி கங்கையின் மன்னம்பிடிய ஆற்றின் நீர் மட்டம் நேற்று மாலை வரை 3.50 மீற்றராகக் காணப்பட்டது. இந்நீர்மட்டம் 3.70 மீற்றராக அதிகரிக்கும் போது சிறியளவிலான வெள்ளமும், 4.00 மீற்றர் வரை அதிகரிக்கும் போது பாரியளவிலான வெள்ளமும் ஏற்படும்.
வான்கதவுகள் திறப்பு
கவுடுல்ல நீர் தேக்கத்தின் இரு வான்கதவுகள் நேற்றை தினம் திறக்கப்பட்டுள்ளன.
பொலன்னறுவையில் பராக்கிரம சமுத்திரத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அநுராதபுரத்தில் இராஜாங்கனை நீர்தேக்கத்தின் 30 வான்கதவுகளில் 22 உம், அங்கமுவ நீர்தேக்கத்தின் இரு வான்கதவுகளும், கலா வாவியின் இரு வான்கதவுகளும் , மஹகனதராவ நீர்தேக்கத்தின் இரு வான்கதவுகளும், நாச்சாதுவ நீர்தேக்கத்தின் 6 வான்கதவுகளும், யான் ஓயா நீர்தேக்கத்தின் 5 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
புத்தளத்தில் தப்போவ நீர்தேக்கத்தின் 20 வான்கதவுகளும், இங்கினிமிட்டிய நீர்தேக்கத்தின் 4 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
குருநாகலில் தெதுரு ஓயாவின் 8 வான்கதவுகளும், அம்பகொலவெல நீர்தேக்கத்தின் 2 வான்கதவுகளும், ஹக்வட்டுன ஓயாவின் 3 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
அம்பாறையில் ரம்புக்கன்ஓயாவின் 2 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
அம்பாந்தோட்டையில் லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகளும், மவ்வார நீர்தேக்கத்தின் 2 வான்கதவுகளும், முருதவெல நீர்தேக்கத்தின் 1 வான்கதவும், வெஹெரகல நீர்தேக்கத்தின் 6 வான்கதவுகளும், பதகிரிய நீர்த்தேக்கத்தின் 10 வான்கதவுகளும், உடவலவ நீர்தேக்கத்தின் 3 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் உன்னிச்சகுளத்தின் 3 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
மாத்தளை மாவட்டத்தில் மொரகஹாகந்தை நீர்தேகத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
பாதிப்புக்கள்
பதுளை
பதுளை மாவட்டத்தில் கடும் மழை மற்றும் மண்சரிவினால் 650 குடும்பங்களைச் சேர்ந்த 2565 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 11 குடியிருப்புக்கள் முற்றாகவும் 302 குடியிருப்புக்கள் பகுதியளவிலும் சேதமiடைந்துள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்ட 327 குடும்பங்களைச் சேர்ந்த 1308 பேர் 17 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மொனராகலை
மொனராகலை மாவட்டத்தில் வெள்ளித்தினால் 973 குடும்பங்களைச் சேர்ந்த 3350 பேர் பாதிக்கப்பட்டு ள்ளதோடு, 4 குடியிருப்புக்கள் பகுதியளவிலும் 163 குடியிருப்புக்கள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 633 குடும்பங்களைச் சேர்ந்த 2362 பேர் 11 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 1043 குடும்பங்களைச் சேர்ந்த 3293 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு குடியிருப்பு முழுமையாகவும், 3 குடியிருப்புக்கள் பகுதியளவிலும் சேமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 677 குடும்பங்களைச் சேர்ந்த 1997 பேர் 8 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை
அம்பாறையில் வெள்ளத்தினால் 1633 குடும்பங்களைச் சேர்ந்த 5690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 9 குடியிருப்புக்கள் முழுமையாகவும், 68 குடியிருப்புக்கள் பகுதியளவிலும் சேமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 105 குடும்பங்களைச் சேர்ந்த 389 பேர் நலன்புரி முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கண்டி
கண்டியில் மண்சரிவு கடும் காற்று என்பவற்றால் 93 குடும்பங்களைச் சேர்ந்த 347 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒரு குடியிருப்பு முழுமையாகவும், 13 குடியிருப்புக்கள் பகுதியளவிலும் சேமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 47 குடும்பங்களைச் சேர்ந்த 181 பேர் 2 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா
நுவரெலியாவில் மண்சரிவு, பாறை இடிந்து வீழ்ந்தமை உள்ளிட்ட அனர்த்தங்களால் 115 குடும்பங்களைச் சேர்ந்த 389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 2 வீடுகள் முழுமையாகவும் 73 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட 152 குடும்பங்களைச் சேர்ந்த 433 பேர் 15 பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாத்தளை
மாத்தளை மாவட்டம் கடும் மழை மற்றும் காற்று என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 484 குடும்பங்களைச் சேர்ந்த 1592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு ஒரு குடியிருப்பு முழுமையாகவும் 225 குடியிருப்புக்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட 111 குடும்பங்களைச் சேர்ந்த 414 பேர் 7 பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை
அம்பாந்தோட்டையில் வெள்ளத்தினால் 829 குடும்பங்களைச் சேர்ந்த 3362 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
குருநாகல்
குருநாகல் மாவட்டத்தில் வெள்ளத்தினால் 311 குடும்பங்களைச் சேர்ந்த 939 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்தோடு 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 124 குடும்பங்களைச் சேர்ந்த 327 பேர் 5 பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம்
புத்தளத்தில் கடும் மழை காரணமாக 1777 குடும்பங்களைச் சேர்ந்த 6218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 29 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பாதிப்புக்களுக்கு உள்ளான 1184 குடும்பங்களைச் சேர்ந்த 4263 பேர் 15 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை
கேகாலையில் கடும் காற்று, மழை, மின்னல் தாக்கம் மற்றும் மரம் முறிந்து வீழ்ந்தமையால் 6 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அநுராதபுரம்
அநுராதபுரத்தில் வெள்ளத்தினால் 1272 குடும்பங்களைச் சேர்ந்த 4341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 குடியிருப்புக்கள் முழுமையாகவும் 34 குடியிருப்புக்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிப்புக்களுக்கு உள்ளான 1022 குடும்பங்களைச் சேர்ந்த 3367 பேர் 26 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பொலனறுவை
பொலனறுவையில் வெள்ளத்தினால் 776 குடும்பங்களைச் சேர்ந்த 2731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 4 குடியிருப்புக்கள் முழுமையாகவும் 88 குடியிருப்புக்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த 522 குடும்பங்களைச் சேர்ந்த 1851 பேர் 13 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.-Vidivelli