நாரஹேன்பிட்ட அபயாராம விஹாரையின் தலைமைப் பொறுப்பில் இருக்கின்ற முறுத்தொட்டுவே வத்த ஆனந்த தேரர் அண்மையில் விநோதமானதொரு கோரிக்கையை பொதுமக்களிடம் முன்வைத்திருந்தார். அன்றாட செலவுகளைக்கூட ஈட்டிக்கொள்ள முடியாத நிலையில் அரசாங்கம் இருந்து வருகின்றது. முடிந்தளவில் டொலர்களால் உதவி செய்யுமாறு வெளிநாட்டில் வசிப்பவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். அத்துடன் அவர் தாய்லாந்தை உதாரணம் காட்டி, நாட்டில் இப்படியானதொரு நிலை ஏற்பட்டபோது அந்த நாட்டின் அரசர் விடுத்த வேண்டுகோளையேற்று அந்நாட்டின் விகாரைகள் அவைகளுக்கு சொந்தமான சொத்துக்களை அரசுக்கு வழங்கியதாகவும், இந்த இக்கட்டான நிலையில் இலங்கையிலுள்ள பிக்குகளும் தமது விகாரைகளுக்கு சொந்தமானவைகளை அரசாங்கத்துக்கு வழங்குவது பொருத்தமான செயற்பாடகவும் இது தெரிவு செய்துகொண்ட தலைவருக்காக வழங்குகின்ற ஒத்துழைப்பாகவும் அமையும் என்பதாகக் குறிப்பிட்டார்.
இந்தக் கூற்றானது நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமரூடாகத் தெரிவிக்கப்படவில்லை என்ற போதிலும், நாடு தற்போது வங்குரோத்து நிலையை அடைந்திருக்கின்றது என்பதாக தேரரின் கருத்தினூடாகப் புரிந்துகொள்ளலாம். எனது கடந்த கட்டுரையில் கூட இந்த விடயம் தொடர்பாக வேறு ஒரு கோணத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் குறித்து நான் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். “அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தம்மிடம் பொறுப்பளிக்குமாறு கோரியது சாதாரண அளவிலேனும் ஆரோக்கியமான நிலையில் இருக்கின்ற நாட்டையல்ல. மாறாக, அனைத்து துறைகளிலும் வீழ்ச்சிகண்ட நிலையிலுள்ள நாட்டையே அவர்கள் தங்களிடம் பொறுப்பளிக்குமாறு கோரியிருந்தனர்.” அதற்கு முந்தைய வாரம் (டிசம்பர் 06 ஆம் திகதி) கட்டுரையில், “கோத்தாபய ராஜபக் ஷவிடம் கிடைக்கப்பெற்றிருப்பது சிறந்த நிலையிலிருக்கின்ற நாடொன்றல் மாறாக தோல்வியடைந்த நிலையிலிருக்கின்ற நாடொன்றாகும்” என்பதாகக் குறிப்பிட்டிருந்தேன். கட்டமைப்பு ரீதியிலான மாற்றமொன்று ஏற்படுத்தப்படாவிடின் இலங்கை வேகமாக வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும் என்பதாக கடந்த மூன்று வருடங்களாக கூறிவந்திருக்கின்றேன் என்பதனை எனது கட்டுரைகளை தொடராக வாசித்துவருகின்றவர்கள் அறிவார்கள் என நினைக்கின்றேன். இந்த எனது நிலைப்பாடு அண்மைக்காலத்தில் உருவான ஒன்றல்ல, யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட 2009 ஆண்டின் பின்னரான 2010 ஆம் ஆண்டிலே உருவானதாகும்.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி
சுதந்திரம் கிடைக்க முன்னர் அல்லது அதற்குப் பின்னரான காலப்பகுதியில் சாதி, இன, மத பேதங்களுக்கு இடமளிக்காத அடிப்படையில் நவீன சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கை தவறியதன் விளைவாகவே சிங்கள, தமிழ் இளைஞர்கள் ஊடாக வன்முறைகள் இடம்பெற்றன. கடந்த காலங்களில் ஏற்பட்ட சிங்கள, தமிழ் கலவரங்களில் சாதி, இனம், மதம் என்பன செல்வாக்கு செலுத்தும் பிரதான காரணிகளாகக் காணப்பட்டன. முப்பது ஆண்டுகள் அளவு நீண்ட காலமாகத் தொடராக நடைபெற்ற வன்முறைகள் பாரியளவிலான உயிர்களையும் சொத்துக்களையும் இழப்பதற்கு காரணமாக அமைந்தது. இந்த வன்முறைச் சம்பவங்களின் விளைவாக ஏற்பட்ட சமூக, அரசியல், பொருளாதார முறைகளில் உண்டான விகாரத் தன்மையானது கட்டமைப்பு மாற்றம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்படுவது அவசியம் என்பதுடன் அவ்வாறு மேற்கொள்ளப்படாதபோது இலங்கை பாதகமான நிலைக்குத் தள்ளப்படுவது தடுக்க முடியாத ஒன்றாக அமையும் என்பது எனது கருத்தாகும். இந்தக் கருத்தை மக்கள் மயப்படுத்தும் நோக்கில் “இலங்கையை மீட்டெடுத்தல்” என்ற தலைப்பில் 2011 ஆம் ஆண்டு புத்தகமொன்றையும் வெளியிட்டிருந்தேன்.
ராவய பத்திரிகையின் 25 வருடப் பூர்த்திவிழாவின் கருப்பொருளாக இந்தப் பிரச்சினையே எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த நிகழ்வில் அனைத்து சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்களையும் அழைத்து கட்டமைப்பு மாற்றமொன்றுக்கான அவசியப்பாட்டை விளக்க முயன்றபோதிலும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. அதன் பின்னர் கட்டமைப்பு மாற்றமொன்றின் தேவைகுறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்குத் தெளிவுபடுத்த முயற்சித்த போதிலும் அதுவும் பலனளிக்காமல் போனது.
கட்டமைப்பு மாற்றமொன்றுக்கான முயற்சிகள் மேற்கொள்ளாதிருப்பதானது நாட்டை பாரியதொரு பிரச்சினைக்கு தள்ளுவதற்கு காரணமாக அமைந்து ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ தோல்வியடையும் நிலை ஏற்படவும் இது காரணமாக அமையும் என்பதாகக் குறிப்பிட்டிருந்தேன். அது அவ்வாறே இடம்பெற்றது.
நல்லாட்சியின் விகாரமான நிலை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை தோல்வியடையச் செய்வதற்காக வெளியிலிருந்து பொது அபேட்சகர் ஒருவரை பயன்படுத்துவதானது நாட்டின் அரசியல் சார்ந்த பயணத்தில் பாரிய சிக்கலை உருவாக்குவதாக அமையும் என்பதாக குறிப்பிட்டிருந்தேன். பொது அபேட்சகர் என்ற எண்ணக்கரு மாதுலுவாவே சோபித தேரர் மூலமாக உருவாக்கப்பட்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் எதிர்ப்பாளர்களாக இருந்த சிலரினால் மக்கள் மயப்படுத்தப்பட்டது. ரணிலுக்கு அதிகாரம் கிடைப்பதைத் தடுப்பதுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கின்ற பலத்தைப் பயன்படுத்தி மஹிந்தவைத் தோல்வியடையச் செய்வது குறித்த செயற்றிட்டத்தின் மறைந்திருந்த நோக்கமாக காணப்பட்டது. ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கின்ற உரிமை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வசமே காணப்பட்டது. குறித்த கட்சிக்கு வெளியிலிருந்து பொது அபேட்சகர் ஒருவர் போட்டிக்கு கொண்டுவரப்பட்டு அத்தேர்தலில் அவர் வெற்றிபெறுவாரானால் அது ஒரு பாரிய பிரச்சினை உருவாக்குவதாக அமையும் என்பதாக நான் கருதினேன்.
நான் அதுகுறித்து சோபித தேரரிடம் கதைத்திருக்கின்றேன். அது குறித்து கவனமாக செவிமடுத்த சோபித தேரர், திரும்ப முடியாதளவுக்கு குறித்த வேலைத்திட்டம் முன்னோக்கி சென்றிருப்பதாகக் குறிப்பிட்டார். நான் இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருடன் கதைத்திருக்கின்றேன். ஐக்கிய தேசிய முன்னணியிடம் தாம் போட்டியிடுவதாகக் கூறி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறும், ஆரம்பத்தில் குழப்பமான நிலையாக அது உருவெடுத்தலும் வேட்புமனு கொடுக்கும் சந்தர்ப்பம் வரும்போது குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்து ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள முடியும் என்பதாகவும் நான் குறிப்பிட்டேன். விடயம் குறித்து அவரால் புரிந்துகொள்ள முடிந்த போதிலும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குமளவு தன்னம்பிக்கை அவரிடம் இருக்கவில்லை.
மைத்திரிபால சிறிசேன பொது அபேட்சகராவதற்கு சம்மதம் தெரிவித்ததன் பின்னர் அவரது பின்னணியின் அடிப்படையில் அவரை ஒரு கைப்பொம்மையாக பயன்படுத்தலாம் என்பதாக ரணில் நினைத்திருந்ததாகத் தோன்றுகின்றது. எனினும் ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொண்டு ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் கைப்பொம்மையாக செயற்படுவதற்கு மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை. புரிந்துணர்வுடன் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயற்படும் மனநிலை இந்த இருவரிடமும் காணப்படவில்லை. இறுதியில் நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் இருவருமே மக்களின் நகைப்புக்குள்ளாகும் நிலையை அடைந்தார்கள்.
கட்டுக்கோப்பில்லாத பயணம்
ஜனாதிபதி தேர்தல் வெற்றிகொண்டதனைத் தொடர்ந்து தாமதிக்காமல் பாராளுமன்ற தேர்தல் ஒன்றிற்காக சென்றிருப்பின் பாராளுமன்றத்தில் பாரிய பலத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஐ.தே.கவுக்கு இருந்தது. அவ்வாறு செயற்படாமல் மஹிந்த ராஜபக் ஷவுக்கு அதிக ஆதரவிருந்த பாராளுமன்றத்துடன் 100 நாள் வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்காக எத்தனித்து, அதன் நோக்கங்களைக்கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போனது மாத்திரமன்றி, பாராளுமன்ற பலத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் இழந்துகொண்டனர்.
நல்லாட்சியை நியாயப்படுத்தியவர்கள் ஊழல் என்பதற்காக வழங்கிய எண்ணக்கரு நியாயமானதல்ல. பாரியளவில் இடம்பெறும் ஊழல்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியது மஹிந்த ராஜபக் ஷ மூலமாகவல்ல. அது 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியினாலே ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன்பின் வந்த அரசாங்கங்கள் பொதுச் சொத்துக்களை கொள்ளையிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தன. அதன் அடிப்படையில் மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் இந்த நடைமுறையின் அளவில் அதிகரிப்பு ஏற்பட்டதே தவிர அது மஹிந்த ராஜபக் ஷ வின் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.
எனினும், பாரிய அளவிலான ஊழல்கள் மஹிந்த ராஜபக் ஷ காலத்திலேயே ஆரம்பமான ஒன்றாகக் கருதும் போக்கு நல்லாட்சி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. இது மஹிந்த ஆட்சிக்கு எதிரான எண்ணப்பாடு கொண்டவர்களின் மனதில் பாரிய தாக்கம் செலுத்துவதாக அமைந்தன. ஊழல்கள் குறித்து பரிசோனை மேற்கொள்வதை ராஜபக் ஷ காலத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தாமல் அதற்கு முந்தைய காலங்கள் தொடர்பிலும் மேற்கொள்ளப்பட்டிருக்குமானால் அந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பானது சிறந்ததாக அமைந்திருக்கும். நான் முன்னைய காலங்களில் சுட்டிக்காட்டிய விதத்தில் தத்தமது குடும்ப விவகாரங்களுக்காகப் பொதுச் சொத்துக்களைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த செயலாகக் கருதமுடியாது. எனினும், அவ்வாறான தவறுகள் ஜயவர்தன, பிரேமதாச, சந்திரிக்கா போன்ற ஜனாதிபதிகள் மூலமும் நிகழ்ந்திருந்த நிலையில் அவை குறித்து கவனம் செலுத்தாது மஹிந்த ராஜபக் ஷவின் தவறுகளில் மாத்திரம் கவனம் செலுத்துவது நியாயப்படுத்த முடியாத ஒரு விடயமாகும். தவறு செய்திருக்கும் அனைவருக்கும் பொதுவானதாக அமையும் விதத்திலான நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் முறையற்ற விதத்தில் ராஜபக் ஷ விரோதப் போக்கொன்றைக் கடைப்பிடித்ததானது ராஜபக் ஷ மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக ராஜபக் ஷ ஆதரவாளர்களினால் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது.
கோத்தாபயவின் வெற்றி
தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான கட்டமைப்பு மாற்றங்களுக்கான முன்னெடுப்புகளை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளாமலிருந்தது மாத்திரமன்றி இன, மத பேதங்கள் உருவாகுவதற்கான நிகழ்வுகள் தலைதூக்கும்போது அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாமல் ஒதுங்கியிருந்ததது. இது நாட்டில் மத பேதங்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தது. இந்நிலை அரசாங்க ஆதரவாளர்களின் தொகை குறைவடைந்து ராஜபக் ஷ ஆதரவாளர்களின் தொகை அதிகரிக்க காரணமாக அமைந்தது.
நாட்டில் ஒரு பாரிய நிதி நெருக்கடி நிலவுவதை அறிந்த நிலையிலும் தமது வாக்குப் பெட்டிகளை நிரப்பிக்கொள்வதற்காக பல விநோதமான செயற்பாடுகளில் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபட்டது. பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக அரச ஊழியர்களின் சம்பளத்தினை பத்தாயிரம் ரூபாவால் அதிகரித்தது இதற்கான சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம். சம்பளம் அதிகரிப்பதற்கான இயலுமையில்லாத நிலையில் அன்றைய சம்பள அதிகரிப்பின் காரணமாக 160,000 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவிட வேண்டிய நிலை அன்றைய அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. 2016 ஆம் ஆண்டில் அதற்காக ஏற்க வேண்டியேற்பட்ட மேலதிக நிதியின் அளவு 135,489 மில்லியன் ரூபாவாகும். 2017 ஆம் ஆண்டு 140,359 மில்லியன் ரூபாவாகும். நாடு வங்குரோத்து நிலையை நோக்கிச் செல்கின்றது என்பதை தெரிந்த நிலையிலும் அளவில்லாமல் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்று தேவையற்ற விடயங்களுக்காக அரசாங்கம் ஊதாரித்தனமாக செலவிட்டது. உருவாக்கி முடிக்க முடியாமல் போன அரசியல் யாப்புக்காக மேற்கொண்ட செலவு ஜீ. எல். பீரிஸின் கூற்றுக்கிணங்க 13,000 மில்லியன் ரூபாவாகும். வங்குரோத்து நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நாடொன்று விநோதமான அடிப்படையில் தேவையற்ற செலவுகளை மேற்கொண்டு வந்திருக்கின்றது. இது நல்லாட்சி அரசாங்கத்துக்கு மாத்திரம் உரிய நடைமுறையல்ல. 1977 ஆம் ஆண்டு முதல் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் இதுபோன்ற அமைப்பிலேயே செயற்பட்டிருகின்றன. கடன்களை வினைத்திறனாகப் பயன்படுத்திக்கொள்ளும் திட்டங்கள் இருப்பின் கடன்கள் பெற்றுக்கொள்வதில் தவறேதுமில்லை. ஆனால், இலங்கை இதுவரை காலமும் வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொண்ட கடன்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட எந்த திட்டத்திலிருந்தும் குறித்த திட்டத்திற்காக பெறப்பட்ட கடன் தவணையைச் செலுத்துமளவுக்குக் கூட வருமானத்தைப் பெற்றதில்லை. அதிவேக பாதைகளிலிருந்து கிடைக்கின்ற வருமானங்கள் அந்த வீதிகளைப் பராமரிப்பதற்காக மாத்திரமே போதுமானதாக அமைந்திருக்கின்றது.
நல்லாட்சி அரசானது இன, மத பேதங்களை ஏற்படுத்துகின்ற அடிப்படையில் செயற்படாத போதிலும் அவ்வப்போது தோன்றுகின்ற மதப் பிணக்குகளை கட்டுப்படுத்துவதற்கும் திட்டமிட்ட அடிப்படையில் ஏற்படுத்தப்படுகின்ற மதப் பிணக்குகளுடன் தொடர்புடைய உணர்வுகளை தூண்டும் செயற்பாடுகளை உரிய முறையில் முகாமைப்படுத்துவதற்கும் தவறியதானது இலங்கையை மீண்டும் ஓர் இனவாத யுத்தத்துக்கு இழுத்துச் செல்லும் நிலைக்குத் தள்ளுவதாக அமைந்தது என்பதாகக் குறிப்பிட வேண்டும். இங்கு விநோதம் என்னவென்றால், இருப்பு தொடர்பான அச்சம் சிறுபான்மையினரைவிட பெரும்பான்மையினராக இருந்த சிங்களவர்களிடமே அதிகமாக காணப்பட்டது. அவர்களிடமிருந்த இந்த மனநிலையானது இயல்பாகவே அவர்களுக்குள் உருவான ஒன்றல்லாமல் செயற்கையாக உருவாக்கப்பட்டு அவர்களது மனதுகளில் பதிய வைக்கப்பட்டவை என்பதாகவே குறிப்பிடவேண்டும். அவர்களிடமிருந்த இந்த மனநிலை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இன்னும் ஆழமாகப் பதிந்துகொண்டது. கோத்தாபய ராஜபக் ஷவின் பாரிய வெற்றியானது மேலே குறிப்பிடப்பட்ட சமூக, அரசியல், பொருளாதார பின்னணியிலேயே இடம்பெற்றதாகக் குறிப்பிடவேண்டும்.
கோத்தாபய எதிர்கொள்ளவேண்டிய சவால்கள்
கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றியுடன் ஐ.தே.க. உட்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் உறைந்துபோன நிலைக்குள்ளாகியுள்ளன. ஆட்சி மாற்றமேற்பட்டு ஒரு மாதம் கழிந்துவிட்ட போதிலும் அவர்கள் இன்னும் சுய நினைவுக்குத் திரும்பியதாகத் தெரியவில்லை. கோத்தாபயவின் அடுத்தகட்ட நகர்வுகள் எதிர்க்கட்சிகளின் சவால்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலையேற்படலாமென எண்ண முடியாது. எனினும், அவருக்கான வெளியிலிருந்து வரக்கூடிய விதமாக எந்த சவாலும் இல்லாதபோதிலும் உள்ளிருந்தே சவால்கள் விடுக்கப்படலாம். ஜனாதிபதியின் வெற்றிக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவர்கள் என்ற அடிப்படையில் பிக்குகளை அவர் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். பிக்குகளினால் அனுமதிக்கப்படுகின்ற விடயங்களை மாத்திரமே அவரால் செயற்படுத்த முடியுமாக இருக்கும். அத்துடன் பிரதமரான சகோதரரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். நல்லாட்சி காலத்தைப் போன்றே மீண்டும் நாட்டுக்கு இரண்டு தலைவர்கள் உருவாகியிருக்கின்றனர். அவர்களில் முதன்மையானவர் யார் என்பது தெளிவில்லாது காணப்படுகின்றது. ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் போன்றல்லாது இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்ற போதிலும் இவர்களது அபிலாஷைகளில் வேறுபாடுகள் இருக்கமுடியும்.
புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வரும்போது நல்ல நிலையில் அல்லாது தோல்விகண்ட நிலையில் இருக்கும் நாடு தொடர்பான பிரச்சினை புதிய ஜனாதிபதி முகம்கொடுக்கவிருக்கும் மிகப்பாரிய சவாலாக குறிப்பிடலாம். இது இன, மத ரீதியான உச்ச அளவில் பிளவுபட்டிருக்கின்ற நாடாகும். ஊழல்களால் அழுகிப்போன நாடாகும். உற்பத்தி, வியாபாரம் என்பன வீழ்ச்சியடைந்திருக்கின்ற நாடாகும். கடன்படுநிலை அதிகரித்து வங்குரோத்து நிலையை அண்மித்திருக்கின்ற நாடாகும். பெற்றுக்கொண்ட கடன்களுக்காக கடன் தவணையும் வட்டிக் கொடுப்பனவுமாக வருடம் ஒன்றுக்கு 4000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியிருக்கின்றது. இது வருடாந்த வருமானத்தில் 115 சதவீதமாகும்.
பண்டாரநாயக்கவிடம் கற்றுக்கொள்ளல்
இந்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது இலகுவான காரியமல்ல. ஒரு மதத்தை அல்லது இனத்தை மாத்திரம் முன்னுரிமைப்படுத்தி அதிகாரத்திற்கு வரும் ஒரு ஆட்சியாளன் சர்வ மதங்களை அனுசரிக்கும் தலைவன் முகம்கொடுக்கும் பிரச்சினைகளைவிட அதிகளவிலான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டியிருப்பதுடன் அதற்காக அதிகளவிலான சிரத்தை எடுக்க வேண்டியும் இருக்கின்றது. சிங்கள இனம் அல்லது பௌத்த மதம் ஆபத்தொன்றை எதிர்நோக்குகின்றது என்பது போன்ற சிறிய பிரச்சினைகளைவிட நாடு பாரிய பொருளாதார ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது.
1956 ஆம் ஆண்டில் பிரதமர் பண்டாரநாயக்கவினால் முகம் கொடுக்க நேர்ந்த துரதிஷ்டவசமான சில விடயங்கள் ஊடாக நாட்டின் புதிய ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் இந்த நேரத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய சில விடயங்கள் காணப்படுகின்றன.
1956 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க, சிங்கள பௌத்தர்களின் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலமாக ஆட்சிக்கு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவர் ஓர் இனவாதத் தலைவராக அல்லது மதவாதத் தலைவராக இருக்கவில்லை. ஆட்சிக்கு வந்ததன் பிறகு தன்னை ஆட்சி பீடம் ஏற்றிய மதவாத அமைப்புக்களுக்கு கட்டுப்படாது நியாயமான முறையில் நடந்துகொள்வதற்கான இயலுமை தனக்கு கிடைக்கப்பெறும் என்பதாக அவர் நினைத்திருக்கக்கூடும். சிங்களவர்களுக்கு அவர்களது மொழி உரிமையை வழங்கும் போது, வட, கிழக்குப் பிரதேசங்களில் தமிழ் மொழி மூலமாக அவர்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான உரிமையை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கான திட்டம் அவரிடம் காணப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்ட சட்டமூல வரைவுகூட அவரிடம் இருந்தது.
எனினும், அது தொடர்பாக பாராளுமன்றக் குழுக்களுடன் கதைக்கும்போது தமிழ் மொழிக்கு இடமளிக்காது சிங்கள மொழிக்கு மாத்திரம் என்ற கொள்கையை ஆணித்தரமாக முன்வைத்தார். எனவே தன்னிடமிருந்த மொழிக்கொள்கை தொடர்பான சட்டமூலத்தை அவர்களிடம் சமர்ப்பிக்காது பொருத்தமான வரைவொன்றை உருவாக்குவதற்காக செயற்குழுவொன்றை நியமித்தார்.
குறித்த செயற்குழுவின் ஊடாக தமிழ் மொழிக்கு எந்தவிதமான இடமும் வழங்கப்படாத அமைப்பில் எல். எச். மெத்தானந்த உருவாக்கிய மாதிரி மொழிச் சட்டமூலத்தினை சட்டமூலமாக பிரகடனப்படுத்துவதற்குத் தெரிவுசெய்தனர். அதற்கு எதிராக தமிழ் மக்கள் எதிர்ப்பினை தெரிவித்தபோது பண்டாரநாயக்க செல்வநாயகத்துடன் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக்கொண்டார். அதற்கு எதிராக பௌத்த பிக்குகள் தமது எதிர்ப்புகளைத் தெரிவித்தபோது பண்டாரநாயக்க உருவாக்கிய ஒப்பந்தம் அவரால் கிழித்தெறியப்பட்டது. அத்துடன் நாட்டில் முதன் முறையாக பாரியதொரு சிங்கள – தமிழ் கலவரமொன்றும் ஏற்பட்டது. பிரதமர் பண்டாரநாயக்க பெளத்தபிக்கு ஒருவரால் கொல்லப்பட்டதுடன், குறித்த அரசியல் நாடகமானது முடிவுக்கு வந்தது. சுதந்திரத்தின் பின்னர் நடைபெற்ற முதலாவது அரசியல் கொலையாக இது குறிப்பிடப்படுகின்றது. பண்டாரநாயக்கவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக முயற்சிசெய்த பௌத்த பிக்குகளின் அமைப்புக்களில் பிரதான அமைப்பாக கருதப்படுகின்ற ஐக்கிய பிக்குகள் முன்னணியின் அமைப்பாளராக கருதப்படும் களனி ரஜமகா விகாரையின் தலைவரான மாபிடிகம புத்த ரக்கித தேரரே பண்டாரநாயக்கவின் கொலைக்கான பிரதானமானவராகக் கருதப்படுகின்றார்.
இன அல்லது மதவாத அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் ஆட்சிக்கு வருவது இலகுவான விடயமென்ற போதிலும் அவர்களது அழுத்தங்களுக்கு உட்பட்ட அமைப்பில் நாடொன்றை ஆட்சி செய்வது மிகவும் சிரமமான விடயமாகும். நாட்டை தற்போதிருக்கும் நிலையிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமாயின் இலங்கையிலிருக்கின்ற தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காணப்படவேண்டும். சிங்கள பௌத்தரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு தலைவருக்கு அவ்வாறு நம்பிக்கையைப் பெற்றிராத தலைவர் ஒருவரைவிட குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சிங்கள மக்கள் ஏற்கும்விதமாக வழங்க முடிவதாக அமையும். சிங்கள பௌத்த கிளர்ச்சிகளை முறையாக முகாமைப்படுத்திய விதத்திலும், இன, மத அடிப்படையில் பிரச்சினைகளை அணுகாமல் பரந்த பார்வையைச் செலுத்தி நடவடிக்கை எடுப்பதற்கான ஆளுமையும் தைரியமும் குறித்த தலைவரிடம் காணப்படுமாயின் மாத்திரமே இது சாத்தியமானதாக அமையும்.
இவ்வாறானதொரு பிரச் சினையின்போது முழுமையான கட்டமைப்பு மாற்றமொன்றை நோக்காகக் கொண்ட மக்கள் யாப்பு உருவாக்கம் என்பது மாத்திரமே பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கான சிறந்த தெரிவாக அமைய முடியும். அது அரசாங்கத்தை மாத்திரமன்றி அனைத்து அரசியல் கட்சிகள், இனம், மதம், சாதி என்ற பேதங் களின்றி அனைத்து மக்க ளையும் நாட்டை மீட்டெடுப் பதற்காக ஒன்றுசேர்ப்பதாக அமையும்.
நாட்டின் பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசியல் கட்சிகளை மாத்திர மன்றி பொதுமக்களையும் இணைத்துக்கொண்டு செயற் படுவதனால் அதற்காக சர்வ தேச அங்கீகாரத்தினையும் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும்.
தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை கலந்துரையாடி அவற்றைத் தீர்ப்பதற்கான சூழலை அது பெற்றுத்தருவதாக அமையும்.-vidivelli
- விக்டர் ஐவன்