இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு மாதகாலம் கடந்துள்ள நிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இவற்றில் நாடெங்கும் வெற்றுச்சுவர்கள் மற்றும் மதில்களில் சுவரோவியங்கள் தீட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தேர்தல் பிரசார சுவரொட்டிகள், டியூசன் வகுப்புகளுக்கான சுவரொட்டிகள் நிறைந்து கவனிப்பாற்றுக் கிடந்த பொதுச்சுவர்கள், மதில்கள் மற்றும் மதத் தலங்களுக்குச் சொந்தமான சுவர்கள் இன்று புதுப்பொலிவு பெற்றுள்ளன. சுவர்களிலும் மதில்களிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ள அதே நேரம் எதிர்ப்பினையும் பெற்றுக்கொண்டுள்ளன.
”புதிய மாற்றங்கள் கண்களைக் கவர்கின்றன. சுவர் ஓவியங்களை நான் பயணம் மேற்கொண்ட ஏனைய நாடுகளிலும் கண்டுகளித்திருக்கிறேன். இந்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானதாகும். நாங்கள் இலங்கையின் வரலாற்றையும் கலாசாரத்தையும் காணவேண்டும். நான் இலங்கையில் மேலும் பல ஓவியங்களை எதிர்காலத்தில் காணுவதற்கு விரும்புகிறேன்” என கிரீஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த உல்லாசப் பயணி இல்யாஸ் தெரிவித்திருக்கிறார்.
நாடெங்குமுள்ள வெற்றுச்சுவர்களிலும் மதில்களிலும் அவ்வப் பிரதேச அமைப்புகளினாலும் மக்களினாலும் இந்த சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. பல்வேறு சுவரொட்டிகளைத் தாங்கி அவலட்சணமாகக் காட்சி தரும் சுவர்கள் மெருகூட்டப் பட்டு சித்திரங்கள் தீட்டப்படுவது வரவேற்கத்தக்கதாகும்.
என்றாலும் மதத் தலங்கள் குறிப்பாக பள்ளிவாசல்களின் மதில்களில் உருவப்படங்கள் தீட்டப்படுவதே இன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்கள் பள்ளிவாசல் சுவர்களிலும் மதில்களிலும் சித்திரங்கள் வரையப்படுவதை ஒருபோதும் எதிர்க்கவில்லை. நாடும் நாட்டிலுள்ள வெற்றுச்சுவர்களும் புதுப்பொலிவு பெறுவதில் பங்குதாரர்களாக இருப்பதற்கே அவர்கள் விரும்புகிறார்கள்.
ரதாவடுன்ன பள்ளிவாசல் மதிலில் வரையப்பட்ட சித்திரங்கள்
கொழும்பு– கண்டி வீதியோரத்தில் வேவல்தெனிய, ரதாவடுன்னயில் அமைந்துள்ள பள்ளிவாசலுடன் இணைந்துள்ள மதிலில் சில தினங்களுக்கு முன்பு சித்திரங்கள் வரையப்பட்டன. சித்திரங்கள் வரைவதற்கு வருகை தந்த பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் ரதாவடுன்ன சபீலுல் ஹுதா பள்ளிவாசல் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுக்கொண்ட பின்பே சித்திரங்களை வரைந்தனர். பள்ளிவாசல் சுவரில் உருவப்படங்கள் காட்சிப்படுத்தப்படுவதற்கு சமயத்தில் அனுமதியில்லை. அதனால் உருவப்படங்கள் வரையவேண்டாம் எனக் கூறியே பள்ளிவாசல் நிர்வாகம் அனுமதி வழங்கியது என்றாலும் உருவப்படங்களுடனான சித்திரங்களும் தீட்டப்பட்டுள்ளன.
இச் சம்பவம் சிவில் சமூக அமைப்புக்களால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ, பிரதமரும் கலாசார அமைச்சருமான மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ வின் ஆலோசகர் நகீப் மெளலானா இவ்விவகாரம் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பிரதமரின் கீழ் இயங்கும் கலாசார அமைச்சின் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
இதனையடுத்து சுவர் ஓவியங்கள் வரையப்படும்போது மதத் தலங்களின் நிர்வாக சபையின் அனுமதிபெற்று அவர்களின் ஆலோசனைக்கமையவே செயற்பட வேண்டும் என கலாசார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான அறிவுறுத்தல்கள் விரைவில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக நகீப் மெளலானா தெரிவித்தார்.
ரதாவடுன்ன சபீலுல் ஹுதா பள்ளிவாசல் தலைவர் இவ்விவகாரம் தொடர்பில்,
ரதாவடுன்ன சபீலுல் ஹுதா பள்ளிவாசலின் நிர்வாக சபைத்தலைவர் எம்.வை.எம். ராஸீக் விளக்கமளிக்கையில்;
‘பள்ளிவாசல் சுவரில் சித்திரங்கள் வரைவதற்கு நிர்வாகசபை அனுமதி வழங்கியிருந்தது‘ என்றார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
வரையப்பட்டுள்ள சித்திரங்களில் ஒன்று இன ஒற்றுமையை வலியுறுத்தியும் வரையப்பட்டுள்ளது. உருவப்படங்கள் வரையப்பட்டுள்ளமையை நாம் பெரிதுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை. இப் பிரச்சினையினால் ஒற்றுமையாக இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் எமக்குமிடையில் முரண்பாடுகள் உருவாகுவதை நாம் விரும்பவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து எமது பள்ளிவாசல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. ஆனால் எம்மோடு ஒற்றுமையாக வாழும் பெரும்பான்மை மக்களே அதைத் திருத்தித் தந்தார்கள். எமக்குத் தேவையான பல உதவிகள் அம்மக்களால் கிடைத்துள்ளன.
எமது மதிற் சுவரில் உருவப்படங்கள் வரைந்துள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிடும் எம்மவர்கள் எமது பள்ளிவாசலின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன் வருவதில்லை. வுளூ செய்வதற்கு எமக்கு ஹவுழ் இல்லை. இப்பகுதியில் நாம் சிறு தொகையினரே வாழ்கிறோம் என்றார். பள்ளிவாசல் சுவர்களில், மதில்களில் சுவர் ஓவியங்கள் வரைவதை நாம் எதிர்க்க வில்லை. உருவப்படங்கள் அல்லாது பொதுவான மக்களுக்கு விழிப்புணர் வினை ஊட்டக்கூடிய ஓவியங்களே வரையப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்றார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
வெற்றுச்சுவர்களில் ஓவியம் வரைவது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முஸ்லிம்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளது. வெற்றுச்சுவர்களை அலங்கரித்து ஓவியங்கள் வரையும்போது முஸ்லிம்கள் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி நடந்துகொள்ளுமாறு உலமாசபை வேண்டுகோள் விடுத்துள்ளது. சுவர் ஒவியங்கள் வரையும்போது உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரியுள்ளது. ஜம்இய்யத்துல் உலமா சபையின் கிளைகளும் பள்ளிவாசல் நிர்வாகங்களும் ஊர்த்தலைவர்களும் இவ்விவகாரத்தில் கரிசனை கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் ஜனாதிபதி உட்பட பலரது பாராட்டுகளுக்கு மத்தியில் நாட்டில் ஆங்காங்கே காணப்படும் வெற்றுச்சுவர்களை அலங்கரிக்கும் பணிகளை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் உட்பட தனிநபர்களும் ஒன்றிணைந்து திட்டமிட்ட அடிப்படையில் சித்திரங்களை வரைந்து மெருகூட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான செயற்றிட்டங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வரவேற்கிறது. இச் சித்திர வேலைப்பாடுகள் நாட்டின் அபிவிருத்தி, நன்நடத்தைக்கான வழிகாட்டல்கள் போன்ற விடயங்களை உள்ளடக்கும் வகையில் அமைவதே இன்றைய தேவையாகும்.
நம் நாட்டு ஓவியர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்துவதில் சகல இன மக்களும் ஒத்துழைப்பதன் மூலம் நம்நாட்டில் ஒரு சுபீட்சமான எதிர்காலத்தைக் கண்டுகொள்ள முடியும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்று அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி
நகரத்தை அழகுபடுத்துவதென்ற போர்வையில் பள்ளிவாசல் மதில்களில் உருவப் படங்களை வரைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்லாமிய கலாசாரத்துக்கு இது விரோதமானதாகும். அதனால் ஜனாதிபதி இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசல் மதில்களில் சித்திரங்கள் வரைவதை அசாத் சாலி எதிர்க்கவில்லை. நகர்ப்புற மதில்கள் சுவரொட்டிகள் நிறைந்து அவலட்சணமாகக் காணப்படுகின்றன. நகரங்களை அழகுபடுத்தும் நோக்கில் வீதியோரங்களின் மதில்கள் மற்றும் மேம்பாடல்களின் சுவர்களில் இளைஞர்கள் சித்திரங்களை வரைந்து வருகின்றனர். இதுவரவேற்கத்தக்கது.
ஆனால், சித்திரம் வரைவதென்ற பெயரில் பள்ளிவாசல்களின் மதில்களில் உருவப்படங்களை வரைவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இஸ்லாமிய கலாசாரத்தின் பிரகாரம் உருவப்படங்கள் வரைவதில்லை. முஸ்லிம்கள் வீடுகளிலும் உருவப் படங்களை வைத்துக்கொள்வதில்லை. இது மார்க்கத்தின் வழிமுறையாகும். இதற்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும்.
ஆனால், சில தினங்களுக்கு முன்னர் ரதாவடுன்ன பள்ளிவாசல் மதிலில் இவ்வாறு உருவப்படங்கள் வரையப்பட்டுள்ளன. அந்தப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வாழ்கின்றனர். அதனால் இதற்கு அவர்களால் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவிக்க முடியாமற் போயுள்ளது. அவர்கள் அச்சத்திலே இருந்துள்ளனர். இவ்வாறு பள்ளிவாசல் மதில்களில் உருவப்படங்கள் வரைய முடியாது என்பதைச் சுட்டிக்காட்டி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தவேண்டுமெனக் கோரியிருக்கிறேன். ஜனாதிபதி சிறுபான்மை மக்கள் மீதான இனவாத பிரசாரங்களுக்கும் இவ்வாறான செயற்பாடுகளுக்கும் தடைவிதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சமூகத்தினதும் கோரிக்கையாகும்.
உலமா சபையின் தெளிவான அறிவுறுத்தல்கள் தேவை
வெற்றுச் சுவர்களில் ஓவியம் வரையும் போது இஸ்லாமிய வரையறைகள் பேணப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் வெற்றுப் பள்ளிவாசல் மதில்களிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களிலும் நகர்ப்புறங்களிலும் முஸ்லிம்களே ஒன்றிணைந்து ஓவிங்களை வரைவதற்கான அறிவுறுத்தல்களை அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை வழங்கவேண்டும்.
ஏனைய சமூகத்தினர் எமது பள்ளிவாசல் மதில்களிலும் ஊர்களின் வெற்றுச் சுவர்களிலும் ஓவியங்களை வரைவதற்கு முன்வருவதற்கு முன்பு நாங்கள் முந்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு முந்திக்கொண்டால் எமது கலாசாரம் மற்றும் நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் வகையிலான ஓவியங்களை எம்மால் வரைந்து கொள்ளமுடியும். ரதாவடுன்ன பகுதி முஸ்லிம்கள் பள்ளிவாசல் மதிலை சுத்தம்செய்து ஓவியம் வரைந்துகொள்வதற்கு தாமதித்ததனாலேயே மாற்று இனத்தவரால் அங்கு உருவப்படங்கள் வரையப்பட்டிருக்கின்றன. இந்த நிலைமையை இலங்கையெங்கும் உள்ள பள்ளிவாசல்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெளிவுபடுத்த வேண்டும். இது விடயத்தில் நாம் தாமதிக்கக்கூடாது. எமது ஊர், எமது பள்ளிவாசல் மதில்கள் எம்கரங்களினாலேயே தீட்டப்படவேண்டும்.
இந்தவகையில் யாழ்ப்பாண தமிழ் சகோதரர்கள் திட்டமிட்டு செயற்பட்டுவருவது பாராட்டத்தக்கதாகும். யாழ்ப்பாணத்தின் பொதுமதில்கள், பொதுச்சுவர்கள் அம்மக்களாலே அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. அவர்களது வரலாறு, கலை, கலாசார பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையிலான சித்திரங்கள் அங்கு வரையப்பட்டுள்ளன.
அரசாங்கம் முனனெடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு நாம் ஒத்துழைக்கவேண்டும். திட்டங்களை விமர்சித்துக்கொண்டிருந்தால் நாமே தோல்விகளை எதிர்நோக்க வேண்டியேற்படும்.
சுவரோவியங்கள் மக்களுடன் உரையாடுகின்றன
சுவரோவியங்கள் எமது நாட்டுக்குப் புதியவை அல்ல. வரலாற்றுப் புகழ்மிக்க சீகிரிய சுவரோவியங்கள் பல நூற்றாண்டு காலத்துக்குரியவை என்றாலும் இன்னும் அவை எம்முடன் உரையாடுகின்றன. எமக்கு எமது நாட்டின் வரலாற்றினைச் சொல்கின்றன. இதனை எவராலும மறுக்கமுடியாது. எமது நாட்டில் மாத்திரமல்ல லண்டன், பாரிஸ், ரோம் உட்பட பல நாடுகளில் சுவரோவியங்கள் மக்களை ஈர்க்கின்றன.
எமது நாட்டின் சீகிரிய ஓவியங்களைப் பார்வையிடுவதற்காக உலக நாடுகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.
ஆர்ட் வே களரி (Artway Gallery) நிர்வாகப் பணிப்பாளர்
ஆர்ட்வே களரியின் நிர்வாகப் பணிப்பாளர் சுதத் அபேசேகர ஓவியங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்;
இலங்கையின் தேசிய கலை காட்சிக் கூடம் கடந்த 5 வருட காலமாக மூடப் பட்டுள்ளது. நவீன சித்திரங்களைப் பார்வையிடுவதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் இல்லை. இலங்கையின் ஓவியங்களின் வரலாற்றினை மக்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள். இன்று எமது நாட்டுக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். ஓவியங்களும் சுற்றுலாத் துறையும் பின்னிப் பிணைந்துள்ளதாகவே நான் கருதுகிறேன். நாங்கள் ஹோட்டல் ஒன்றுக்குச் சென்றால் ஹோட்டல் சுவர்களில் சில ஓவியங்கள் தொங்கவிடப்பட்டிருப்பதை நாம் காணுகிறோம். ஹோட்டல் அறைகளினுள்ளும் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எமது நாட்டில் ஓவியங்கள் வரையப்படுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் ஓவியங்கள் வரையப்படுவதற்கென்று சில விதிமுறைகள் இருக்கவேண்டும். சிலர் மின் கம்பங்களில் ஓவியம் வரைந்தால் அது நல்லதல்ல. பாதுகாப்பு எப்போதும் முதன்நிலை பெறவேண்டும்.
தற்போது ஓவியங்கள் வரையப்படுவது அவதானம் மிக்கதாகும். மக்கள் சிலவேளை விரும்பாமல் இருக்கலாம். என்றாலும் இந்தத் திட்டம் தொடர்ந்தால் எதிர்காலத்தில் அனைவரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என்றார்.
நகர திட்டமிடல் நிறுவனத்தின் தலைவர்
எந்தவொரு செயற்பாடும் ஓர் எல்லையை மீறி செய்யப்பட்டால் அதற்கு மதிப்பு இல்லாமற் போகும். தற்போது நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. அது மக்களுக்கு சலிப்பை ஏற்பத்திவிடும் என நகர திட்டமிடல் நிறுவனத்தின் தலைவர் ஜகத் முனசிங்க தெரிவித்துள்ளார்.
‘மதில்கள், சுவர்கள் அழகுபடுத்தப்பட்டு ஓவியங்கள் வரையப்படுவதன் மூலம் சுற்றாடல் ரம்மியமானதாகி விடுகிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். சூழலியலாளர்கள் இதனை வரவேற்பார்கள் என்றாலும் சில விடயங்களை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
எந்தவொரு செயலலையும் நாம் வரையறையின்றி செய்தால் அதற்கு மதிப்பு இருப்பதில்லை.
நாடெங்கும் ஓவியம் வரையப்படுகிறது. இது மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடும். அதனால் சில குறிப்பிட்ட பகுதிகளில மாத்திரமே ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அத்தோடு இந்த வரையப்பட்ட ஓவியங்களை எந்த நிறுவனம் பராமரிக்கும்? எவ்வாறு பராமரிப்புச் செய்யும்? என்ற கேள்விகளும் எழுகின்றன.
அத்தோடு எவ்வகையான ஓவியங்கள் வரையப்படவேண்டும் என்ற வரையறையும் தேவை. சில வேளைகளில் வரையப்படும் ஓவியங்களால் சாரதிகள் ஈர்க்கப்பட்டு விபத்துகள் போன்றன ஏற்படலாம். எனவே ஓவியங்கள் குறிப்பிட்ட தரத்தில் அமைய வேண்டும் என முனசிங்க தெரிவித்துள்ளார். சுவர், மதில் ஓவியங்கள் தொடர்பில் பொது மக்கள் சிலர் இவ்வாறு
கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
சிசிர அழகக்கோன் வர்த்தகர்– தம்புள்ளை
மதில்கள், சுவர்கள் அழகுபடுத்தப்பட்டு ஓவியங்கள் வரையப்படுவது மிகவும் சிறந்த திட்டமாகும். தம்புள்ளையைச் சேர்ந்த இளைஞர்கள் மதில்களில் ஓவியங்கள் வரைந்துள்ளார்கள். வரலாற்றுச் சம்பவங்கள் மற்றும் கலாசார நிகழ்வுகள் வரையப்பட்டுள்ளன. இந்த ஏற்பாட்டினை அனைவரும் பாராட்டுகிறார்கள். ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். எங்கள் நகரம் அழகாக மாறியுள்ளது. இதில் அரசியல் பின்னணியில்லை. அனைத்து கட்சிகளைச் சேர்ந்தோரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறார்கள் என தம்புள்ளையை சேர்ந்த வர்த்தகர் சிசிர அழகக்கோன் தெரிவித்தார்.
எஸ். விதூர்சன் மட்டக்களப்பு
மட்டக்களப்பைச் சேர்ந்த எஸ். விதூசன் தெரிவிக்கையில்;நான் எந்த ஒரு சித்திரத்தையும் பிரதி பண்ணி வரையவில்லை. எனது சொந்த சித்திரங்களே வரையப்பட்டன. இந்தப் பணியில் ஈடுபட எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தமை தொடர்பில் மகிழ்கிறேன் என்றார்.
பாராட்டுகள்
ஜனாதிபதி கோத்தாபயவின் எண்ணக் கருவுக்கு அமைய மேற்கொள்ளப்படும் நாட்டை அழகுபடுத்தும் திட்டம் வரவேற்கத்தக்கது. சுவர் மற்றும் மதில் ஓவியங்கள் அப்பிரதேச மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளால் அவர்களது சொந்த செலவிலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வரையப்படும் சித்திரங்கள் அரச தரப்பினால் அல்லது அரச நிறுவனங்களினால் அவதானிக்கப்படவேண்டும். ஓவியங்கள் வரையப்படுவதை காரணம் காட்டி இனங்களுக்குள் விரிசல்கள் ஏற்பட்டு விடக்கூடாது.
ரதாவடுன்ன பள்ளிவாசல் மதிலில் உருவப்படங்கள் வரையப்பட்டு விட்டாலும் ஏனைய பள்ளிவாசல் மதில்களில் அவ்வாறு இடம்பெறாதிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரதாவடுன்ன பள்ளிவாசல் நிர்வாகம் வரையபப்ட்டுள்ள உருவப்பட ஒவியங்கள் அழிக்கப்பட்டு வேறு ஓவியம் வரையப்பட வேண்டும் என்று கோரவில்லை.
பள்ளிவாசல் மதிலில் அந்த ஓவியங்கள் அப்படியே நிலை பெறுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
முஸ்லிம்கள் உருவப்படங்களை காரணம் காட்டி முறுகல் நிலை உருவாகுவதை விரும்பாதவர்கள் என்பதை பெரும்பான்மை சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பொறுமை காக்கும் ரதாவடுன்ன பள்ளிவாசல் நிர்வாகத்துக்குப் பாராட்டுக்கள்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்