அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை, பகைவனுமில்லை. இதற்கேற்ப திடீர் திருப்பு முனைகள் அரசியலில் ஏற்படுவது வழமையாகும். அந்த அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட திடீர் திருப்பு முனையே முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜாதிக ஹெல உருமயவின் செயலாளருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கைதாகும்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் ஊடாக மஹிந்த ராஜபக் ஷவின் 10 வருட ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் குறித்த ஆட்சியில் முக்கிய புள்ளிகளாக காணப்பட்ட பசில் ராஜபக் ஷ, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக் ஷ யோசித ராஜபக் ஷ உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதுபோலவே கடந்த நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றியினை அடுத்து மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்களான றிசாத் பதியுதீன், ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரவலாக பேசப்பட்டன. இந்த நிலையில் எவரும் எதிர்பாராத வகையில், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரான பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளமை அரசியல் அரங்கில் மிகுந்த பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளது.
யார் இந்த சம்பிக்க?
1965 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள பிரதேசத்தில் பிறந்த இவர், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியினை அடுத்து ஹொரண தக்சிலா கல்லூரியில் அனுமதி பெற்று உயர் தரம் வரை அங்கு கல்வி கற்றார்.
கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் களுத்துறை மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறைக்குள் நுழைந்த சம்பிக்க ரணவக்க, அங்கிருந்து மின் பொறியியலாளராக வெளியேறினார்.
பல்கலைக்கழக காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய செயற்பாட்டாளராக செயற்பட்ட இவர், பல தடவைகள் சிறை சென்றுள்ளார்.
1993ஆம் ஆண்டு காலப் பகுதியில் அதுரலிய ரதன தேரருடன் இணைந்து ஜனதா மிதுரு எனும் அமைப்பொன்றினை உருவாக்கி நேரடி அரசியலில் நுழைந்தார்.
1998 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சிஹல உறுமய கட்சியில் இணைந்து அதன் முக்கிய செயற்பாட்டாளராக இயங்கினார். பின்னர் அக்கட்சியினை பௌத்த தேரர்களின் கட்சியாக மாற்றும் நடவடிக்கையினை இவரே தலைமையேற்று செயற்பட்டு அதில் வெற்றியுமடைந்தார். இதனால் அக்கட்சியின் பெயர் ஜாதிக ஹெல உறுமய என மாற்றப்பட்டதை தொடர்ந்து அக்கட்சியின் ஸ்தாபகர்கள் பலர் ஓரமாக்கப்பட்டனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் பௌத்த தேரர்களை களமிறக்கி ஒன்பது ஆசனங்களை இக்கட்சி கைப்பற்றியது. பௌத்த தேரர்களை நேரடி அரசியலுக்குள் உட்படுத்திய கட்சி என்ற பெருமை ஜாதிக ஹெல உறுமயவையே சாரும். இதில் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவே பிரதான பங்காற்றினார்.
இந்த தேர்தலில் தமிழ் மக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் கடுமையாக விமர்சனம் செய்தே சிங்கள மக்களின் ஆதரவினை இந்த கட்சி பெற்றது. அது மாத்திரமல்லாமல் சுயலாப அரசியல் நலனினை கருத்திற் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை பௌத்த தேரர்கள் தலைமையில் இந்த கட்சி நாடளாவிய ரீதியில் முன்னெடுத்திருந்தது.
கடந்த 2005ஆம் மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆதரவு வழங்கி அவரை இக்கட்சி வெற்றி பெறச் செய்தது.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் ஜாதிக ஹெல உறுமயவிற்கு அமைச்சர் பதவியொன்றும் வழங்க தீர்மானிக்கப்பட்டது. குறித்த பதவியினை சம்பிக்க ரணவக்கவிற்கு வழங்குவதற்காக அக்காலப் பகுதியில் இந்த கட்சியின் தலைவராக செயற்பட்ட ஓமல்பே சோபித தேரர் தனது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இவருக்காக இராஜினாமாச் செய்து விட்டுக்கொடுத்தார்.
இதனையடுத்து 2007ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகவும் சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சராக சம்பிக்க நியமிக்கப்பட்டார். கடந்த 2010ஆம் மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய இவர், பல்வேறு அமைச்சு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
2015 ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜாதிக ஹெல உறுமய ஆதரவளித்தது. இதனையடுத்து மைத்திரியின் வெற்றிக்குப் பின்னர் இவர் தொடர்ச்சியாக அமைச்சுப் பதவிகளை வகித்து வந்தார்.
சம்பிக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டு
கடந்த 2016 பெப்ரவரி 28ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டேயிலுள்ள பாராளுமன்ற வீதியில் ஜீப் வாகனமொன்றும் 1,000 சீ.சீ. மோட்டர் சைக்கிளொன்றும் மோதியுள்ளன. குறித்த ஜீப்பினை அக்காலப் பகுதியில் பெரு நகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட பாட்டலி சம்பிக்க ரணவக்கவே செலுத்திச் சென்றுள்ளார். எனினும், பெரு நகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் சாரதியொருவரே குறித்த வாகனத்தினை செலுத்தியதாக முன்வந்து குற்றத்தினை பொலிஸில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இருந்தபோதிலும் பெரு நகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சிற்கு சொந்தமான குறித்த வானத்தினை பாட்டலி சம்பிக்க ரணவக்கவே செலுத்தியதாக நேரில் கண்ட இரு சாட்சிகள் தனித் தனியாக இரு சத்தியக் கடதாசிகளை பொலிஸ் தலைமையகத்திற்கு அக்காலப் பகுதியில் வழங்கியிருந்தனர்.
எவ்வாறாயினும் குறித்த விபத்து தன்னால் மேற்கொள்ளப்படவில்லை என சம்பிக்க ரணவக்க நிராகரித்ததுடன் இந்த விபத்து தொடர்பான பொலிஸ் விசாரணைகளின் போது எந்தவித அழுத்தமும் பிரயோகிக்கவில்லை என்றார்.
அக்காலப்பகுதியில் இந்த விபத்து பாரிய சர்ச்சையொன்றினை தோற்றுவித்திருந்ததுடன் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்திற்கும் உட்பட்டிருந்தது.
இந்த விபத்தில் சிக்குண்ட கொடகம பிரதேசத்தினைச் சேர்ந்த சந்தீப் சம்பத் தற்போது நிரந்தரமாக ஊனமுற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை சுமார் மூன்றரை வருடங்கள் கழிந்த நிலையில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மீண்டும் ஆரம்பித்துள்ளதுடன் விசேட அறிக்கையொன்றினையும் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.
இதனால் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளிநாடு செல்வதற்கு கடந்த 13ஆம் திகதி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு எதிராக தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் விசேட மனுவொன்றினை அவர் கடந்த 16 ஆம் திகதி திங்கட்கிழமை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் சந்தேக நபர்களாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவோ அல்லது அவரின் சாரதியோ குறிப்பிடப்படாத நிலையில் சாரதியின் தாய், மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்பிக்க ரணவக்கவின் சட்டத்தரணிகள் மன்றில் குற்றம்சாட்டினர். எனினும் இதனை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் நிராகரித்திருந்தனர்.
தண்டனைச் சட்டக் கோவையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் ஊடாக இந்த மனு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நிரஞ்சலா டி சில்வா உத்தரவிட்டிருந்தார்.
மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு
இந்த நிலையில் தான் கைது செய்யப்படலாம் என்ற தோற்றப்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க நேற்று முன்தினம் புதன்கிழமை கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்த மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகாநாயக்க தேரர்களை சந்தித்து வாகன விபத்து தொடர்பில் தெளிவுபடுத்தினார். அரசியலிலிருந்து தன்னை ஓரங்கட்டும் முயற்சியாகவே இந்த போலிக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் இந்த சந்திப்புக்களின் போது குறிப்பிட்டார்.
கைது
இந்த நிலையில் குறித்த வாகன விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவினை கைது செய்து நீதின்றில் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் கொழும்புக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 18 ஆம் திகதி அறிவுறுத்தியிருந்தார். இதனால் குறித்த தினமான புதன்கிழமை பி.ப 7.05 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க அவரது இல்லத்தில் வைத்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவர் தெமட்டகொடயிலுள்ள கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்து வரப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நேற்று வியாழக்கிழமை காலை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
மீண்டும் நேற்று வியாழக்கிழமை மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரின் பிணை மனு நிராகரிக்கப்பட்டதோடு எதிர்வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
கைதுக்கு எதிர்ப்பு
இவரின் கைதினை அடுத்து சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்து சம்பிக்க ரணவக்கவின் கைதுக்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க சம்பிக்க ரணவக்கவின் இல்லத்திற்கு சென்று அவரின் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடியதுடன் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை தொடர்பில் ஆலோசனைகளையும் வழங்கினார்.
சம்பிக்க ரணவக்க கைது செய்யப்படும் போது இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதான அவருடன் வீட்டில் இருந்ததுடன் கைதுக்கு எதிர்ப்பினை வெளியிட்டார். அது போன்று, இந்த கைது தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்கப்படவில்லை. இதனால் சம்பிக்க ரணவக்கவினை கைது செய்ய முடியாது என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்து எதிர்ப்பு வெளியிட்டார். எவ்வாறாயினும் சம்பிக்க ரணவக்க கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கைது சொல்லவரும் செய்தி என்ன?
கடந்த அரசில் ஊழல் புரிந்த பலர் இருக்கையில் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன என்ற கேள்வி தற்போது நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சஜித் பிரேமதாச, ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை. ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளினால் சுமார் 280 கோடி கடன் நெருக்கடிக்குள் அவர் தள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்திருந்தார். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதென்றால் கட்சியின் தலைமை பதவி வழங்கப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இதனால், ஐக்கிய தேசிய கட்சிக்குள் இன்று பாரிய நெருக்கடி தோன்றியுள்ளது. அக்கட்சி பல்வேறு சவால்களை எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
கடந்த 1994ஆம் ஆண்டு முதல் பல தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய இளம் தலைமைத்துவமொன்று தேவைப்படுகின்றது. அதற்காகவே சஜித் பிரேமதாச, பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ஐக்கிய தேசிய கட்யின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவின் பூரண ஆதரவின்றியும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்பட்டார். எனினும் குறித்த தேர்தலில் அவர் தோல்வியடைந்ததை அடுத்து சிங்கள பௌத்த மக்களின் ஆதரவினை பெற்ற ஒருவரை ஐக்கிய தேசிய கட்சி தேடுகிறது. அதற்கு பொருத்தமான ஒருவர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவே என்பதனை அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார்.
இதனால் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவின் வெளியேற்றத்தினை அடுத்து வெற்றிடமாகவுள்ள சிங்கள பௌத்த வாக்குகளைக் கொண்ட மகரகம தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளராக சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நியமனத்தினால் சிங்கள பௌத்த வாக்குகளின் மூலம் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கோத்தாபய ராஜபக் ஷவுக்கு எதிராக போராட முடியும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய தேசிய கட்சியினர் உள்ளனர்.
ஜனாதிபதி கனவு
இலங்கையில் 2020ஆம் ஆண்டில் சிங்கள பௌத்த வாக்குகளுடன் நாட்டின் ஜனாதிபதியாக தான் வர வேண்டும் என்ற கனவிலேயே சம்பிக்க ரணவக்க தனது அரசியல் காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வந்தார்.
இதற்காக அவர் கையில் எடுத்த ஆயுதமே இஸ்லாமிய பயங்கரவாதமாகும். இதனை முன்வைத்து கடந்த பல வருடங்களுக்கு முன்னரே இலங்கை முஸ்லிம்களை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். அது மாத்திரமல்லாமல் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான துவேச பிரசாரத்தினை முதலில் முன்னெடுத்தவர் இவரே.
‘அல் – ஜிஹாத் அல் – கைதா‘ எனும் நூலை கடந்த 2003ஆம் ஆண்டு இவர் வெளியிட்டார். அது போன்று கிழக்கு மாகாண முஸ்லிம்களினால் சிங்கள பாரம்பரியம் அழிக்கப்படுவதாக தெரிவித்தும் நூலொன்றினை இவர் வெளியிட்டார். தர்கா நகர் கலவரத்தின் பின்னணியில் இவரே செயற்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் பலம் பெருந்திய அமைச்சராக செயற்பட்ட இவர், முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களினை முன்வைத்து பௌத்த – சிங்கள மக்கள் மத்தியில் நன்மதிப்பினை பெற்றார். எனினும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு இவர் ஆதரவளிக்க தொடங்கியதை அடுத்து பௌத்த – சிங்கள மக்கள் மத்தியில் இவருக்கு காணப்பட்ட நன்மதிப்பு குறைவடைந்தது. எனினும் தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து சிங்கள மக்கள் மத்தியில் இவரின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக நேற்று முன்தினம் இரவு நீதிமன்றுக்கு அருகில் பெரும்பாலான பெளத்த பிக்குகளும் பொது மக்களுக்கும் ஒன்றுதிரண்டு சம்பிக்க ரணவக்கவின் கைதுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சிங்கள பெளத்த தலைவர் ஒருவருக்கு எதிரான இந்த நடவடிக்கை தம்மை ஆத்திரமூட்டியுள்ளதாக பிக்குகள் சிலர் பகிரங்கமாகவே கருத்து வெளியிட்டனர். ”நாமே வாக்களித்து கோத்தாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினோம். ஆனால் அவர் இன்று சிங்கள பெளத்த தலைவர் ஒருவரையே சிறைக்குள் தள்ளியுள்ளார். இந் நிலை தொடர்ந்தால் நாம் ஜனாதிபதிக்கு எதிராக வீதியில் இறங்க வேண்டிவரும்” என இதன்போது இளம் பெளத்த பிக்கு ஒருவர் ஊடகங்களுக்கு ஆக்ரோஷமாக கருத்து வெளியிட்டார்.
இந்தக் கைது ஒரு வகையில் சம்பிக்க ரணவக்கவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபத்தையும் ஆதரவையும் தேடிக் கொடுத்துள்ளது என்பதையும் அவதானிக்க முடிகிறது.
முஸ்லிம்கள் உட்பட நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் கடந்த பல தசாப்த காலமாக ஐக்கிய தேசிய கட்சியினை ஆதரித்து வருகின்ற நிலையில் சிங்கள – பௌத்த கோட்பாட்டினை கொண்ட சம்பிக்க ரணவக்க அக்கட்சியின் தலைமைத்துவத்தினை பொறுப்பேற்றால் அல்லது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்பட்டால் அக் கட்சியினால் சிறுபான்மையினரின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே.
2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இந்த நாட்டில் சிங்கள பெளத்த பெரும்பான்மையினரைத் திருப்திப்படுத்தக் கூடிய தலைவர் ஒருவரே ஜனாதிபதியாக வரலாம் என்கின்ற அரசியல் சூத்திரம் நிறுவப்பட்டிருக்கின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியும் அதனை நோக்கியே தள்ளப்பட்டிருக்கின்றது. இந்த சவாலை எதிர்கொள்ள அக் கட்சிக்கு இப்போதுள்ள தெரிவு சம்பிக்க மாத்திரமே. அதனால்தான் சம்பிக்க ரணவக்கவை சிறையில் தள்ளி அவரை அடுத்த தேர்தலில் போட்டியிடச் செய்ய முடியாதவாறு சட்ட ரீதியாக தடைகளை ஏற்படுத்துவதற்கான காய்நகர்த்தலை பொது ஜன பெரமுன இப்போதே ஆரம்பித்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எதிர்வரும் காலங்களில் மேலும் பல உயர்மட்ட கைதுகள் நடக்கலாம். அடுத்த இலக்கு யார் என்பதை சமகால களநிலைவரங்களை உற்றுநோக்குபவர்களால் நிச்சயம் எதிர்வுகூற முடியுமாகவிருக்கும்.-Vidivelli
- றிப்தி அலி