- எம்.எம்.ஏ.ஸமட்
இவ்வாண்டின் மூன்றாம் தவணைப் பாடசாலைக் காலம் நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. அனைத்து அரச பாடசாலைகளும் புதிய ஆண்டில் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனவரி 2ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
இவ்வாறு, மாணவர்களுக்கு ஒரு மாதகாலம் விடுமுறை வழங்கப்பட்டாலும் அவர்கள் அவ்விடுமுறைக்காலத்தில் உடல், உள ஆரோக்கியத்துக்கான விளையாட்டுக்களில் பொழுதைக் கழிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாதிருப்பதனை கடந்த காலங்களில் அவதானிக்க முடிந்துள்ளது.
இதற்குப் பிரதான காரணமாக இருப்பது கல்விக் கடைகளாகும். ஏனெனில், இப்போதிருந்தே விடுமுறைக்கால வகுப்புக்களை நடாத்துவதற்கான கவர்ச்சிகரமான விளம்பரங்களை சில கல்விக் கடைகள் விளம்பரப்படுத்திருப்பதைக் காணமுடிகிறது.
பிள்ளைகளின் பாடசாலை பரீட்சை அடைவுகளை அதிகரிக்க வேண்டும். பிள்ளைகளின் அறிவு மட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லையென்றபோதிலும், தற்காலத்தில் பிள்ளைகள் தொடர்பான பாடசாலைகளினதும் பெற்றோர்களினதும் செயற்பாடுகள் அத்தகைய இலக்குகளுக்கப்பால் போட்டா போட்டிகளுக்காகவும் அடுத்தவர்களுக்காகவும் கல்விக் கடைகளை நோக்கி பிள்ளைகள் செல்வதற்குத் தூண்டப்படுவதானது பிள்ளைகள் அவர்களுக்கான விடுமுறையின் வசந்தத்தை அனுபவிப்பதிலிருந்தும் தடுக்கப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது.
இச்செயற்பாடுகளுக்கு முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கல்ல. சமகாலத்தில் ஒவ்வொரு முஸ்லிம் பெற்றோரும் தமது பிள்ளை சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டுமென்ற அவாவுடன் பிள்ளைகளின் கல்விக்காகப் பெரும் தொகைப் பணத்தைச் செலவழித்து வருகின்றனர். அதிலும், ஆங்கில மொழியில் தங்களது பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும், ஆங்கில மொழி பேச வேண்டும் என்ற ஆங்கில மொழி மோகம் அல்லது ஆங்கில மொழி மீதான வெறியில் பல பெற்றோர்கள் பிள்ளைகளை சர்வதேச பாடசாலைகளில் அனுமதித்து விட்டு கடனாளிகளாக மாறியிருப்பதையும், இடைநடுவில் அச்சர்வதேச பாடசாலைகளிலிருந்து பிள்ளைகளை இடைவிலக்கி அரச பாடசாலைகளில் இணைத்து வருவதையும் தலைநகரங்களில் மாத்திரமின்றி ஏனைய சில பிரதேசங்களிலும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளன.
இந்நிலையில், ஆங்கில மொழி மீது அளவுகடந்த ஆவல் கொண்டுள்ள முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாலானோர் குர்ஆன் அருளப்பட்ட அரபு மொழியை தமது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதில் அக்கறையற்றவர்களாகவே விளங்குகின்றனர். பெற்றோர்கள் மாத்திரமின்றி, இந்நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளும் அரபு மொழியை வளர்ப்பதில் அக்கறை காட்டாதுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆங்கில மற்றும் இதர மொழிகளை மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் முஸ்லிம் பாடசாலைகள், அரபு மொழியினை அப்பாடசாலைகளில் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்காது இம்மொழியினை புறந்தள்ளும் அல்லது இம்மொழியினை வளர்க்கத்தவறும் செயற்பாட்டினால் கட்டாய மொழிப் பாடங்களில் ஒன்றாக இருந்த அரபு மொழிப் பாடத்தினை தொகுதிப் பாடமாக (Basket subject) பின்தள்ளியிருக்கிறது.
இந்நிலை நீடிக்குமாயின் எதிர்காலத்தில் பாடசாலைக் கலைத்திட்டப் பாட விடயங்களிலிருந்து அரபு மொழிப் பாடம் விலக்கிக் கொள்ளப்படலாம். இதற்கு வழிவகுத்தவர்களாக தற்கால முஸ்லிம் பாடசாலைச் சமூகங்கள் கருதப்படும். ஏனெனில், முஸ்லிம் பாடசாலைகளில் அரபு மொழிப் பாட கற்றல் – கற்பித்தலில் காணப்படும் அசமந்தப்போக்கானது இந்த வரலாற்றுத் தவறு ஏற்படுவதற்கு களம் அமைத்துக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மொழியறிவும் பாடசாலைகளும்
இறைவனால் படைக்கப்பட்ட பேசும் விலங்கே மனிதன். இந்த மனிதனுக்கு இறைவன் அளித்த அருட்கொடைகளில் மிகப்பெரிய அருட்கொடை கல்வியாகும். இக்கல்வியைக் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் உள்ள ஊடகமே மொழியாகும். மொழியறிவு வீட்டுச் சூழலிருந்து ஆரம்பித்தாலும் அது வளர்க்கப்படுவது பாடசாலைகளிலாகும். ஏனெனில், பாடசாலைகள் அறிவையும், ஆற்றலையும், ஆளுமையையும் வளர்க்கும் கேந்திர நிலையமாகும். இந்தக் கேந்திர நிலையத்தினூடாக பல்துறைசார் அறிவுடையோர் சமூகத்திற்குள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். ஒரு சமூகத்தின் மத்தியில் துறைசார்ந்தோர் சிறப்புற்று வாழ அவர்களின் பல்மொழியறிவு வரப்பிரசாதமாகவுள்ளது.
ஒரு சமுதாயத்தின் பல தரப்பட்ட வளர்ச்சிகளும் ,நாகரிகமும் அந்தச் சமுதாயத்தின் முக்கிய அங்கமான மொழியின் ஆளுமையிலும், பாவனையிலும் தங்கியிருக்கிறது. மொழி என்பது மனித உணர்வின் பன்முகத் தேவைகளைச் செயற்படுத்தும் முகவராகத் தொழிற்படுகிறது. முகவர் என்பவர் ஒரு விடயத்தின் அடித்தளத்திலும், தொடர்புகளிலும், மாற்றங்களிலும் முக்கிய புள்ளியாகக் கருதப்படுபவர். அவ்வாறுதான் மொழியும் மக்களின் சாதாரண அடிப்படைத் தேவைகள் தொடங்கி அம்மக்கள் வாழும் சமுதாயத்தின் கலை, கலாசார, அரசியல், பொருளாதார வளர்ச்சியிலும் பங்கெடுக்கிறது. இவ்வாறு பங்கெடுக்கும் மொழிகளைக் கற்றுக்கொள்ளவும், கற்பிக்கவும் பாடசாலைகளே முக்கிய தளமாகச் செயற்படுவது அவசியமாகும்.
ஒரு பிள்ளையின் விருத்திப் படிநிலையில் 2 வயது முதல் 12 வயது வரையான காலப்பகுதியானது மொழி விருத்திக்கான காலமாகும். 12 வயது முதல் 19 வயது வரையான காலமானது ஆளுமை விருத்திக்கான காலமாகும். இக்கால எல்லைகளானது அப்பிள்ளையின் முன்பள்ளி, ஆரம்ப மற்றும் இடைநிலைப் பாடசாலைக் காலமாகவுள்ளது. மொழிவிருத்தியையும், ஆளுமை விருத்தியையும் பிள்ளைகளில் ஏற்படுத்துவதற்கு பாடசாலைகளே பொருத்தமான தளமாகும். இதனால் பாடசாலைகள் அதன் பங்களிப்பை முறையாகப் பயன்படுத்துவது அவசிமாகவுள்ளது.
ஒரு மாணவனின் ஆளுமை விருத்தியில் பரம்பரை, உடல், சமூக, கலாசாரக் காரணிகள் அடங்கலாக உளவியல் காரணிகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவற்றில் சமூகச் சூழல் காரணிகளாகக் கருதப்படும் வீடு, பாடசாலை, மொழி, சமூக வகிபங்கு, சுய எண்ணக்கரு, சமூக அடையாளம், ஆளிடைத்தொடர்புகள், வெகுசனத் தொடர்புசாதனங்கள், சமூக நிறுவனங்களும் அடங்கும்.
ஒரு மாணவனின் ஆளுமை விருத்திக்கு பங்களிப்புச் செய்யும் காரணிகளில் பிரதான வகிபங்குவகிப்பது பாடசாலையும் மொழியும், ஆளிடைத்தொடர்புகளுமாகும். இந்த மொழியறிவையும் ஏனைய காரணிகளையும் வளர்க்கும் தளமாக பாடசாலைகள் செயற்பட வேண்டிய நிலையில், அவ்வாறான பொறுப்புக்களை நிறைவேற்றக் கூடிய எத்தனை பாடசாலைகள் சமகாலத்தில் காணப்படுகின்றன? அதற்கான ஆரோக்கியமான பொறிமுறைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா? அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பாடசாலை முகாமைத்துவம் எத்தகைய ஒத்துழைப்புக்களை ஆசிரிய சமூகத்திடமிருந்து பெற்றுக்கொள்கிறது? அல்லது ஆசிரியர் சமூகம் எத்தகைய ஒத்தாசைகளை பாடசாலை முகாமைத்துவத்திற்கு மனச்சாட்சியோடு வழங்குகிறது?
பாடசாலைகளை ஏணியாக்கி சுயநலன்களை வெற்றி கொள்வதற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்ற முயற்சிகளில் எத்தனை சதவீதம் அப்பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் மொழி விருத்திக்கும் ஆளுமை விருத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் குர்ஆனின் மொழியான அரபு மொழிப் பாடமானது தொகுதிப் பாட விடயமாக முஸ்லிம் பாடசாலைகளில் காணப்படுவது கண்டு ஆசிரியர் சமூகத்தில் எத்தனை சதவீதத்தினர் அம்மொழியை வளர்த்து பாதுகாக்க முயற்சி எடுத்துள்ளனர்? என்ற கேள்விகளுக்கு விடை காணப்படுவது அவசியமாகும்.
ஏனெனில், சமகாலத்தில் பாடசாலைகள் அவற்றின் பங்களிப்பை முழுமையாக வழங்கத்தவறுவதன் விளைவுகளை சமூகங்கள் சுமக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்படலாயிற்று. பாடசாலைகள் சிறந்த எதிர்கால சமூகத்தை பாடசாலைகளில் கட்டியெழுப்புவதற்குத் தவறுகின்றபோது அதன் எதிர்முனைத் தாக்கங்களை பல்வேறு கோணங்களில் சமூகம் எதிர்நோக்க வேண்டி ஏற்படுகிறது. இவை தவிர்க்கப்பட வேண்டுமாயின் மாணவ சமூகம் பயன்மிக்க சமூகமாக பாடசாலைகளிலிருந்து வெளியேற்றப்படவேண்டும்.
பல மொழி பேசும் சமூகமாக இலங்கைச் சமூகங்கள் உள்ளதனால் அவரவர் பேசும் மொழிகளுக்கு ஏற்ப பாடசாலைகள் உருவாக்கப்பட்டதன் விளைவு ஒருவர் பேசும் மொழி மற்றவருக்கு விளங்காத மந்திரமாகவே உள்ளது. இந்த விளங்கா மந்திரம் விளங்க வேண்டுமாயின், இலங்கைப் பாடசாலைகளில் மொழிகளைக் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் முன்னுரிமை வழங்கப்படுவது அவசியமாகும்.
உலகத்தில் உள்ள எந்தமொழியும் மற்ற மொழியைவிட உயர்வானதோ அல்லது தாழ்வானதோ இல்லை. ஆனால் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றிருந்தால் அது அந்த நபருக்கு பல வழிகளிலும் உதவியாக அமையும். அவ்வாறு உதவக் கூடிய மொழிகளின் வரிசையில் அரபு மொழியும் ஒன்றாகும். ஆனால், அவ்வாறான மொழியை முஸ்லிம் பாடசாலைகளில் கற்பிக்கவும் கற்கவும் ஆர்வம் காட்டப்படாதிருப்பது அரபு மொழிப்பாடம் கலைத்திட்டத்திலிருந்து நீக்கப்படுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தப்போகிறதா? தற்கால முஸ்லிம் பாடசாலைச் சமூகம் இந்த வரலாற்றுத் தவறின் பாவத்தைச் சுமக்கப் போகிறதா? என்ற கவலை முஸ்லிம் கல்விப் புலத்தில் காணப்படுகிறது.
முஸ்லிம் பாடசாலைகளும் வரலாற்றுத் தவறும்
1978ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாடசாலைக் கலைத்திட்டத்தில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாட விடயங்களுள் இந்த அரபு மொழியும் ஒரு கட்டாய பாடமாக இருந்துள்ளது. அதற்குக் காரணம் அக்காலத்தில் சகல மொழிகளினதும் தேவைப்பாடு காணப்பட்டதும் மொழிகளைக் கற்கவும் கற்பிக்கவும் கொண்ட ஆர்வம் என்று கருத்திற்கொள்ளலாம்.
2016ஆம் ஆண்டின் கல்வியமைச்சின் தரவுகளின் பிரகாரம், இலங்கையில் இயங்குகின்ற ஏறக்குறைய 10,162 பாடசாலைகளில் 4,143,330 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இன மற்றும் மொழி ரீதியாகப் பிரிக்கப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நோக்குகின்றபோது, 6,338 சிங்கள மொழிப் பாடசாலைகளும் 2,989 தமிழ் மொழிப் பாடசாலைகளும் காணப்படுகின்றன. இவற்றில் 6,338 சிங்கள மொழியில் மாத்திரம் கற்பிக்கப்படும் பாடசாலைகளும், 2,989 தமிழ் மொழியில் மாத்திரம் கற்பிக்கும் பாடசாலைகளும் 66 சிங்கள, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கற்பிக்கும் பாடசாலைகளும் உள்ளன. அவ்வாறு, 554 சிங்கள, ஆங்கில மொழியில் கற்பிக்கும் பாடசாலைகளும் 168 தமிழ், ஆங்கிலம் மொழியில் கற்பிக்கும் பாடசாலைகளும் உள்ளதுடன் 47 மும்மொழியிலும் கற்பிக்கும் பாடசாலைகளும் உள்ளன.
ஆனால், இரு மொழி, மும்மொழிப் பாடசாலைகள் காணப்பட்டாலும் அப்பாடசாலைகளில் மும்மொழிகளையும் மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. இரண்டாம் மொழி தமிழ்ப் பாடம் சிங்கள மொழிப் பாடசாலைகளில் உள்ளதுபோல இரண்டாம் மொழி சிங்களப் பாடம் தமிழ் மொழிப் பாடசாலைகளின் கலைத்திட்டத்தில் அமையப்பெற்றிருந்தும் இப்பாடசாலைகளில் இரண்டாம் மொழி சிங்களப் பாடத்தை முறையாகக் கற்பிப்பதற்கோ அல்லது இரண்டாம் மொழி தமிழ் பாடத்தை கற்பிப்பதற்கோ ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. இந்த ஆசிரியர் பற்றாக்குறையானது மொழியறிவை விருத்தி செய்து கொள்ள ஆசைப்படும் மாணவர்களுக்கான வாய்ப்பை சமகாலத்தில் இல்லாமல் செய்துள்ளது என்று கூறுவதில் தவறேதும் இருக்காது.
இந்நிலையில், 100 மொழிகள் உலக மக்களால் அதிகம் பேசப்படும் மொழிகளாக உள்ளன. அதில் ஒரு மொழியாக அரபு மொழியும் உள்ளது. இவ்வாறான அரபு மொழியினை கற்பதற்கும் கற்றுக்கொடுப்பதற்கும் முஸ்லிம் பாடசாலைகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படாமையானது முஸ்லிம் பாடசாலைகள் அரபு மொழியினை வளர்க்க மறுக்கிறதா? அல்ல புறக்கணிக்கிறதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இலங்கையின் 25 மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் செறிவாகவும் செறிவு குறைந்தும் வாழ்கின்றனர். 2012 குடிசனத் தொகை மதிப்பீட்டுத் திணைக்களப் புள்ளிவிபரங்களின் பிரகாரம், இலங்கையின் மொத்த சனத்தொகையில் 19,67,523 பேர் முஸ்லிம்களாவர். அதில் அதிகூடிய எண்ணிக்கையினர் கிழக்கு மாகாணத்திலேயே செறிவாக வாழ்கின்றனர். கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் 281,987 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 159,418 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 134,065 பேரும் உள்ளனர். மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் 274,087 முஸ்லிம்கள் வாழ்வதோடு ஊவா மாகாணத்தின் மொனறாகலை மாவட்டத்தில் 9,809 முஸ்லிம்களும் தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 15,204 முஸ்லிம்களும் இவ்வாறு அடர்த்தியாகவும் அடர்த்தி குறைந்தும் வாழ்கின்றனர்.
முஸ்லிம்கள் வாழும் மாவட்டங்களிலெல்லாம் முஸ்லிம் பாடசாலைகளும் காணப்படுகின்றன. கல்வியமைச்சின் 2017ஆம் வருட புள்ளி விபரங்களின்படி தேசிய, மாகாணப் பாடசாலைகள் அடங்கலாக 936 முஸ்லிம் பாடசாலைகள் நாடு பூராகவும் காணப்படுகின்றன. இவற்றில் 45 தேசிய பாடசாலைகளும் அடங்கும். இவற்றில் மேல் மாகாணத்தில் 63 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தில் 113 பாடசாலைகளும், தென் மாகாணத்தில் 38 பாடசாலைகளும், வட மாகாணத்தில் 60 பாடசாலைகளும் உள்ளதுடன் வட மேல் மாகாணத்தில் 143 பாடசாலைகளும், வட மத்திய மாகாணத்தில் 86 பாடசாலைகளும், ஊவாவில் 30 பாடசாலைகளும், சப்ரகமுவில் 42 முஸ்லிம் பாடசாலைகளும் உள்ளன.
முஸ்லிம் பாடசாலைகளின் எண்ணிக்கையில் அதிகூடிய பாடசாலைகள் காணப்படுவது கிழக்கு மாகாணத்திலாகும். கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் 158 பாடசாலைகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 76 பாடசாலைகளும், திருகோணமலை மாவட்டத்தில் 127 பாடசாலைகளும் இயங்குகின்றன. இவை அனைத்தும் அரச பாடசாலைகளாகும் இப்பாடசாலைகளில் மத்திய கல்வியமைச்சினால் வழங்கப்பட்டுள்ள கலைத்திட்டங்களே பின்பற்றப்படுகின்றன.
இவ்வாறு பின்பற்றப்படுகின்ற பாடவிதானங்களில் கட்டாயப் பாடவிதானங்களும், தெரிவுப் பாடங்களும், தொகுதிப் பாடங்களும் காணப்படுகின்றன. க.பொ.த. சாதாரணதர வகுப்புகளுக்கான பாடத்தொகுதியில் 3ஆவது நிலைப் பாடத்தொகுதியில் அரபு மொழி உள்ளது. 1978ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாடசாலைக் கலைத்திட்டத்தில் ஆரம்ப வகுப்புக்களுக்கான கட்டாய பாடங்களில் ஒன்றாக இருந்த அரபு மொழியானது சமகால பாடசாலைக் கலைத்திட்டத்தில் 3ஆவது நிலைப் பாடத் தொகுதியில் இணைக்கப்பட்டிருக்கிறது. உலகளாவிய ரீதியில் அரபு மொழிப் பயன்பாட்டின் அவசியத்தின் புரிதல் புரியப்படாததன் நிமித்தம் அரபுமொழியினை கற்பிப்பதிலும், கற்பதிலும் குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகளில் அக்கறைகொள்ளப்படாமல் விடப்பட்டமையே இந்த நிலைக்குக் காரணமென சுட்டிக்காட்டப்படுகிறது.
தற்காலத்தில் பொருளாதார விருத்தியை இலக்காகக் கொண்டு பல முஸ்லிம் இளைஞர்கள் பாடசாலைக் கல்வி நிறைவடைந்த கையோடு 3 மாத மற்றும் ஆறு மாதக் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்ததன் பிற்பாடு மத்திய கிழக்கை நோக்கிப் பறக்கின்றனர். இவ்வாறு பணத்தேடலுக்காகச் செல்லும் இவர்கள் அரபுமொழி அறிவின்மையினால் பல சிரமங்களை இந்நாடுளில் எதிர்நோக்குவதாகத் தெரிய வருகிறது. இந்த அவதி நிலை ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகளில் அரபு மொழி கற்பிக்கப்படவுமில்லை மாணவர்கள் முறையாக அம்மொழியினை கற்கவுமில்லை என்பது யதார்த்தமாகும்.
முஸ்லிம் பாடசாலைகளில் 19,170 ஆசிரியர்களும், முஸ்லிம் அல்லாத பாடசாலைகளில் 1,920 முஸ்லிம் ஆசிரிர்களும் கற்பித்தல் பணியில் உள்ளனர். இவர்களில் மௌலவி ஆசிரியர் நியமனம் பெற்றோரும் உள்ளனர். 5 முதல் 7 வருடம் வரை அரபுக் கல்லூரிகளில் மார்க்கக் கல்வியைக் கற்று அரபுமொழியறிவைப் பெற்றுக்கொண்ட மௌலவிமார்களும்; பாடசாலைகளில் மௌலவி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாசிரியர்கள் மூலம் முஸ்லிம் பாடசாலைகளில் அரபு மொழியைக் கற்பிப்பதற்கான முயற்சிகள் எவ்வளவு தூரம் முன்னெடுக்கப்பட்டுள்ளன? இந்த மௌலவி அல்லது அரபு மொழி ஆசிரியர் நியமனம் பெற்ற ஆசிரியர்களின் தொழில்வாண்மை விருத்திக்காக இதுவரைகாலமும் முறையான பொறிமுறையினூடாக பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்கள் பெற்றுக்கொண்ட தொழில்வாண்மைப் பயிற்சியினூடாக அரபுமொழியினைக் கற்பிப்பதற்கான முயற்சிகள் முஸ்லிம் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா? அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முஸ்லிம் கல்வி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனரா? என்ற வினாக்களுக்கும் விடை காண வேண்டியுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும். முஸ்லிம் பாடசாலைகளை வளப்படுத்த வேண்டும்.
மாணவர்களின் பரீட்சை அடைவு மட்டங்களை அதிகரிக்க வேண்டும். இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சாதனை படைக்கச் செய்ய வேண்டும் என்றெல்லாம் கருதி குழுக்களும், சங்கங்களும் உருவாக்கப்பட்டு மகாநாடுகளும் கலந்துரையாடல்களும் நடத்தப்படுகின்றபோதிலும், அவற்றின் யதார்த்த பூர்வமான செயல்வுருமிக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனவா?. அச்செயற்பாடுகள் வெற்றியளித்துள்ளனவா? என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. ஒரு சில நடவடிக்கைகள் அடைவுகளை அடையச் செய்திருந்தாலும் அவை முழுமையான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி இருக்கிறதா?
முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் கல்விப் பிரச்சினைகளுக்கான பரிந்துரைகள் அவ்வப்போது முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் எத்தனை பரிந்துரைகளை நிறைவேற்றி வைப்பதற்கான முயற்சிகள் விளம்பரத்திற்காக முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை தொடர்பாக கூடிக்கலையும் குழுக்களினாலும், சங்கங்களினாலும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன?
குறைந்த பட்சம் பாடசாலைக் கலைத்திட்டத்தில் கட்டாய பாட வரிசையில் காணப்பட்ட அரபு மொழிப் பாடமானது கலைத்திட்டத்தின் 3வது தொகுதிநிலைக்குத் தள்ளப்பட்டது தொடர்பில் அவற்றுக்கான முன்னுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கும், பாடசாலைகளில் அரபுமொழி கற்பிக்கப்படுவதை உறுதி செய்வதற்குமான ஆக்கபூர்வமான முயற்சிகள் இந்த குழுக்களினாலும், சங்கங்களினாலும் இதயசுத்தியோடு முன்னெடுக்கப்பட்டுள்ளனவா?
இவ்வாறான கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும், விமர்சனங்களுக்கும் மத்தியில் முஸ்லிம் பாடசாலைகளில் மாணவர்களுக்கு அரபு மொழி கற்பிக்கப்படுவதற்கும், பாடசாலை பாடவிதானத்திலிருந்து அரபு மொழிப் பாடம் விலக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதற்கும், வளர்க்கப்படுவதற்கும் எதிர்வரும் புதிய வருட பாடசாலைத் தவணைகளிலிருந்தாவது முறையாக முயற்சிக்காவிடின் முஸ்லிம் பாடசாலைகளில் அரபு மொழியைக் கற்பதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்தார்கள் என்ற வரலாற்றுப் பழியை தற்கால முஸ்லிம் பாடசாலைச் சமூகங்கள் மீது எதிர்கால சந்ததியினர் சுமத்துவதைத் தவிர்க்க முடியாது என்பதை முஸ்லிம் பாடசாலைச் சமூகங்கள் உணர்ந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
-Vidivelli