முஸ்லிம் மக்கள் சிந்திக்க வேண்டும்
கோத்தா ஜனாதிபதியானால் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவர் எனக் கூறினர்; அப்படி எதுவும் நடக்காது என்கிறார் அமைச்சர் நிமல்
முஸ்லிம் மக்கள் தற்போது புதிதாக சிந்திக்கவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. உங்களது சிந்தனைகள் உங்கள் தலைவர்களால் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதியானால் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவார்கள் என்று அன்று அவர்கள் கூறினார்கள்.
என்றாலும் ஒருபோதும் அப்படி நடக்காது. ஜனாதிபதி சிங்கள மக்களுக்குப் போன்றே முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவார் என நீதி, நீதி மறுசீரமைப்பு மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அமைச்சர் வெலிமடையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரிக்காவிட்டாலும் இப்போதாவது ஒத்துழைப்புத் தாருங்கள் என ஜனாதிபதி அறைகூவல் விடுத்துள்ளார். மீண்டும் இந்நாட்டில் குண்டுகள் வெடிக்காது எனவும் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பொதுத் தேர்தலில் எம்மால் 120 க்கும் 125 க்கும் இடையிலான தொகுதிகளை வெற்றிகொள்ள முடியும்.
முஸ்லிம் மக்கள் தற்போது புதிதாக சிந்திக்கவேண்டியுள்ளது. முஸ்லிம்களில் அதிகமானோர் வியாபாரிகளாவார்கள். வற்வரியும், ஏனைய வரிகளும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வர்த்தகர்களும் மக்களும் நன்மையடைவார்கள்.
இந்த அரசாங்கத்துடன் தமிழ் மக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணையவேண்டும். ஜனாதிபதிக்கு சிங்கள மக்களே அதிகளவில் வாக்களித்திருந்தாலும் ஜனாதிபதி அனைவரையும் சமமாகவே கருதுவதாகத் தெரிவித்துள்ளார். எமது நாட்டில் இனம், மதங்களுக்கிடையில் புரிந்துணர்வும் நல்லிணக்கமும் தேவை. இவற்றில் நல்லிணக்கமின்றேல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
பட்டதாரிகளுக்கு மாத்திரம் நியமனங்கள் வழங்குவது எமது கொள்கையல்ல. வறுமைக் கோட்டில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த உயர்தரம் மற்றும் பல்கலைக்கழக பட்டம் பெற்றுக்கொள்ளாதவர்கள் இலட்சக் கணக்கில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் வேலை வாய்ப்புகளை வழங்குவதே ஜனாதிபதியின் இலக்காகும் என்றார்.-Vidivelli
- எ.ஆர்.ஏ.பரீல்