அபேக் ஷா வைத்தியசாலைக்கு திரட்டப்படும் நிதியை சுகாதார அமைச்சே கையாள்கிறது
மோசடிக்கு இடமில்லை என்கிறார் முஹம்மட்
‘மஹரகம–அபேக் ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் வைத்திய உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ‘பைட் கென்சர்’ திட்டத்தின் வங்கிக்கணக்கு சுகாதார அமைச்சினாலே நிர்வகிக்கப்படுகிறது. அந்த வங்கிக் கணக்கின் நிதி எந்தச் சந்தர்ப்பத்திலும் முறையற்ற விதத்தில் கையாளப்படவில்லை’ என ‘பைட் கென்சர்’ திட்டத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எச்.மொஹம்மட் தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டி, திம்பிரிகஸ்யாய ஜானகி ஹோட்டலில் நடைபெற்ற விஷேட ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ‘குறிப்பிட்ட வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை தான் பெற்றுக்கொண்டுள்ளதாக அபேக் ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் வசந்த திசாநாயக்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டினை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் சட்டத்தரணிகளுடன் ஆலோசித்து வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.
‘பைட் கென்சர்’ திட்டத்தின் கணக்கு தேசிய சுகாதார அபிவிருத்தி நிதியத்தின் கீழ் செயற்படுவதாகவும் இந்த நிதியத்துக்காக பொதுமக்கள் வைப்புச் செய்துள்ள 14 கோடி நிதி மிகவும் பாதுகாப்பாக உள்ளது.
‘பைட் கென்சர்’ திட்டம் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. புற்று நோய்க்குள்ளாகி காலமான எனது மகனின் வேண்டுதலுக்கு அமையவே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி உடன்படிக்கையொன்று செய்துகொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில் சுகாதார அபிவிருத்தி நிதியத்தின் கீழ் ‘பைட் கென்சர்’ திட்டத்திற்காக இலங்கை வங்கியில் 71275069 எனும் கணக்கு 2016 இல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தக் கணக்கிலுள்ள பணத்தை இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய எவராலும் மீளப் பெறமுடியாது. இந்த நிதிக்கான சட்டபூர்வமான அதிகாரம் சுகாதார அமைச்சு, அமைச்சின் செயலாளர், சுகாதார பணிப்பாளர் நாயகம் மற்றும் ஆயுர்வேத ஆணையாளர் ஆகியோர்களுக்கே உள்ளன. ஒரு அமைப்பாக இருந்து இந்தக் கணக்கிற்கு நாம் நிதி திரட்டி வருகிறோம். இந்தக் கணக்கிலுள்ள பணத்தை சுகாதார அமைச்சின் மூலம் கேள்விப் பத்திரம் கோரப்பட்டு அது கேள்விப்பத்திர சபையினால் உரியதொகை அனுமதிக்கப்பட்ட பின்பே பெற்றுக்கொள்ள முடியும்.
குறிப்பிட்ட கணக்கிற்கு இவ்வருடம் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி 4475674 ரூபா 2281 பேரால் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 ஆம் திகதி 7550901 ரூபா 3804 பேராலும் ஏப்ரல் 18 ஆம் திகதி 22235376 ரூபா 11674 பேராலும் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு இந்தக் கணக்கிற்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் 8648 பேரால் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. அன்று வைப்புச் செய்யப்பட்ட பணம் தீவிரவாதிகளால் எனக்கு வழங்கப்பட்டதாக டாக்டர் வசந்த திசாநாயக்க குற்றம் சுமத்தியதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன்.
2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் புற்றுநோய் வைத்தியசாலைக்கு 25 கோடி ரூபா செலவில் பெட்ஸ்கேன் இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான புற்று நோயாளர்கள் பயன்பெறுகிறார்கள். மேலும் வைத்தியசாலைக்கு தேவையான டோம தெரபி; லீனியா எக்சலரேடர் ஆகிய இரு இயந்திரங்கள் கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு சுமார் 100 கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நாங்கள் இதற்கென நிதி திரட்டும் போது வைத்தியசாலைப் பணிப்பாளர் இதனை நிறுத்துவதற்கு வெளிக்குழுக்களின் தேவைக்காக முயற்சிக்கிறார்.
எங்களிடம் அரசியல் இல்லை. இத்திட்டத்துக்காக இணைந்துள்ள 1500 அங்கத்தவர்கள் அரசியல் நோக்கம் கொண்டவர்கள் அல்லர். அப்பாவி நோயாளர்களின் நன்மைக்காகவே அவர்கள் இணைந்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டில் ஆசியாவிலே ஓர் சிறந்த முன்னணி வைத்தியசாலையாக அபேக் ஷா வைத்தியசாலையை மாற்றுவதே எமது இலக்காகும்.
பைட் கென்சர் திட்டத்துக்காக மக்கள் வழங்கும் பணம் ஒரு சதமேனும் எனது சொந்த வங்கிக் கணக்கிற்கோ, எமது அங்கத்தவர்களின் வங்கிக் கணக்கிற்கோ வைப்புச் செய்யப்படுவதில்லை என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறேன் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ. பரீல்