பள்ளிவாசல் சுவரில் உருவப்படங்கள் வரைய மாட்டோம் என சித்திரம் வரைவதற்கு வந்தவர்கள் உறுதியளித்ததையடுத்தே பள்ளிவாசல் நிர்வாகம் அனுமதியளித்தது. ஆனால் அவர்கள் வழங்கிய உறுதிமொழியை மீறி பள்ளிவாசல் சுவரில் உருவப்படங்களை வரைந்திருக்கிறார்கள் என வேவல்தெனிய, ரதாவடுன்ன சபீலுல் ஹுதா பள்ளிவாசல் பேஷ் இமாம் மொஹமட் நவாஸ் மொஹமட் அஹ்லம் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
ரதாவடுன்ன பள்ளிவாசல் சுவரில் உருவப்படங்களை அப்பகுதி பெரும்பான்மையினர் வரைந்திருப்பது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் என்போரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சம்பவம் தொடர்பில் பள்ளிவாசலின் இமாம் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
‘சுவர்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் பள்ளிவாசல் சுவரிலும் சித்திரம் வரைவதற்கு சிலர் வந்து அனுமதி கோரினார்கள். உருவப்படங்கள் வரையாது சித்திரங்கள் வரையலாம் என அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் வந்து சுவரை முதலில் சுத்தம் செய்தனர்.
மறுதினம் மாலை 4 மணியளவில் வந்து சித்திரம் வரைய ஆரம்பித்தார்கள். பள்ளிவாசல் சுவரில் உருவப்படங்கள் வரைய வேண்டாம் என வேண்டினோம். அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அடுத்த நாள் காலை 7 மணியளவில் சித்திரங்களை வரைந்து பூரணப்படுத்தியிருந்தார்கள். நான் வந்து பார்த்தபோது எங்களுக்கு வழங்கிய வாக்குறுதியையும் மீறி சுவரில் உருவப்படங்கள் வரையப்பட்டிருந்தன.
உடனே நாம் எங்கள் பகுதிக்கும் பொறுப்பான கிராம சேவையாளரிடம் முறையிட்டோம். ஆனால் அவரால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இப்பகுதியில் பள்ளிவாசலைச் சூழ 5 முஸ்லிம் குடும்பங்களும் மேலும் 25 குடும்பங்களும் வாழ்கின்றன. பள்ளிவாசல் சுவர்களில் உருவப்படங்கள் வரைவதை சம்பந்தப்பட்டவர்கள் தடை செய்ய வேண்டும் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ. பரீல்