நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் எனவும் கட்சியை மைத்திரிபால சிறிசேனவே வழிநடத்துவார் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்முன்னாள் செயலாளர் ரோஹன லக் ஷ்மன் பியதாச தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் நகர்வுகள் குறித்து வினவியபோதே அவர் இதனைக் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் பொதுக் கூட்டணியாக களமிறங்கும். சின்னமும் பொதுவான ஒன்றாக இருக்கும். நாற்காலி சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றே நாம் கூறியுள்ளோம். எவ்வாறு இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார்.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அவர் போட்டியிடுவார். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவரது அரசியல் பயணம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அவர் தொடர்ந்தும் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எமது விருப்பமும் அவரது விருப்பமுமாக உள்ளது என்றார். -Vidivelli