நாட்டின் புற்றுநோயாளர்கள் அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாட்டினால் பல இன்னல்களை அனுபவித்தனர். மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் நிலவிய மருந்து தட்டுப்பாட்டின் காரணமாக நோயாளர்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு உள்ளாகினர். கடந்த கால அரசாங்கத்தின் சுகாதார அமைச்சரின் அசிரத்தையே இதற்குக் காரணம் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புற்று நோயாளர்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் தட்டுப்பாடு நிலவும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு புதிய அரசாங்கம் 100கோடி ரூபாவை உடனடியாக ஒதுக்கியுள்ளதை நாம் செய்தியாக வெளியிட்டிருந்தோம். புற்று நோயாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மருந்துகளுக்கு ஒதுக்கப்படவேண்டிய நிதி வேறு தேவைகளுக்கு கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டதாகவும் அச்செய்தி தெரிவித்தது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் தேவையான மருந்து வகைகளை இறக்குமதி செய்வதற்கு புதிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னி ஆரச்சி உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அமைச்சரும், அமைச்சின் செயலாளர் பி.எம்.எஸ். சார்ல்ஸும் திறைசேரியுடன் கலந்துரையாடியதன்பின் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மருந்து வகைகளை கொள்வனவு செய்வதற்கு திறைசேரி 100 கோடி ரூபா நிதியினை ஒதுக்கியபோதும் அந்நிதி மருந்து கொள்வனவுக்கு முழுமையாக பயன்படுத்த முடியாமற் போனதை அறிந்து கொள்ளும்போது வேதனையளிக்கிறது.
ஒதுக்கப்பட்ட 100 கோடி ரூபாவில் 80 கோடி ரூபாவை முன்பு மருந்து கொள்வனவு செய்த கடனைச் செலுத்துவதற்கு பயன்படுத்தியதாக மஹரகம அபேக் ஷா வைத்தியசாலை பணிப்பாளர் விஷேட வைத்தியர் வசந்த திசாநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.
எஞ்சிய 20 கோடி ரூபாவில் தட்டுப்பாடு நிலவிய 24 மருந்து வகைகளில் 15 வகை மருந்துகளை அவசர கொள்வனவு விதியின் கீழ் கொள்வனவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 வருடங்களாக அரச ஒளடத கூட்டுத்தாபனம் மற்றும் தனியார் மருந்து கம்பனிகளில் கடனுக்கு மருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதால் அதற்குரிய பணம் செலுத்தப்படாமை காரணமாகவே மருந்து தட்டுப்பாடு நிலவியதாகவும் அவர் கூறினார். மேலும் 9 வகை மருந்துகள் வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த காலத்தில் புற்றுநோய் வைத்தியசாலையில் மாத்திரமல்ல ஏனைய அரச வைத்தியசாலைகளிலும் மருந்து தட்டுப்பாடு நிலவியது. முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டன. புற்று நோய்க்கான மருந்துகள் வேறு எந்த வைத்தியசாலையிலும் பெற்றுக் கொள்ளமுடியாது. இதனால் மாற்று வழியின்றி நோயாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் நோயாளர்களின் நலனுக்கு பிரார்த்தனைகளிலே ஈடுபட்டனர். உரிய மருந்து கிடைக்காத நிலையில் அவர்கள் தெய்வங்கள் மீதே நம்பிக்கை வைத்திருந்தனர்.
இந்த மருந்து தட்டுப்பாடு பற்றி மாவட்ட ரீதியில் ஊடக மாநாடுகள் நடத்தி அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. ஊடக மாநாடுகளை வைத்தியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அதனால் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
சுமார் 35 வகை புற்றுநோய் மருந்துகள் தட்டுப்பாடு நிலவி வந்ததாகவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் வாய் திறக்க வேண்டாம் என முன்னாள் சுகாதார அமைச்சர் தனக்கு உத்தரவிட்டதாகவும், வைத்தியசாலையின் பணிப்பாளர் திசாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தபோது தெரிவித்திருந்தார்.
முன்னாள் அமைச்சரின் இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கதும் மனிதாபிமானம் அற்றதுமாகும். வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பது உண்மை என்றால் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
நோயாளர்களின் உயிர்களை பாதுகாக்கும் மருந்து வகைகள் தட்டுப்பாடு நிலவும்போது – தட்டுப்பாடு இல்லை என்று ஊடக அறிக்கை வெளியிடும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
நோயாளர்களின் வாழ்க்கையை அரசியலுடன் சம்பந்தப்படுத்தக் கூடாது.
இவ்வாறான அமைச்சர்களுக்கு சிகிச்சை பெற சிங்கப்பூரில் வைத்தியசாலைகள் இருக்கின்றன. ஆனால் எமது நாட்டு நோயாளர்களுக்கு இருப்பது எமது நாட்டு வைத்தியசாலைகள் மாத்திரமே. எமது நாட்டில் இலவச வைத்தியசேவை பெயரளவில் இருக்கக் கூடாது. புதிய அரசாங்கம் இலவச வைத்தியசேவை தொடர்பில் அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும்.-Vidivelli