உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வெ ள்ளிக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு பக்றீரியா தாக்கமே காரணம் என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டிகேமியா எனப்படும் இரத்தத்தை நஞ்சாக்கும் அபாயகரமான பக்றீரியா தாக்கத்தினாலேயே ஸைனுல் ஆப்தீன் ஜெஸீல் முகமட் எனும் காத்தான்குடியைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனையை மேற்கொண்ட கொழும்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிறைச்சாலையினுள் பரவும் மேற்படி உயிர்கொல்லி பக்றீரியாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு குறித்த இளைஞருக்கு சிகிச்சையளித்த வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிக்கும் சட்ட வைத்திய அதிகாரிக்கும் சிறைக் காவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் தகவல்களுக்கமைய குறித்த இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் தலைவலி மற்றும் சுவாசப் பிரச்சினை தொடர்பில் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.இதனையடுத்து அவர் உடனடியாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அன்று நள்ளிரவு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு காத்தான்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டு சனிக்கிழமை இரவு அடக்கம் செய்யப்பட்டது. இவ்விளைஞரும் அவரது சகோதரரும் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவரது சகோதரர் தற்போது கண்டி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli