பொதுத் தேர்தலில்: சஜித் தலைமையில் ஐ.தே.க களமிறங்கும்
பேராசிரியர் ஆஷூ மாரசிங்க திட்டவட்டமாக தெரிவிப்பு
எதிர்க்கட்சி தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கி பொதுத்தேர்தலுக்கான நடவடிக்கைகளை அவர் தலைமையில் முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியைத் தொடர்ந்து பல விடயங்களில் மாற்றங்கள் ஜனநாயக ரீதியில் கட்சிக்குள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்து வெளியேற வேண்டுமென்ற அவசியம் கிடையாது. சர்வதேச அரசியலிலும் அந்நிலைமை பின்பற்றப்படவில்லை. இலங்கையிலும் அவ்வாறான நிலைமைகள் காணப்படவில்லை. அரசாங்கத்தில் வகித்த பதவிகளில் மாத்திரமே மாற்றமேற்படுத்தப்பட்டுள்ளது.
கட்சியைப் பலப்படுத்தி பொதுத்தேர்தலின் வெற்றியை இலக்காகக் கொண்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதே தற்போதைய பிரதான தேவையாகக் காணப்படுகின்றது.
எந்நிலையிலும் கட்சியைப் பிளவுபடுத்தும் நோக்கம் எவருக்கும் கிடையாது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கி அவர் தலைமையில் பொதுத்தேர்தலுக்கான செயற்பாடுகளை முன்னெடுக்கப்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் கட்சித் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முறையான பேச்சுவார்த்தைகளை அனைத்து தரப்பினருடனும் முன்னெடுக்கின்றார்.
சரியான தீர்வு கிடைக்கப் பெற்றவுடன் தலைமைத்துவத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்த அவரே இடமளிப்பார்.
அமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒப்பந்தம் குறித்து தற்போதைய அரசாங்க உறுப்பினர்கள் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். ஆனால் இன்று அவர்களே 70 சதவீதம் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயங்கள் காணப்படுகின்றன என்று குறிப்பிடுகின்றார்கள். ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் இதுவரையில் உத்தியோகபூர்வமான அறிவித்தலெதனையும் விடுக்கவில்லை.அரசியல் பிரசாரத்திற்காகவே இந்த ஒப்பந்தம் ஆளும் தரப்பினரால் கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டது. நாட்டுக்கு நன்மை பயக்கும் பல விடயங்களுக்கு அரசியல் விடயங்களை கருத்திற்கொண்டு தடைகளை ஏற்படுத்தியவர்கள் இன்று எந்நிலைப்பாட்டுடன் இவ்வொப்பந்தம் குறித்து தீர்மானங்களை எடுப்பார்கள் என்று மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்.-Vidivelli