ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகியுள்ளது. என்றாலும் ஜனாதிபதித் தேர்தலின் சூடு இன்னும் தணியவில்லை என்றே கூறவேண்டும். தேர்தலின்போது தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அன்று வேட்பாளராக இருந்து வழங்கிய வாக்குறுதிகளை மக்கள் மறக்கவில்லை.
அன்று தேர்தல் மேடைகளில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஏராளமானவை. அவற்றில் சில முக்கியமானவை. அன்று எதிரணியினராலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தரப்பினராலும் விமர்சிக்கப்பட்ட முக்கிய தலைப்பு மிலேனியம் சவால் ஒப்பந்தமாகும் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
‘மிலேனியம் சவால் ஒப்பந்தம்’ (எம்.சி.சி) நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலானதாகும். இந்த ஒப்பந்தம் மூலம் இலங்கை ஐக்கிய அமெரிக்காவின் ஓர் பிராந்தியமாக மாறிவிடும். அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என கோத்தாபய ராஜபக் ஷவின் தேர்தல் மேடைகளில் முழங்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு இடமளிக்காது அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு கோத்தாபய ராஜபக் ஷவை ஜனாதிபதி ஆசனத்தில் அமரச்செய்ய வேண்டும் என தேர்தல் மேடைகளில் வாக்காளர்கள் கோரப்பட்டார்கள். இன்றைய அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில என்போர் மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை கிழித்து எறியவேண்டும் என்றார்கள்.
இந்நிலையில் அமைச்சரவைப் பேச்சாளர் கடந்த வாரம் வெளியிட்ட அமைச்சரவைத் தீர்மானங்களில் மிலேனியம் சவால் ஒப்பந்தமும் அடங்கியிருந்தமை அனைவரையும் திகைப்புக்குள்ளாக்கியது. ‘மிலேனியம் சவால் ஒப்பந்தம்’’ தொடர்பில் ஆராய்வதற்கு மீளாய்வு செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது’ என்பதே அந்தத் தீர்மானமாகும்.
ஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒப்பந்தம் ஊடாக 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்திற்குப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் உடன்படிக்கையாகும்.
இந்த ஒப்பந்தம் ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் பலவாறு விமர்சிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என குற்றம் சுமத்தப்பட்டது. இந்த பிரசாரங்கள் கோத்தாபயவின் வெற்றிக்கு சாதகமாக அமைந்தன எனலாம். அவரது வெற்றிக்கு நாட்டின் பாதுகாப்பு என்பதே முக்கிய காரணமாக அமைந்தது.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விட மிலேனியம் சவால் ஒப்பந்தமே நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என பிரசாரம் செய்யப்பட்டது.
இந்நிலையிலே இந்த ஒப்பந்தத்தை மீளாய்வு செய்வதற்காக அரசாங்கம் குழுவொன்றினை நியமிக்கத் தீர்மானித்துள்ளது. அவ்வாறென்றால் தேர்தல் மேடைகளில் இந்த ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்படாதே விமர்சிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம் ஆராயப்பட்டு மீளாய்வு செய்யப்பட்டு தேர்தல் மேடைகளில் விமர்சிக்கப்பட்டிருந்தால் அதற்கென ஒரு குழுவினை நியமிக்கும்தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்காது.
இவ்வாறான நிலைமை மிகவும் பாரதூரமானதாகும். மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக ஓர் சர்வதேச ஒப்பந்தம் தொடர்பில் நினைத்தவாறெல்லாம் பிரசாரம் செய்து மக்கள் அச்சமூட்டப்பட்டமையை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. பொய் பிரசாரங்களைச் செய்து மேற்கொள்ளும் அரசியல் நாட்டுக்கு நன்மை பயக்காது.
இந்த ஒப்பந்தத்தை மீளாய்வு செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்ற அறிவிப்பை கடந்த வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றில் சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பர்ஸானா ஜெமீல் வெளியிட்டார். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதன் ஊடாக அரசியலமைப்பு உறுப்புரைகள் மீறப்படுவதாக அறிவிக்குமாறும் அந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்கக்கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனைகள் நீதிமன்றில் இடம்பெற்றபோதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தேர்தல் பிரசாரங்களின் போது இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக போர்க்கொடி ஏந்திய பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று இந்த ஒப்பந்தம் 70 வீதம் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்று கூறுவது வேடிக்கையானதாகும்.
அரசியல்வாதிகள் முன்வைக்கும் கருத்துகள் எப்போதும் உண்மையானவைகளாக இருக்கவேண்டும். வாக்காளர்களைக் கவர்வதற்காக நினைத்தவாறெல்லாம் கருத்துகளை வெளியிடுபவர்கள் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்தவேண்டும். மக்கள் ஒரு போதும் ஏமாற்றப்படக்கூடாது. எது எவ்வாறாயினும் மிலேனியம் சவால் ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட்டு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விதிகள் நீக்கப்பட்டு அமுல்படுத்தப்படுவது நன்மையாக அமையும்.-Vidivelli