இராணுவத்தின் முன்னாள் தளபதியாகவிருந்த ஒருவரின் வீடு எவ்வாறு இருக்கும் என்று நாம் மனதில் எடை போட்டிருந்த எத்தகைய தடயங்களும் இல்லாத ஒரு சாதாரண வீடாகவே முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவின் வீடு காணப்பட்டது. அதுவும் நகரத்திற்கப்பாலுள்ள சனநெருக்கடியற்ற அமைதியும் வெறுமையுமான பிரதேசத்திலேயே அவ்வீடு அமைந்துள்ளது. மிகவும் எளிமையான முறையில் வாழ்ந்து வரும் அரச ஓய்வு பெற்ற மனிதர் ஒருவரின் வீடு அது. அம்மனிதரின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த இராணுவ அதிகாரிகளால் கூட எமக்கு எத்தகைய அசெளகரியங்களும் ஏற்படவுமில்லை. வீட்டின் முன் கதவால் வெளியே வந்த அம்மனிதர் மகேஷ் சேனாநாயக்க புன்முறுவல் பூத்த முகத்தோடு கைலாகு செய்து எம்மை வரவேற்றார்.
வீட்டின் உள்ளே நுழைந்தபோதும் சர்வ சாதாரணமாக நாம் எடைபோடும் இராணுவ பதக்கங்கள், இராணுவ புகைப்படங்கள் உள்ளிட்ட படைத்தரப்பு சார்ந்த எத்தகைய அடையாளங்களையும் காண முடியவில்லை. சுதந்திரமாக வாழும் ஓர் அமைதியான சூழ்நிலையையே எம்மால் அவதானிக்க முடிந்தது. எங்களுடன் மிகவும் மிருதுவான சுபாவத்துடனே கதைக்க ஆரம்பித்தார். அதிகார ஆணவம் அவரிடமிருந்து வெளிப்படவே யில்லை. மகேஷ் சேனாநாயக்க சாதாரணமாக உரையாடும்போது, நகைச்சுவையாகக் கதைக்கும் சுபாவமுள்ளவர். அவருடனான நேர்காணலின் போது வருணனைகளுப்பால் நட்பு ரீதியான மரியாதை யொன்றே அவரிடமிருந்து வெளிப்பட்டது. அவருடன் செவ்வியெடுத்து முடிந்து நாம் வெளியேறினோம். அப்போதும் அவர் சிறிது தூரம் எம்முடனே வந்தார். நேர்காணலில் அவரது கடந்த கால வாழ்வு குறித்து முதலில் வினவினோம்.
“எனது தந்தை ஒரு பொலிஸ் அதிகாரி. அதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடமையின் பொருட்டு இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளார். தந்தையின் பிறந்த ஊர், தென் மாகாணத்தின் பலப்பிட்டியிலுள்ள கொஸ்கொடயாகும். ஆனாலும் நான் முதலாம் தரத்திலிருந்து 13 ஆம் தரம் வரையிலும் கொழும்பு ஆனந்தா கல்லூரியிலே பயின்றுள்ளேன். நாரஹேன்பிட்டியிலுள்ள அண்டர்சன் தொடர்மாடி வீட்டுத் தொகுதியிலேயே ஆரம்ப காலத்தில் இருந்துள்ளேன். பின்னர் தந்தை கட்டுபத்தப் பகுதியில் காணியொன்றை வாங்கி வீடொன்றை நிர்மாணித்தார். எனக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் ஒரு தங்கையும் ஒரு தம்பியும் இருந்தனர். ஆனால் தம்பி பின்னர் எம்மை விட்டும் பிரிந்து விட்டார். எனது தாயின் இளைய சகோதரியும் எங்கள் வீட்டில்தான் இருந்தார். இதனால் எங்கள் குடும்ப எண்ணிக்கை எண்மராக இருந்தது. தந்தை தொழிலின் நிமித்தம் ஒவ்வொரு இடத்திற்கும் செல்லவேண்டிய நிலை. இதனால் அவருடன் உறவாடும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகவே இருந்தன.
நான் பாடசாலையில் செய்யவேண்டிய குறும்புகள் எல்லாம் செய்துள்ளேன். அவற்றுக்கு மத்தியில் கல்வியிலும் கவனம் செலுத்தினேன். பாடசாலையில் பல்வேறு சங்கங்களிலும் அங்கம் வகித்துள்ளேன். விளையாட்டிலும் ஈடுபாடு காட்டியுள்ளேன்.
பொலிஸ் மற்றும் இராணுவம் ஆகிய இரு கடெட் குழுக்களிலும் இருந்துள்ளேன். நான் பொலிஸ் கடெட் குழுவின் சார்ஜன் தரத்திலிருந்த போது 1980 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியிலான விருதைப் பெற்றுள்ளேன்.
திரைப்படம் பார்ப்பதையே பிரதான பொழுது போக்காகக் கொண்டிருந்தேன். அத்துடன் நான் பார்த்த படத்தின் பெயர், அதன் தயாரிப்பாளர், அதன் நடிக– நடிகையர் பெயர் விபரங்களை சீ.ஆர்.புத்தகம் ஒன்றில் பதிவு செய்து வைத்துள்ளேன். படத்தை திரையரங்கில் பார்த்ததை உறுதிப்படுத்துவதற்காக குறித்த குறிப்புக்களை எழுதிய இடத்தில் மேற்படி திரைப்பட சினிமா கொட்டகையின் டிக்கட்டையும் ஒட்டி வைப்பேன். இந்த வகையில் அப்போது திரைப்படம் பார்த்தோர் வரிசையில் அதிகமான திரைப்படங்களைப் பார்த்தவன் என்ற சாதனையையும் நிலை நாட்டியுள்ளேன். இதனால் திரைப்படம் பார்ப்பதில் பரம ரசிகன் நான் என்பது உறுதி. சிங்களம், ஹிந்தி திரைப்படப் பிரியன் நான். பொரள்ள–லிடோ, ரிட்ஸ், தெமட்டகொட–சமந்தா, மருதானை–காமினி போன்ற சினிமா தியேட்டர்களிலேயே அநேகமான படங்களைப் பார்த்துள்ளேன். காமினி தியேட்டரில் நாம் இல்லாது திரைப்படம் ஓட மாட்டாது என்று நாம் பகிடியாகக் கதைப்பதுண்டு.
Q சுதந்திரமாக திரைப்படம் பார்த்து வந்த வாலிபப் பிறவியான நீங்கள் எவ்வாறு இராணுவத்தில் இணைந்தீர்கள்?
எமது பாடசாலையில் கேர்ணல் ஜீ.டப்ளியூ. ராஜபக் ஷ என்பவர் அதிபராக இருந்தார். எனது பாடசாலை வாழ்க்கை முழுவதும் அவரே அதிபராகக் கடமையில் இருந்தார். அவர் எமது திறமை, ஆற்றல்களை நன்குணர்ந்தவராவார். எங்களை பல்கலைக்கழகம் அனுப்பவேண்டும் என்பதே எமது பெற்றோரதும் விருப்பமாக இருந்தது. இந்நிலையில் என்னை இராணுவத்தில் சேர்க்கும்படி எங்கள் அதிபரே எமது பெற்றோருக்கு ஆலோசனையை முன்வைத்தார்.
இராணுவத்தில் குறுகிய கால அதிகார முறைமை, நீண்டகால அதிகார முறைமை என்று இரு வகை முறைமைகள் உள்ளன. நான் இராணுவத்தில் இணைவதென்றால், நீண்டகால முறைமைப் பிரிவையே தேர்ந்தெடுக்கும் படி எனது தந்தை ஆணித்தரமாகவே என்னைப் பணித்தார். அத்துடன் ஐந்து வருடங்களில் வெளியேறும் நோக்கத்துடன் இராணுவத்தில் சேர வேண்டாம் என்ற கண்டிப்பான உத்தரவொன்றையும் விடுத்தார். எனது இராணுவ பாடநெறி இரண்டு வருடங்களாகும். என்னுடன் 19 பேருக்கே மேற்படி பிரிவில் அனுமதி கிடைத்தது. அந்த அணியில் முதல் நிலை பெற்று விருதும், சான்றிதழையும் வென்றெடுத்தேன். அதனால் பல வருடங்களுக்கொரு முறையே வழங்கப்படும் கடெட் நடத்துநர் அதிகாரிக்கான நியமனம் எனக்கு உடனடியாகவே கிடைத்தது. 1983 ஜூன் 23 ஆம் திகதி இந்நியமனம் பெற்றேன். அப்போது பொறியியல் துறை அணிக்கே செல்லவேண்டும் என்று ஜானக பெரேரா என்னைப் பலவந்தமாகப் பணித்தார். அவ்வணியிலும் சிறிதுகாலம் நான் திருப்திகரமாகப் பணியாற்றினேன். அதன் பின்னரே இலங்கை இராணுவத்தில் விசேட அணியொன்று ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நான் 1988 முதல் விசேட அணியில் சேர்க்கப்பட்டு பணியாற்றினேன்.
Q விசேட படையணியான எஸ்.எப்.என்பது இலங்கை இராணுவத்தில் சிறப்புவாய்ந்த படை வீரர்கள் உள்ள அணியாகும். ஆனாலும் ‘ரணவிரு நீரோ’ எனும் பூரண தகைமையான ஸ்னைபர் வீரர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட வீரர்கள் அடங்கிய எஸ்.எப். அணி குறித்து அறிந்து கொள்ள முடியுமா?
எஸ்.எப். குறித்து அவ்வீரர்களது படை நடவடிக்கைகள் மிகவும் இரகசியமாகவே கையாளப்படுவதால் அது பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைப்பதில்லை. நாம் நீண்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம். நாம் ஊடகங்களுக்காக யுத்தம் செய்யும் நடிகர்கள் அல்லோம்.
2002 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் எல்.ரீ.ரீ.ஈ அமைப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. விசேட படையணியின் நடவடிக்கைகளை இடை நிறுத்தும்படி அவ்வொப்பந்தத்தின் ஒரு விதியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனால் அத்தகையதொரு விதி இதர படையணி மீது விடுக்கப்படவில்லை. எல்.ரீ.ரீ.ஈ பெரிதும் அஞ்சியது விசேட படையணிக்கேயாகும். இலங்கையில் மிகவும் தரம்–பலம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட படையணியாக இவ்விசேட அணியே விளங்கியமை இதன் மூலம் நன்கு தெரியவருகிறது.
எமது நான்கு வீரர்கள் சுமார் 90 Km தொலைதூரம் அடர்ந்த காட்டுக்குள் ஊடுருவிச் சென்று, அவர்களது படை முகாமைத் தாக்கி மீண்டு வருவது குறித்து எல்.ரீ.ரீ.ஈ நன்கு தெரிந்து வைத்திருந்தனர். அத்தகைய பொறுப்பு வாய்ந்ததொரு தொழிலிலேதான் நாம் ஈடுபட்டு வந்தோம். புலிகளை ஆட்டங்காண வைக்கும் படை நடவடிக்கையொன்றை நடத்தி முடித்து பத்து நாள் விடுமுறையில் எனது வீட்டுக்கு வந்தேன். நாம் என்ன சாதித்தோம் என்று வீட்டில் யாருக்கும் தெரியாது. நாம் அச்சாதனைகள் குறித்து நூல் ஏதும் எழுதுவதில்லை. நூல் எழுதினாலும் அதிலுள்ள காரணிகளைத் தவறான முறையில் திசை திருப்பவும் முடியும். ஒரு சில அதிகாரிகளால் எழுதப்பட்ட நூல்களில் அடங்கியுள்ள சில காரணிகள் இன்று விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன. எம்மால் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான படை நடவடிக்கைகள் பரம இரகசியமாகும். அவை குறித்து பெருமையடிக்க முடியாது. எங்களால் நடத்தப்பட்ட படை நடவடிக்கைகள், எதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்காக உழைக்கும் கனிஷ்ட வீரர்களிடம் மாத்திரம் பகிர்ந்து கொள்வதை விடுத்து ஊர் உலகத்திற்குப் பறைசாற்று வதில் பயனில்லை. ஜனாதிபதி தேர்தல் பிரசார மேடைகளில் கூட எனது சாகசங்கள் குறித்து பெருமை பேசியது கிடையாது. அதேபோன்றே இன்று வரையிலும் எமது விசேட படையணி மீது மனித உரிமை நிறுவனத்தாலோ அல்லது வேறு எந்த அமைப்புக்களிடமிருந்தோ எத்தகைய முறைப்பாடு களும் சுமத்தப்படவுமில்லை.
Qரம்போ போன்ற திரைப்படங்களில் விசேட படை வீரர்கள் குறித்து கண்டுகொள்ள முடிகிறது. அத்தகைய படங்களில் வரும் வீரர்களின் சாகசங்கள் சாதாரண மனிதரொருவரின் இயலுமையையும் தாண்டியதாக உள்ளது. எனவே திரைப்படங்களில் காணக்கூடிய மேற்படி காட்சிகள் உண்மையாக நிகழ்த்தப்பட்டவைகள் தானா?
உண்மையிலேயே எங்களுக்கு உயர்ந்தபட்ச தொழில்நுட்ப வசதிகள் ஏதும் இருக்கவில்லை. நாம் வேடுவர்களின் பாணியில் வெள்ளையர்களது யுத்தத்தையே மேற்கொண்டோம் என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. உலக நாடுகளில் எவரும் சாதிக்காத சாதனைகளை எமது ஒரு சில வீரர்கள் புரிந்திருக்கிறார்கள். இயலுமையோடு அலாதியான பலம் மற்றும் மன தைரியம் எல்லாம் எமது வீரர்களிடம் உள்ளன. உதாரணத்திற்கு பாலம் குமர என்றழைக்கப்படும் ஒரு வாலிபன் குறித்து குறிப்பிடலாம். அது அவரது உண்மையான பெயரல்லவென்பதால் அவரைத் தனிப்பட்ட ரீதியில் இனம்காண முடியாது. அதனால் அப்பெயரைக் குறிப்பிட்டேன். அவருடன் நாம் நீண்ட படை நடவடிக்கையொன்றுக்குச் சென்றோம். பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகம் நடந்ததால் எமது படையணி சிதறுண்டு போனது. எல்.ரீ.ரீ.ஈ எம்மை பின் தொடர்ந்து தாக்கி வந்தது. பின்னர் எமது குழு ஒருவாறு ஒன்று சேர்ந்து கொண்டது. ஆனால் பாலம் குமர மட்டும் தனித்து விடப்பட்டிருந்தார். அவர் எப்படியும் புலிகளின் பிடியில் சிக்காது தப்பித்து வரக்கூடிய துணிச்சல் மிக்கவர் என்பது எமக்குத்தெரியும்.
சுமார் ஒன்றரை வாரங்களின் பின்னர் அவர் வந்து சேர்ந்தார். கையில் எத்தகைய வரைபடமோ வழிகாட்டி உபகரணங்களோ ஏதுமின்றி நடுக்காடுகளுக்கு மத்தியில் இருந்தே மீண்டு வந்துள்ளார். அவரைக் கண்ட மாத்திரத்திலேயே அவரை வைத்திய பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என்றே நான் எடைபோட்டேன். ஆனால் அவரோ முக்கியமானதொரு தாக்குதல் நடவடிக்கைக்கான சான்றாதாரங்களுடனே வந்திருந்தார். மேற்கூறப்பட்ட எத்தகைய பாதை வழிகாட்டுதல் ஆதாரங்கள் ஏதும் இல்லாது காட்டின் மத்தியிலுள்ள புலிகளின் மூன்று படை முகாம்கள் உள்ள இடங்களை இனம் கண்டே வந்துள்ளார். வந்த கையோடு விமானத் தாக்குதல் தொடுக்க அவ்விடங்கள் குறித்த தகவல்களைக் கையளித்தார். வேறு எவரும் இவ்வாறு தனித்து விடப்பட்டு வந்து சேர்ந்ததும் உடனடியாக விடுமுறை பெற்று வீடு செல்லவே எத்தனிப்பர். அவரோ அபரிமிதமாக அர்ப்பணிப்புச் செய்துள்ள ஒரு வீரராவார்.
அவர் இப்போது சமூகத்தோடு ஒருவராக அமைதியாகவும் சாதாரணமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்று பாலம் குமரயா பற்றியோ அவரது வீர தீர செயற்பாடுகள் குறித்தோ யாருக்கும் தெரியாது. அவரால் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க சாகசங்கள் குறித்து யாரும் நினைவு கூரவும் விரும்புவதில்லை போலும். யுத்தம் என்பது இனிய அனுபவம் ஒன்றன்று. அதுவேதான் உண்மையாக உழைக்கும் தொழில். நிதர்சனமான போர் வீரம்.
‘ப்ராவோ–2 சீரோ’ என்ற பெயர் தாங்கிய உலகப் பிரசித்தம் பெற்ற நூல் ஒன்றுள்ளது. அந்நூல் கருவை வைத்து திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டது. பிரித்தானியாவின் விசேட எஸ்.ஏ.எஸ்.படைக்குழு, ஈராக்கில் மேற்கொண்ட படை நடவடிக்கை பற்றிய கதையே அந்நூலிலிருந்து திரைப்படமாக்கப்பட்டுள்ளது. அந்நூலை எழுதிய குறித்த வீரரை கொழும்பில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரது அனுபவங்களில் இரண்டொன்றை நாமும் பெற்றுக்கொள்ளும் எண்ணத்தில் அவருடன் உரையாடினேன். ஆனால் அவரது கூற்றிலிருந்து என்னால் எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற ஒரே சம்பவமே அந்நூலின் கருப்பொருளாகும். அதனைத் தவிர வேறு குறிப்பிடத்தக்க எச்சம்பவமும் அவரிடம் காணப்படவில்லை. அதுவும் அவர் எழுதிய அனுபவம் போன்று ஏராளமான சம்பவங்களை நாம் அனுபவித்துள்ளோம்.
இராணுவத்திற்குள் இரு வகையான வீரர்கள் உள்ளதாக நாம் சாதாரணமாக கூறி வருகிறோம். ஒரு வகையினர் நெருக்கடி நெருங்கும் சந்தர்ப்பத்தில் கிரேனேற் பொருத்தியும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் தாக்குதல் நடத்தி வருவோராவார். அடுத்த தரப்பு, தூரநோக்கோடு நடவடிக்கை ஒன்றுக்காகக் காத்திருக்கும் வகையினராவர். மீண்டும் முகாமுக்குள் வந்தடைந்த பின்னர் யுத்தத்தில் ஈடுபட்டோரால் தாம் மேற்கொண்ட நடவடிக்கை குறித்த கதையைக் கூற முடிவதில்லை. அந்நடவடிக்கையை நேரில் பார்த்துக் கொண்டிருந்தவர்களால் தான் கதையை அழகாகக் கூறமுடியும். அதனால் படை நடவடிக்கையின் பின்னர் முகாம்களில் வீரர்கள் சுற்றி வளைத்து வினாத்தொடுப்பது இரண்டாம் தரப்பினரிடம் தான். ஏனெனில் யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் அல்ல. பார்த்திருந்தோரே இவ்விடத்தில் கதாநாயகர். யுத்தம் செய்தவர்களே நாம் எவ்வாறு நடந்து கொண்டோம் என்று பார்த்திருந்தோரிடமே கேட்டுத் தெரிந்துகொள்வர். இதுவே உலக நிலை.
எமது படை வீரர்கள் மிகவும் உன்னதமானவர்கள் என்று நான் மிகவும் கெளரவமாகவும் பெருமையுடனும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். பெரும்பாலானோர் வறுமை காரணமாக தொழிலுக்காக இராணுவத்தில் சேருகிறார்கள்.
நான் யுத்தம் இல்லாத நிலையில் இராணுவத்தில் இணைந்தேன். ஆனாலும் யுத்தம் ஆரம்பித்ததைத் தொடர்ந்து இராணுவத்தை விட்டும் வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்லவில்லை. அதேபோன்றே யுத்தம் நடத்து கொண்டிருந்த வேளையிலே இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய வீரர்களும் உளர். அந்த வகையில் பெரும்பாலான படையினர் மிகவும் உன்னதமானவர்கள்தான்.
Q யுத்தத்தின்போது ஒருவரையொருவர் சுட்டுக் கொல்கின்றனர். இன்னொரு மனித உயிரைக் கொல்லும்போது நல்ல மனமுள்ள யுத்த வீரர் ஒருவரின் மனம் எப்படியிருக்கும்? அம்மரணத்தை மறந்து அவரால் வாழ முடியுமா? இவ்வினாவுக்கு நீங்கள் தான் பதிலளிக்கப் பொருத்தமானவர் எனக் கருதுகிறேன்.
எவரது உயிரையும் பலியெடுத்ததன் பின்னர் அந்நிகழ்வு என்றும் மனதை விட்டும் அகலாது. பயங்கரவாதியானாலும் எங்களால் கொல்லப்பட்ட அம்மனித உயிர் குறித்த நினைவுகள் எங்கள் உள்ளத்திலே பதிந்திருக்கும். அக்காட்சிகள் மனதில் ஊசலாடவே செய்யும். கனவுகளில் தோன்றி பீதியூட்டவும் செய்யும். நானும் இவற்றை அனுபவித்துள்ளேன். அதனால்தான் நாம் இராணுவ முகாமுக்குள்ளே மதவழிபாட்டு நிகழ்வுகளை அடிக்கடி மேற்கொள்கிறோம். சமயக் கிரியைகளை அனுஷ்டித்து வருகிறோம். உளவியல் ரீதியாகவும் வீரர்களை தயார்படுத்த வேண்டும். பொதுவாகச் சொல்லப் போனால் மேற்கண்ட விடயங்களில் நாம் தேர்ச்சியும் வெற்றியும் கண்டுள்ளோம். ஆயிரத்தில் ஓரிருவர் இதிலிருந்து வேறுபடலாம். ஒரு சிலர் வீடு சென்றதும் மனைவியுடன் மோதல்களில் ஈடுபடுவதுமுண்டு. நாம் எல்லோரும் ஒரு வகையில் பாதிக்கப்பட்ட வகுப்பினரேயாவர். எல்லா மனிதர்களும் அன்றாட வாழ்வில் இன்னல்களுக்கு முகம் கொடுத்துக்கொண்டுதானிருக்கிறார்கள். இராணுவ வீரர்களுக்கும் அதே துன்ப–துயரங்களும் இல்லாமலில்லை. இதனால் இருந்து நின்று ஒருவர் அல்லது இருவர் வன்முறைகளில் ஈடுபடவும் கூடும். ஆனாலும் மிகவும் பண்புகள் பேணி சமூகத்திற்கு தலைமைத்துவம் வழங்கும் இராணுவ வீரர்களையும் நாம் அறிவோம்.
Q இராணுவம் உள்ளிட்ட துறைகளால் எமது நாட்டு இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உன்னத நிலைகளுக்கு உயர்த்தப்பட்டுமுள்ளனர். அந்த கெளரவமே படை வீரரின் தலைமேல் ஏற்றப்படும் சுமையாகி விடுவதுமுண்டு. இந்நிலையில் மேற்படி நம்பிக்கையையும் மரியாதையையும் எவ்வாறு காப்பாற்றுவது?
இராணுவ வீரர் எனும் மரியாதையை எங்களுக்கு அளிக்கும்போது நாமும் அந்த மரியாதையைக் காப்பாற்றிக்கொள்வதற்கு தெரிந்துகொள்ள வேண்டும். இராணுவ வீரர் ஒருவர் யாரோ ஒருவருடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கோட்டை புகையிரத நிலையத்தின் முன் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்க எத்தனிப்பாராயின் அது அவரது கெளரவத்திற்குப் பொருந்தாததொன்றாகும். படை வீரனுக்கும் கொலைகாரனுக்கும் இடையே வேறுபாடுண்டு. சண்டை மூண்டு கொண்டிருக்கும்போது பெரும்பாலான வீரர்கள் மிகவும் சிறப்பாக நடந்து கொண்டுள்ளனர். அதிலும் இரண்டொருவர் தவறிழைத்திருந்தால் அது குறித்து விசாரித்தறிந்து குற்றம் காணுமிடத்து தண்டனை வழங்க வேண்டும். அதைவிடுத்து நாம் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக எல்லாவற்றையும் ‘இராணுவத்தினர்’ என்ற வசனத்திற்குள் புகுத்திக்கொள்வது தவறு. இன்று இராணுவ வீரர் என்பது ஒரு புறத்தில் வியாபாரப் பொருளொன்றாகியுள்ளது. மறு புறத்தில் அரசியல் தேவைக்கேற்ப பயன்படுத்தும் பொருளாகவுள்ளது.
Q உங்களது குடும்ப மற்றும் நண்பர் உறவுகள் எவ்வாறுள்ளன?
எனக்கு குடும்பத்துடன் மிகவும் நெருக்கமான உறவுள்ளது. எனது 19 ஆவது வயதில் இராணுவத்தில் இணைந்தேன். அப்படியிருந்தும் குடும்பம், நண்பர்கள், உறவு எனும்போது அதில் நான் முதன்மையானவன். எனக்கு பாடசாலை நண்பர்கள் ஐவர். அன்று போல் இன்றும் அதே உறவுதான் நீடிக்கிறது. ஐந்து ஆப்த நண்பர்களாக நாம் இருந்தோம். நான் ‘மய்யா’ என்ற பெயரால் அழைக்கப்பட்டேன். மற்ற நண்பர்கள் நால்வரும், ‘படிக்கமா’, ‘வன்னியா’, ‘கரூ’, ‘வவுலா’ என்ற இடுபெயர்களாலே அழைக்கப்பட்டனர். இந்நால்வரும் உயர் மட்ட உத்தியோகத்தில் உள்ளனர். நாம் எப்போதும் ஒன்றாகவே இருப்போம். சில சந்தர்ப்பங்களில் என்னைத் திட்டித் திட்டி என்னுடனே இருப்பர். அவர்கள் எனக்கு வாக்களித்தும் இருக்கமாட்டார்கள். ஆனாலும் நான் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, எனக்கு உணவு அனுப்புவார்கள். எமது பிள்ளைகளுக்கு அத்தகைய நண்பர்கள் எவரும் இல்லை. பெரும்பாலானவர்கள் குடும்பம், நண்பர்களை விட்டும் பிரிந்துமுள்ளனர். நான் அப்படியல்ல. எப்போதும் குடும்பம், நண்பர்கள் என்ற உறவுடனே இருந்து வருகிறேன்.
Q இறுதி யுத்தத்தின் போது உங்களது குறிப்பிடத்தக்க பங்களிப்பு என்ன?
நாட்டில் யுத்தம் ஒன்று நடந்து கொண்டிருக்கும் போது இராணுவத்திலும் முக்கிய பதவி நிலைகள் உருவாக்கப்படுகின்றன. முதன்மையானவர், இராணுவத் தளபதி, அதற்கடுத்த நிலையில் புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர். இவர்களையடுத்து அமுலாக்கற்பணிப்பாளர். இவர்களுக்குப் புறம்பாக மற்றோர் அதிகாரி. விசேட அனுபவம் மற்றும் இயலுமை காரணமாக முக்கியமாக மாற்றங்கள் செய்யவும் வாய்ப்புள்ளது. எவ்வாறிருந்த போதிலும் யுத்தத்திற்கான திட்டங்கள் வகுக்கும்போது முதலில் புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் தகவல்கள் பெற்றுக்கொண்டு அவற்றை புலனாய்வுகளாகச் சமர்ப்பிப்பார். அந்த புலனாய்வுத் தகவல்கள் திட்டமிடல் பணிப்பாளரிடம் சென்றடைகின்றன. இதனை அமுலாக்கல் பணிப்பாளர் செயற்படுத்துவார்.
நான் இறுதி யுத்தத்தின்போது திட்டமிடல் பணிப்பாளர் பொறுப்பிலேயே இருந்தேன். புலனாய்வுப் பணிப்பாளராக அமல் கருணாசேகர பணியில் இருந்தார். அமுல்படுத்தல் பணிப்பாளர் தரத்தில் உதய பெரேரா அமர்த்தப்பட்டிருந்தார். நாம் மூவரும் ஒரே குழுவில் இருந்து படித்தவர்களே. இதுவோர் அபூர்வ நிகழ்வாகும். அத்துடன் நாம் மூவரும் நல்ல நண்பர்களாவோம். இந்நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகா எங்கள் மூவரில் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் அநேகமான சந்தர்ப்பங்களில் நாம் மூவரும் ஓர் அறையில் ஒன்றாகவே இருப்போம். நாம் ஒரு குழுவாகவே இயங்கினோம். இரவும் பகலும் நாம் ஒன்றாகவே பணியாற்றினோம். அது யுத்தத்தின் போது இராணுவத்தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி ஆகிய முக்கியஸ்தர்களுக்கும் இலகுவாக அமைந்தது.
2010 இல் சரத் பொன்சேகா அரசியலில் பிரவேசித்தார். நான் திட்டமிடல் பணிப்பாளர் என்பதால் சரத் பொன்சேகாவிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வராத நாட்களே இல்லையென்று கூறலாம். ஆனாலும் அவர் அன்று அரசியலில் நுழைந்தபோதிலும் நான் அரசியலில் ஈடுபடவில்லை. அரசியலை இராணுவத்திற்குள் புகுத்தவுமில்லை. ஆனால் நாம் இராணுவத்திற்குள் அரசியலை கொண்டு வருவோமோ என்ற பீதியிலேயே அப்போதைய ஆட்சி நிர்வாகம் அஞ்சிக்கொண்டிருந்தது. அதனால் நான் உட்பட சிலரை இராணுவத்திலிருந்து வெளியேற்றினர். மீண்டும் அத்தகையதொரு நிலை உருவாகாதிருப்பது நல்லது. பின்னர் நான் அரசியலுக்கு வந்தபோது பெரும்பாலானோர் வாழ்த்துத் தெரிவித்து குறுந்தகவல் அனுப்பினர். அவர்களுள் இராணுவத்தைச் சேர்ந்தோருக்கு நான் அனுப்பிய பதில் குறுந்தகவலில் ‘நன்றி, தயவு செய்து இராணுவத்தில் அரசியல் வேண்டாம்’ என்றே அவ்வசனங்கள் அமைந்திருந்தன.
Q இறுதியில் நீங்கள் ஜனாதிபதி வேட்பாளரானீர்கள். அது குறித்து….?
நாளை நான் உயர்ந்தாலும் அது எனக்கு போனஸ்; ஜனாதிபதியானாலும் அதுவும் எனக்கு போனஸ். நான் இராணுவ வீரன் என்ற வகையில் அந்தத் துறையில் அடைய வேண்டிய உச்சஸ்தானத்தையே தொட்டுவிட்டேன். அது தான் இராணுவத்தளபதி பதவியாகும். அதனைத் தவிர எனக்கு வேறு எதுவும் தேவையில்லாத நிலையில் நான் அரசியலில் அடியெடுத்து வைத்தேன். நான் அதிகார ஆசையில் வரவில்லை. யாரும் ஜனாதிபதியாக வருவர். சில்வா ஜனாதிபதியானாலும் ஒன்று. பெரேரா ஜனாதிபதியானாலும் ஒன்று.
ஆனாலும் அதிகாரத்தில் இருப்பவருக்கு கொள்கை ரீதியிலான அழுத்தம் கொடுப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன். நான் நாளையும் அரசியலிலே தான் இருப்பேன். எவ்வாறு செயலாற்றுவேன் என்பது வெகு விரைவில் தெரியவரும். ஆனாலும் நாட்டின் நன்மைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். நான் முன்னாள் இராணுவத் தளபதி. நான் மரணித்தாலும் ஆயிரக் கணக்கான இராணுவ வீரர்களை அனுப்பி வைப்பார்கள். மரியாதை ஊர்வலம் நடத்துவர். அத்தகைய எதனையும் நான் விரும்புவதில்லை. நான் மரணித்த போதோ அல்லது நோய்வாய்ப்பட்டு இருக்கும் போதோ மக்கள் நான் செய்த காரியங்களை கெளரவிக்கும் வகையில் எனது வீட்டுக்கு வர வேண்டும். அதற்காகவே தான் நான் செயற்படுகிறேன்.-Vidivelli
- நன்றி–அனித்தா பத்திரிகை
- தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்