மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி பாத்திமா ஜப்ராவின் மரணம் அப் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவர் மற்றும் தாதியர்களின் கவனக்குறைவினால் உரிய அளவை விடவும் 10 மடங்கு அதிகமான செறிவுடைய மருந்து ஏற்றப்பட்ட காரணத்தினாலேயே குறித்த சிறுமி உயிரிழக்க நேரிட்டது. இந்தத் தவறை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வாகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த தவறு தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதேநேரம், தமது மகளின் மரணம் தொடர்பில் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய பொலிசாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனக்கு வழமைக்குமாறான முறையில் மருந்து வழங்கப்படுவது தொடர்பில் சிறுமி ஜப்ரா தாதியர்களிடம் கேள்வியெழுப்பியிருந்த நிலையிலேயே குறித்த தவறு இடம்பெற்றுள்ளமை இந்த இடத்தில் கவனிக்கத்தக்கதாகும். எனவேதான் இதனை ‘அறியாமல் இடம்பெற்ற மனித தவறு‘ என வகைப்படுத்த முடியாதுள்ளது. மாறாக இது அலட்சியமாகும்.
வைத்தியர்களும் தாதியர்களும் மனித உயிர்களைப் பாதுகாக்கவே தம்மை இரவு பகலாக அர்ப்பணித்துப் பணியாற்றுகின்றனர் என்பதை அவராலும் மறுக்க முடியாது. அவர்கள் மனித உயிர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதால் அவர்களது தொழில் ஏனையோரைப் பார்க்கிலும் அதிக பொறுப்புணர்வை வேண்டி நிற்கிறது. இந்தப் பொறுப்பை தாம் சரிவர நிறைவேற்றுவோம் என சத்திய வாக்குறுதியளித்த பின்னரே மருத்துவத்துறைசார் ஊழியர்கள் தமது கடமைகளைப் பொறுப்பேற்கின்றனர். இருப்பினும் அவ்வப்போது நிகழும் தவறுகள் நோயாளிகளின் உயிருக்கே உலைவைப்பதாக அமைந்துவிடுகின்றன.
மருத்துவ தவறுகள் காரணமாக உலகளவில் வருடாந்தம் இலட்சக் கணக்கானோர் மரணத்தைத் தழுவுகின்றனர். மருத்துவ அறிவும் தொழில்நுட்பமும் வளர்ந்த அமெரிக்காவில்கூட, இத் தவறுகளால் வருடாந்தம் சராசரியாக 195,000 பேர் உயிரிழப்பதாக அந்நாட்டு வைத்தியசாலைகளில் 2000 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. மருத்துவ தவறுகள் காரணமாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களில் ஆகக் குறைந்தது 10 பேரில் ஒருவராவது உயிரிழக்கின்றனர் அமெரிக்க தேசிய வானொலியின் அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. அந்த வகையில் உலகளாவிய ரீதியில் பெரும் பிரச்சினையாகக் கருதப்படும் மருத்துவ தவறுகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளை 2022 ஆம் ஆண்டில் 50 வீதத்தினால் குறைப்பதற்கான முயற்சிகளை தாம் மேற்கொண்டுள்ளதாக நோயாளர்களின் பாதுகாப்பிற்கான உலகளாவிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை சுகாதாரத் துறையில் ஒப்பீட்டளவில் தனது தரத்தைப் பேணுகின்ற போதிலும் இவ்வாறான மருத்துவ தவறுகள் அவ்வப்போது நிகழவே செய்கின்றன. சரியான உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிபரங்கள் வெளியிடப்படாவிடினும் பெரும்பாலான தவறுகள் மூடிமறைக்கப்பட்டு விடுகின்றன. ஒருசிலவே வெளியில் பேசப்படுகின்றன. அவ்வாறானதொரு சம்பவமே சிறுமி ஜப்ராவுக்கு நடந்துள்ளது.
அந்த வகையில் இதனை வெறுமனே மருத்துவ தவறு (Medical Error) என்று மாத்திரம் நாம் கடந்து போய்விட முடியாது. இதனை மருத்துவ அலட்சியம் (Medical Negligence) என்ற அடிப்படையிலேயே நோக்க வேண்டும். அந்த வகையில் மருத்துவர், தாதியர் மற்றும் மருந்தாளர்களின் இந்த அலட்சியம் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு சிறுமி ஜப்ராவின் குடும்பத்திற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
இதேவேளை இந்த சம்பவத்தை படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்திலும் இவ்வாறான தவறுகளும் அலட்சியங்களும் இடம்பெறாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க சுகாதார அமைச்சும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் திட்டங்களை வகுக்க வேண்டும். இந்த விசாரணைகளின் பின்னர் எட்டப்படும் தீர்மானமும் நீதிமன்றத் தீர்ப்பும் ஏனைய மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கும் பாடமாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.
உயிரிழந்த சிறுமிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஜென்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவனபதியை அருள்வானாக.-Vidivelli