மத்திய கிழக்கு நாடுகள் அரசுக்கு ஒத்துழைக்கும்

ஜனாதிபதியுடனான சந்திப்பில் மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் சுட்டிக்காட்டு

0 1,462

மத்திய கிழக்குத் தூதுவர்கள் குழுவை பிரதிநிதித்துவம் செய்யும் நாடுகளின் தூதுவர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவை சந்தித்தனர்.

புதிய அரசாங்கத்திற்கு மத்தியகிழக்கு நாடுகளின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் கிடைக்கப்பெறும் எனவும், பொருளாதார மற்றும் கலாசார நடவடிக்கைக்காக எதிர்காலத்தில் இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் தூதுவர்கள் தெரிவித்தனர்.

மேலும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்த தூதுவர்கள், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கைக்கும் தமது நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளை அனைத்து துறைகளிலும் பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதியளித்தனர்.

பலஸ்தீன், எகிப்து, குவைத், ஓமான், ஈராக், லிபியா மற்றும் கட்டார் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைக்கான தூதுவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கடந்த வியாழக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவையும் அலரி மாளிகையில் மேற்குறித்த மத்திய கிழக்கு நாடுகளின் துதுவர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, பொருளாதார மேம்பாடு மற்றும் கலாசாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இலங்கைக்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக மத்தியகிழக்கு நாடுகளின் தூதுவர்களின் சம்மேளன பிரதிநிதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவிடம் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் காமினி செனரத் மற்றும் பிரதமரின் பிரத்தியேக ஆலோசகர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.