புதிய ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்து பெரும்பான்மையற்ற அரசாங்கம் ஒன்றை அமைத்து ஒரு வாரம் தான் ஆகிறது. ‘பேட் மேன், வேன் மேன்’, ‘கெட்ட மனிதன், வேன் மனிதன்’ என்றெல்லாம் தேர்தல் மேடைகளில் முழங்கிய வார்த்தைகள் யதார்த்தமானவை என்பது இப்போதே நிரூபணமாகியுள்ளது. அதுவும் சர்வ சாதாரணமான இடத்திலல்ல. இராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலாகும்.
மீண்டும் வராது என்று கூறிய, வெள்ளை வேனும் வந்து விட்டது. கடத்தப்பட்டிருப்பதோ இங்குள்ள சுவிட்சர்லாந்து நாட்டு தூதரக அலுவலகத்தில் வீஸா அதிகாரியாக கடமையாற்றும் ஒருவரே. குறித்த அதிகாரியான அப்பெண்ணைக் கடத்திய கொலைக் கும்பல் அச்சுறுத்தி அப்பெண்ணிடமிருந்த கைப்பேசியைக் கைப்பற்றி, பலவந்தமாக அதனை இயக்கியுள்ளனர். அதன்போது அதில் பதிவாகியிருந்த தகவல்களையும் பெற்றுள்ளனர். அவற்றுள் அண்மையில் சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் பெற்ற நபர் மற்றும் அவருக்கு உதவியவர் குறித்த விபரங்களும் அடங்கியிருந்துள்ளன.
சுவிட்சர்லாந்தில் அண்மையில் அரசியல் புகலிடம் பெற்றுள்ள இரகசிய பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த அல்விஸ் தொடர்பான விபரங்களைக் கண்டறிவதற்கே கடத்தல் குழுவுக்கு தேவையாக இருந்ததாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை அறிக்கை வெளியிட்டிருந்தது.
ஜனாதிபதித் தேர்தலின் போது ராஜபக் ஷாக்களின் பிரசாரப் பணிகளுக்காகசெயற்பட்டுக் கொண்டிருந்த இணையத்தளம் ஒன்று மேற்படி கடத்தல் சம்பவம் நடந்த தினத்தன்றே இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அதில் நிஷாந்த சில்வாவுக்கு சுவிஸ் செல்வதற்கு கிரிசாந்த குரே என்பவரே உதவியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. இவர், சிறிசேன–ரணில் ஆட்சியின் போது லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக அமர்த்தப்பட்டிருந்தவராவார்.
கடத்தல் சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள், பெல்லன்வில விகாரையில் நடந்த களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த கோத்தாபய ராஜபக் ஷ, பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பாக மிகவும் ஆவேசமாகப் பேசும் பாங்கு இறுவட்டு பதிவொன்றில் காண முடிகிறது. தம்மை விசாரணைக்குட்படுத்திய ஒரு மனிதனாகவே பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவை ஜனாதிபதி கோத்தா நோக்கியுள்ளார். பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை, கப்பம் கோருவதற்காக கடற்படை அதிகாரிகளால் 11 வாலிபர்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை போன்ற விசாரணைகளே நிஷாந்த சில்வாவினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. தமக்கென்றே மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளாகவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இவ்விசாரணைகளைக் கருதுகிறார்.
சுவிஸ் தூதரக வீஸா அதிகாரி கடத்தப்பட்டதும் மேற்படி தூதரக அலுவலகத்தில் விபரங்கள் திரட்டப்பட்டதும் தற்போது சர்வதேச மயப்படுத்தப்பட்ட தலைப்புச் செய்திகளாகியுள்ளன. சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கைத் தூதுவரை, கடந்த மாதம் 27 ஆம் திகதி பர்ன் நகரிலுள்ள வெளிநாட்டு விவகார அமைச்சுக்கு அழைத்து உரையாடியுள்ளனர்.
அதேபோன்றே கொழும்பிலுள்ள சுவிஸ் தூதுவர், எமது பிரதமர் மற்றும் வெளிநாட்டமைச்சர் ஆகியோரைச் சந்தித்து, மேற்படி கடத்தல் விவகாரம் தொடர்பாக காரணிகளை முன்வைத்துள்ளனர். சர்வதேச ஊடகங்கள், கடந்த ஒரு வாரத்திற்குள் இடம்பெற்ற மற்றொரு அடக்கு முறையொன்றாகவே இச்சம்பவம் குறித்து அறிக்கையிட்டுள்ளன.
மிகவும் துரிதகதியில் இத்தகைய அடக்குமுறை நிலைமையொன்று உருவாகும் என்று எவரும் எதிர்பார்க்காத நிலையிலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதால் எல்லோர் மத்தியிலும் பேசுபொருளாகவும் பலரும் வினா எழுப்பும் விடயமாகவும் இச்சம்பவம் மாறியுள்ளது.
உதாரணத்திற்கு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கிய இணையத் தளமொன்றை சோதனைக்குட்படுத்துவதற்காக கடந்த 26 ஆம் திகதி, காலம் கடந்த விறாந்து ஒன்றுடன் 14 பொலிஸ் அதிகாரிகளும் நான்கு சிவில் நபர்களும் குறித்த இணையத்தள நிறுவனத்திற்குள் பிரவேசித்துள்ளனர். மேலும் அதே போன்றதொரு இணையத்தளத்தின் செய்தி அறிவிப்பாளர் ஒருவரிடம் இரகசியப் பொலிஸார் சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அரச தமிழ் அலை வரிசையொன்றின் ஊடகவியலாளருக்கு ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பான எந்த நிகழ்ச்சி நிரல்களும் நடத்தக்கூடாதென அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள அரச சார்பற்ற மனித உரிமைகள் அமைப்பு அலுவலகத்திற்குள் நுழைந்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் அங்கிருந்த ஏராளமான ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். அதே தினம் மற்றொரு அரச சார்பற்ற அமைப்பொன்றுக்குள் சென்று அங்கு தொண்டர் அடிப்படையில் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சுவிஸ் பிரஜை ஒருவர் தொடர்பாக விசாரணை செய்துள்ளனர்.
தற்போது காலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஷானி அபேசேகர, அவராகவே நினைத்து விசாரணைகளை மேற்கொள்ளக்கூடிய ஒருவர் என்றே ஜனாதிபதி ராஜபக் ஷ பெல்லன்வில மகிழ்ச்சிக் களியாட்ட வைபவத்தில் ஷானி அபேசேக்கர குறித்து அறிமுகம் செய்துள்ளார்.
அண்மைக் காலமாக இந்நாட்டின் பொலிஸ் சேவையில் கடமையாற்றிய மிகவும் திறமைவாய்ந்த ஓர் உயர் அதிகாரியாகவே ஷானி அபேசேக்கரவைக் குறிப்பிடலாம். அவர் விசாரணை அதிகாரியாக இருந்து மேற்கொண்ட குற்றவியல் விசாரணைகளில் சில கீழே தரப்படுகின்றன.
பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் வழக்கு, இரண்டு கோடி ரூபா கப்பம் கோரப்பட்டு எய்ட்கன்ஸ் ஸ்பென்ஸ் தலைவர் விக்கிரமசிங்க கடத்தப்பட்டமை தொடர்பான விடயம், ரோயல் பாக் இவொன் படுகொலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் எல்.ரீ.ரீ.ஈ மேற்கொண்ட தாக்குதல், சந்திரிகா குமாரதுங்க மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல், சரத் பொன்சேக்கா மீதான கொலை முயற்சி, மைத்திரிபால சிறிசேன மீது இலக்கு வைக்கப்பட்ட இரண்டு குண்டுத் தாக்குதல்கள், அங்குலான வாலிபர்களின் படுகொலை, பாரத லக் ஷ்மன் கொலை…. போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
அதன் பின்னர் பரிசோதனை மீளாய்வு அதிகாரியாக இவர் தலைமை வகித்து மேற்கொண்ட குற்றவியல் பரிசோதனைகளில் சில…
பிரகீத் எக்னெலிகொட கடத்தல், உபாலி தென்னக்கோன் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல், கீத் நொயர் கடத்தல், போத்தல ஜயந்த கடத்தல் மற்றும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம், நாமல் பெரேரா கடத்தல் முயற்சி, விமல் வீரவன்ஸவின் கடவுச்சீட்டு மோசடி, ரதுபஸ்வலயில் நடத்தப்பட்ட படுகொலைகள், ரொஷான் சானக படுகொலை, கொட்டாஞ்சேனை 11 வாலிபர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்டமை, சம்பத் லக்மால் கொலை, தாஜுதீன் கொலை, கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னிருந்து செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் இருவர் கடத்திச் செல்லப்பட்ட விடயம், வெலிக்கடைச் சிறைச்சாலை கைதிகளின் கூட்டுக் கொலை, ஷாபி சஹாப்தீன் தொடர்பான முறைப்பாடுகள், மூதூரில் அரச சார்பற்ற பணியாளர்கள் 16 பேர்களது படுகொலைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
மேற்படி விசாரணைகளில் இரண்டு விசாரணைகள் குறித்து தற்போது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. டாக்டர் ஷாபி சஹாப்தீன் மற்றும் பாரத லக் ஷ்மன் கொலை வழக்கு என்பனவே அவையிரண்டுமாகும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க சார்பு பத்திரிகையாகவிருந்த ‘தினமின’ தற்போது அது ராஜபக் ஷ சார்பு பத்திரிகையாகியுள்ளது. கடந்த 27 ஆம் திகதி தினமின பத்திரிகை வெளியிட்ட அறிக்கையொன்றில் துமிந்த சில்வா மீது தொடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து விசாரணையேதும் மேற்கொள்ளாது, நீதிமன்றத்திற்கு மூடிமறைக்கப்பட்டதாக அப்பத்திரிகையறிக்கை குறிப்பிட்டுள்ளது. அது வருமாறு:
‘குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஊடாக துமிந்த சில்வா தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்போது துமிந்த சில்வாவுக்கு இழைக்கப்பட்ட பாதிப்புக்கள் குறித்து கவனம் செலுத்தாது, அடுத்த தரப்பின் முறைப்பாடு தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு காரணிகள் மூடி மறைக்கப்பட்டே தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதனால் முறையான நீதியொன்றைப் பெற்றுத் தருமாறு அரசாங்கத்திடம் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இம்முறைப்பாடு குறித்து அரசு கவனம் செலுத்தி வருகிறது’ என்று அப்பத்திரிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரத லக் ஷ்மன் கொலை தொடர்பாக வழங்கப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு பிழையானது என்ற குற்றச்சாட்டும் ஷானி அபேசேகர மீதே சுமத்தப்பட்டிருப்பது மேற்கண்ட தகவல் மூலம் தெரியவருகிறது. ஆனாலும் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனைத் தீர்ப்போ உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் உள்ளடங்கிய நீதிச் சபையூடாக உறுதி செய்து வழங்கப்பட்ட தீர்ப்பாகும். மேற்படி வழக்கு விசாரணையின் போது இந்நாட்டின் தலைசிறந்த வழக்கறிஞர்கள் ஐவர் துமிந்த சில்வா சார்பாக ஆஜராகியிருந்தனர். இப்படிப்பட்ட முக்கியமான வழக்கொன்றில் இன்று தினமின பத்திரிகை சுட்டிக்காட்டுகின்ற குறைபாடுகளை அப்போதிருந்த சட்டவல்லுநர்களால் ஏன் கண்டுகொள்ளப்படவில்லை?
இதற்கான காரணம் மிகவும் இலகுவானதொன்றாகும். மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின்போது இடம்பெற்ற அநீதி அட்டூழியங்களை மூடி மறைக்கும் தேவை இப்போதுள்ளது. ஊடகவியலாளர்களின் படுகொலைகள் உள்ளிட்ட இதர குற்றவியல் தொடர்பாக பொலிஸ் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் கண்டறியப்பட்ட காரண, காரணிகளைக் குழி தோண்டிப் புதைப்பதற்காக ஷானி அபேசேகர மீது வஞ்சம் தீர்த்துக் கொள்வதொன்றே இவர்களது இலக்காகும். இச்செயற்பாடானது ஒரே கல்லெறியில் இரு பறவைகளை வீழ்த்துவதற்கொப்பானதாகும். ஒன்று துமிந்த சில்வாவின் விடுதலை. மற்றையது சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஷானி அபேசேகர மீது தண்டனை விதிப்பதாகும்.
டாக்டர் ஷாபி சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள விசாரணை தொடர்பாக பேசுவதற்கு எமக்கு ஜனாதிபதி ராஜபக் ஷவின் சட்டத்தரணியான அலிசப்ரியிடம் பொறுப்பு சாட்ட முடியும். ஏனெனில் டாக்டர் ஷாபி மீதான குற்றச்சாட்டுக்கள் அலி சப்ரியாலேயே நிராகரிக்கப்பட்டதால் அதனை அவர் ஈடுசெய்வார்.
ராஜபக் ஷ காலத்தில் இழைக்கப்பட்ட குற்றவியல் தொடர்பாக விசாரணை நடத்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி இடமாற்றப்பட்டு அவரது இடத்திற்கு பிறிதொருவர் அமர்த்தப்பட்டுள்ளார். ஆனால் அவரோ சில காலம் மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர். இவரது நியமனம் குறித்து இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது மக்கள் விடுதலை முன்னணியோ வாய் திறக்கவில்லை. ஊடக அமைப்புக்கள் மூன்று மாத்திரமே இச்செயற்பாட்டுக்கு உத்தியோகப்பூர்வமாக கண்டனம் தெரிவித்துள்ளன.
ராஜபக் ஷவாதிகளின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலுக்கமைய எழுந்து வரும் மேற்படி நிகழ்ச்சி நிரல் முடிவுக்குக் கொண்டு வரப்படலாம். இதன் மூலம் தெரியவருவது எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு அரச ஊழியர்களுக்கு சீலம் அனுஷ்டிப்புக்கான துணி விநியோக ஊழல் போன்றனவற்றுக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது என்பதேயாகும்.
அரசின் தீர்மானங்களை முறையாக செயற்படுத்துகின்ற அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையிலும் அவர்களைப் பாதுகாக்கும் வகையிலுமான புதிய சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
மேற்படி சட்டமூலம் அமுலுக்கு வரும் பட்சத்தில் எந்தவொரு அரச அதிகாரிக்கும் அரச தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கெதிராக இந்நாட்டு நீதிமன்றம் எதிலும் வழக்கு விசாரிக்கவோ தண்டனை விதிக்கவோ பூரணமாக முடியாது போகும்.
இத்தகைய சட்ட மூலமொன்றைக் கொண்டு வருவதற்குப் பின்னணியாக அமைந்தது, கடந்த 2010 – 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் சீலம் அனுஷ்டிக்கும் துணி அவரது அரசால் விநியோகிக்கப்பட்டது. மேற்படி அரசின் தீர்மானத்தை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் தொலைத்தொடர்பு ஆணையாளர் நாயகம் அனுஷ பெல்பிடவும் செயற்படுத்தினர். அதற்காக இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டதாலேயே இச்சட்ட மூலம் கொண்டு வரப்படவுள்ளது.
லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகிய இரு அதிகாரிகளுக்கும் தண்டனை விதிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு, எதிர்வரும் மாதங்களில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டமூலத்தின் மூலமாக செயலிழக்கப்பட்டு விடும்.
ஒழுக்கமுள்ள சமூகமொன்று இப்படித்தான் கட்டியெழுப்பப்படப் போகிறது.-Vidivelli
நன்றி: ராவய 29.11.2019
- சிங்களத்தில்: சுனந்த தேசப்பிரிய
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்