சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் வருடாந்தம் நவம்பர் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டு அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டுள்ள பலஸ்தீன மக்களுக்கு உலக மக்களிடமிருந்து ஆதரவைப் பெற்றுக் கொடுக்கவே இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் இக் காலப்பகுதியில் பலஸ்தீன மக்களின் அவல நிலை குறித்து நாமும் கவனம் செலுத்துவது அவசியமானதாகும்.
பலஸ்தீனின் 13 மில்லியன் சனத் தொகையில் அரைவாசிக்கும் அதிகமானோர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் இதுவரை பலஸ்தீனுக்கு வரலாற்று ரீதியாக சொந்தமாக 27 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள நிலத்தை அபகரித்துள்ளது. இது மொத்த நிலத்தில் 85 வீதமாகும். மேற்குக் கரையில் மாத்திரம் 2072 ஏக்கர் விவசாய நிலம் இஸ்ரேலினால் அபகரிக்கப்பட்டுள்ளது. இது மேற்குக் கரையின் மொத்த நிலப்பரப்பில் 37 வீதமாகும். அங்கு 931.5 ஏக்கர் விவசாய நிலம் மாத்திரமே பலஸ்தீனர்களுக்குச் சொந்தமாகவுள்ளது. இது மேற்குக் கரையின் மொத்த நிலப்பரப்பில் 17 வீதமாகும்.
2000 முதல் 2018 வரையான காலப்பகுதியில் சுமார் 1 மில்லியன் மரங்கள் இஸ்ரேலினால் பிடுங்கியெறியப்பட்டுள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டு மாத்திரம் 7122 மரங்கள் பிடுங்கப்பட்டுள்ளன.
2017 வரை மேற்குக் கரையில் 435 இஸ்ரேலிய சட்டவிரோத குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றுடன் இணைந்து இராணுவ கேந்திர நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 2018 இல் மாத்திரம் மேற்குக் கரையில் இஸ்ரேலினால் 9384 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டில் 9 புதிய குடியேற்றத்திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டு வரையான கணிப்பீடுகளின்படி மேற்குக் கரையில் 653,621 பேர் இஸ்ரேலினால் குடியேற்றப்பட்டுள்ளனர்.
பலஸ்தீனைப் பொறுத்தவரையில் மிக மோசமான முறையில் அடக்குமுறையையும் ஆக்கிரமிப்பையும் சந்தித்துள்ள பிரதேசமே காஸா பள்ளத்தாக்காகும். இரு வாரங்களுக்கு முன்னர் காஸா மீது இஸ்ரேல் நடாத்திய வான் தாக்குதல்களில் 34 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
உலகின் மிகப் பெரிய திறந்த வெளிச் சிறைச்சாலையாக காஸா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. காஸாவில் வாழும் 10 வீதமான மக்கள் மாத்திரமே சுத்தமான குடி நீரைப் பெறுகின்றனர். மிகுதி 90 வீதமானோர் மனிதப் பாவனைக்குதவாத மாசடைந்த நீரையே பருகுகின்றனர். அதிலும் பலஸ்தீனர்கள் தமக்குச் சொந்தமான நீரை இஸ்ரேலிடமிருந்தே பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேற்குக் கரையின் பிரதான நீர் மூலமான அகுபர் மலையிலிருந்து கிடைக்கும் நீரில் 80 வீதம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அத்துடன் மேற்குக் கரையில் பலஸ்தீன நகரங்களுக்கான நீர் விநியோகம் பல நாட்களுக்கு அல்லது வாரக் கணக்கில் தொடர்ச்சியாக இஸ்ரேலினால் துண்டிக்கப்படுகின்றன.
இவ்வாறு பலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினால் சொல்லொணா துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பையும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்குப் பதிலாக தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுத்தே வருகிறது. இதனை உலகிலுள்ள எந்தவொரு நாட்டினாலும் தட்டிக் கேட்க முடியாத நிலை தோன்றியுள்ளது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னரை விடப் பாரிய உதவிகளை இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறார். கடந்த வாரம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்கள் இனிமேல் சட்டவிரோதமானவையாக கருதப்படமாட்டாது எனும் சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்பான விவகாரங்களில் மென்மைப் போக்கையே கடைப்பிடிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவை பலஸ்தீன விவகாரத்தில் தொடர்ந்தும் அமெரிக்கா, இஸ்ரேலின் சட்டவிரோத மற்றும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கு ஆதரவாகவே நடந்து கொள்ளப் போகிறது என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி நிற்கின்றது.
இவ்வாறானதொரு தீர்க்கமான காலப்பகுதியிலேயே இந்த வருட பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை முஸ்லிம்கள் எப்போதுமே பலஸ்தீனுக்காக குரல் கொடுத்து வந்துள்ளனர். அந்தக் குரல் தொய்வடைய நாம் இடமளிக்க முடியாது.தொடர்ந்தும் மக்கள் மத்தியில் பலஸ்தீன் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன் அந்தப் புனித மண்ணின் விடுதலைக்காக குரல் கொடுக்கவும் பிரார்த்திக்கவும் நாம் அனைவரும் முன்வர வேண்டும்.-Vidivelli