சாதாரண தர பரீட்சை எழுதும்: மாணவிகளின் பர்தா விவகாரம் குறித்து வெளிவரும் செய்திகள் தவறானவை
கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும
நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் எந்தவொரு முஸ்லிம் பெண் பரீட்சார்த்தியும் அசெளகரியங்களுக்கு உட்படுத்தப்படவில்லை. பர்தா அணிந்து பரீட்சை எழுதச் சென்ற முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை என வெளிவரும் செய்திகள் தவறானவை என கல்வி, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
பாடசாலை சீருடையில் பர்தா அணிந்து பரீட்சை எழுதச்சென்ற முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் பரீட்சை மேற்பார்வையாளரால் பரீட்சை மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் வெளிவந்த செய்தி தொடர்பில் மறுப்பு அறிக்கையொன்றினை கல்வியமைச்சர் வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இது உண்மைக்குப் புறம்பான தகவல், அரசியல் இலாபம் கருதி வெளியிடப்பட்டுள்ள செய்தி. கெக்கிராவ கல்வி வலயத்தைச் சேர்ந்த பரீட்சை நிலையத்திற்கு பரீட்சை எழுதுவதற்காக பர்தா அணிந்து சென்ற மாணவிகள் பரீட்சை மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தியைக் கேள்வியுற்ற நான் உடனடியாக பரீட்சை ஆணையாளர் நாயகத்தை தொடர்பு கொண்டேன். இது தொடர்பில் ஆராயுமாறு உத்தரவிட்டேன். குறிப்பிடப்பட்ட பரீட்சை நிலைய பொறுப்பாளரிடம் இது தொடர்பில் வினவப்பட்டுள்ளது. பரீட்சை ஆணையாளர் நாயகம் அவருடனும், வலயக்கல்விப் பணிப்பாளருடனும் தொலைபேசியில் கலந்துரையாடியிருக்கிறார். இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை என அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
பரீட்சைக்குத் தோற்றும் சிங்கள, தமிழ், முஸ்லிம் பரீட்சார்த்திகள் எவ்வித இடையூறுமின்றி பரீட்சை எழுதுவதற்கான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையர்களாகிய நாம்இச்சந்தர்ப்பத்தில் பொய்ப்பிரசாரங்களைப் பரப்பாமல் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அவர்கள் தைரியத்துடன் பரீட்சையை எதிர்கொள்வதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும்’ என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்