எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு பெளத்த குருமாருக்கும் போட்டியிடுவதற்கு இடமளிக்கவேண்டாம் என மூன்று பெளத்த நிக்காயாக்களையும் சேர்ந்த சிரேஷ்ட பெளத்த குருமார்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.
இதன் முதற்கட்டமாக அவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவைச் சந்தித்து இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பெளத்த குருமார்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகிப்பதனால் பெளத்த சாசனத்துக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. பெளத்த மத குருமார் பெளத்த மதத்தைப் போதிப்பவர்களாக மாத்திரமே இருக்கவேண்டும். எனவே எந்தவொரு பெளத்த மத குருவுக்கும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் என அவர்கள் பிரதமரைக் கோரியுள்ளார்கள்.
கடந்த காலங்களில் பெளத்த குருமார் பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்று அவர்கள் மேற்கொண்ட சில செயற்பாடுகள் மக்கள் மத்தியிலே விமர்சனங்களுக்குள்ளாகின. அதனால் பெளத்தமத குருமார்களுக்கு தேர்தலில் போட்டியிடுவது தடை செய்யப்பட வேண்டும்.
மூன்று நிக்காயாக்களின் சிரேஷ்ட பெளத்த குருமார்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இது தொடர்பில் பலரது கருத்துகளைப் பெற்றுக்கொள்வதாகவும் கூறினார். இதேவேளை இது தொடர்பில் அவர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்