ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை மக்களை ஒருமுகப்படுத்துவாரா?

0 1,428

அண்­மையில் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் கோட்­டா­பய ராஜபக் ஷ பெற்றுக் கொண்ட தீர்க்­க­மான வெற்­றி­யா­னது முன்­னைய ஆட்­சி­யின்­போ­தான தேசிய பாது­காப்பு அச்­சு­றுத்தல், பொரு­ளா­தார மந்­த­நிலை மற்றும் செயற்­தி­ற­னற்ற ஆட்சி நிர்­வாகம் என்­ப­வற்றின் மீதான வாக்­கா­ளர்­களின் அதீத கரி­ச­னையை வெளிக்­காட்டி நிற்கும் அதே­வேளை இன ரீதி­யாக நாடு இரு துருவ நிலைக்குக் கூர்­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஆபத்­தான அறி­கு­றி­யையும் தெள்ளத் தெளி­வாக சுட்டிக் காட்­டு­கி­றது.

சிங்­கள தேசி­ய­வா­தத்தை முன்­னி­றுத்தும் ஒரு­வ­ராக அறி­யப்­பட்ட கோட்­டா­பய ராஜபக் ஷ முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்துச் செல்­வாரோ என்றும் தமிழ் சமூ­கத்தைத் தனி­மைப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வாரோ என்றும் பலர் அஞ்­சு­கின்­றனர்.

நிகழ்ந்­தது என்ன?

இலங்­கையில் மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலாக தொடர்ந்த உள்­நாட்டு யுத்­தத்தின் இறுதிக் கட்டப் பகு­தியில் இலங்­கையின் பாது­காப்புச் செய­லா­ள­ராக செயற்­பட்டு வெற்­றி­க­ர­மாக யுத்­தத்­திற்கு முடிவு கட்­டிய கோட்­டா­பய ராஜபக் ஷ கடந்த நவம்பர் 16இல் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்­களின் பெரும் ஆத­ர­வுடன் வெற்­றி­வாகை சூடி இலங்கை நாட்டின் ஜனா­தி­ப­தி­யானார்.

கோட்­டா­பய ராஜபக் ஷவின் வெற்றி பாரி­ய­ளவில் ஆச்­ச­ரி­யத்தைத் தரா­விட்­டாலும் பல இலட்சக் கணக்­கான வாக்கு வித்­தி­யா­சத்தில் பெரு­வா­ரி­யான வெற்­றியை சுவீ­க­ரித்துக் கொண்­ட­மை­யா­னது பல அர­சியல் அவ­தா­னி­களின் எதிர்­வு­கூ­றல்­களைப் பொய்ப்­பித்­துள்­ளது. ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் சகோ­த­ர­ரு­மான கோட்­டா­பய ராஜபக் ஷ 52.25 சத­வீத வாக்­கு­களைச் சுவீ­க­ரித்து வெற்­றியைத் தன­தாக்கிக் கொண்டார். அவ­ருக்­கெ­தி­ராக கள­மி­றங்­கிய பிர­தான போட்­டி­யா­ள­ராகக் கரு­தப்­பட்ட ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச 41.99 சத­வீத வாக்­கு­க­ளையே பெற்றுக் கொண்டார்.

உள்­நாட்டு யுத்­தத்தின் இறுதிக் காலப் பகு­தியில் நிகழ்த்­தப்­பட்­ட­தாகக் கூறப்­படும் போர்க் குற்­றங்­க­ளுடன் தொடர்­பு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த கோட்­டா­பய ராஜபக் ஷ உண்­மையில் தன்­னீர்ப்பும் தன்­மு­னைப்பும் கொண்ட மக்­களை ஒரு­மு­கப்­ப­டுத்­திய ஆளு­மை­யாகத் தற்­போது நோக்­கப்­ப­டு­கிறார். அதே­வளை தேர்தல் முடி­வு­க­ளா­னது இனத்­துவ குழு­மங்­க­ளுக்கும் தேர்தல் தொகு­தி­க­ளுக்கும் இடை­யி­லான தொடர்பை எளி­தாகக் கோடிட்டுக் காட்­டி­யி­ருந்­தது.

பிர­தான ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளான இரு­வரும் பெரும்­பான்மைச் சிங்­கள சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் எனினும், சிங்­கள தேசி­ய­வா­தத்தை தனது முக்­கிய கருப்­பொ­ரு­ளாக முன்­னி­றுத்திப் பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்­தி­ருந்த கோட்­டா­பய ராஜ­பக் ஷ சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களின் துணை­யின்றி ஜனா­தி­பதி பத­வியைச் சுவீ­க­ரித்துக் கொண்டார் என்று சொல்லக் கூடி­ய­ளவு பெரு­வா­ரி­யான பெரும்­பான்­மை­யி­னரின் வாக்­கு­களைத் தன் பக்கம் ஈர்ப்­பதில் வெற்றி கண்­டி­ருந்தார். அதே­வேளை சிறு­பான்­மை­யி­ன­ரான தமிழர், முஸ்­லிம்­களின் வாக்­குகள் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு அமோ­க­மாக கிடைத்­தி­ருந்­தன.

இலங்கை ஜனா­தி­பதி தேர்­தலில் வர­லாற்றுச் சாத­னை­யாக 35 பேர் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளாக கட்­டுப்­பணம் செலுத்­தி­யி­ருந்­த­போதும் இரு வேட்­பா­ளர்­களே பெரிதும் எதிர்­பார்க்­கப்­பட்­டி­ருந்­தனர். இட­து­சாரிக் கட்­சி­யான ஜனதா விமுக்தி பெர­முன சார்­பாக கள­மி­றங்­கி­யி­ருந்த அனுர குமார திசா­நா­யக்க 3.16 சத­வீத வாக்­கு­க­ளையும் முன்னாள் இரா­ணுவத் தள­பதி மகேஷ் சேனா­நா­யக்க 0.5 சத­வீத வாக்­கு­க­ளையும் பெற்றுக் கொண்­டனர்.

இம்­முறை ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் தேர்தல் பிர­சாரப் பணிகள் என்­பன குறிப்­பிட்டுச் சொல்லக் கூடிய மிகச் சொற்­ப­ள­வி­லான வன்­முறைச் சம்­ப­வங்­களே பதி­வான, அமை­தி­யான முறையில் இடம்­பெற்ற ஒரு ஜனா­தி­பதித் தேர்­த­லாக அமைந்­தி­ருந்­தது. எனினும், இம்­முறை தேர்தல் பிர­சாரம் தொடர்பில் முன்­னெப்­போ­து­மில்­லாத அளவு போலித் தக­வல்கள் சமூக வலைத்­த­ளங்கள் ஊடா­கவும் வெகு­சன ஊட­கங்கள் வழி­யா­கவும் பரப்­பப்­பட்­டி­ருந்­த­தாக தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

தமிழ் மக்­களின் வாக்­கு­களை சுவீ­க­ரிக்கும் நோக்­குடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இர­க­சிய ஒப்­பந்­த­மொன்றில் சஜித் பிரே­ம­தாச கைசாத்­திட்­டுள்­ள­தாக போலிச் செய்­தி­யொன்றை பொது­ஜன பெர­முன சார்­பான பத்­தி­ரிகை வெளி­யிட்­டி­ருந்­தமை உள்­ளிட்ட பல வதந்­தி­களும் போலிச் செய்­தி­களும் சஜித் பிரே­ம­தா­சவை இலக்கு வைத்தே பரப்­பப்­பட்­டன.

கோட்­டா­பய ராஜபக் ஷவின்  தீர்க்­க­மான வெற்­றிக்கு வித்­திட்­டவை

முன்­னைய ஆட்­சி­யின்­போது தேசிய பாது­காப்­புக்கு விடுக்­கப்­பட்­டி­ருந்த அச்­சு­றுத்தல், நாட்டின் பொரு­ளா­தார தேக்க நிலை, ஆளும் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு மத்­தியில் நில­விய சண்டை சச்­ச­ர­வுகள் என்­ப­வற்­றுடன் முத்­தாய்ப்­பாக ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் அமைப்­பா­ளர்­களின் கட்­ட­மைப்புப் பலம் என்­பன கோட்­டா­பய ராஜபக் ஷவின் தீர்க்­க­மான வெற்­றிக்கு வித்­திட்­டன என்றால் மிகை­யா­காது.

சஜித் பிரே­ம­தா­ச­விற்கும் வெற்றி வாய்ப்­புக்கள் இருப்­ப­தாக கணிப்­பி­டப்­பட்­டி­ருந்­தாலும் பந்­த­யத்தின் முன் கள வீர­ராக ஆரம்­பத்தில் இருந்தே கோட்­டா­பய ராஜபக் ஷவே கரு­தப்­பட்டு வந்தார். பொது­வாக சிங்­கள மக்கள் மத்­தியில் ஜன­ரஞ்­சகத் தன்மை வாய்ந்­தவர் எனக் கரு­தப்­ப­டு­ப­வரும் நாட்டின் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் இன்­னொரு தடவை ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முடி­யா­த­வ­ரு­மான மஹிந்த ராஜபக் ஷவின் முற்று முழு­தான ஆத­ர­வு­டனும் வழி­ந­டத்­த­லு­டனும் பந்­த­யத்தில் கள­மி­றங்­கிய அவ­ரது சகோ­த­ர­ரான கோட்­டா­பய ராஜபக் ஷவை எதிர்த்துக் கள­மி­றக்­கப்­பட்­டவர் குழப்­பங்­களும் சர்ச்­சை­களும் நிறைந்த, மக்­களின் வெறுப்பை சம்­பா­தித்துக் கொண்ட, செயற்­தி­ற­னற்ற அர­சாங்­க­மொன்றில் அமைச்­ச­ரா­க­வி­ருந்த சஜித் பிரே­ம­தாச ஆவார்.

இந்­திய புல­னாய்வுத் துறையின் முன்­னெச்­ச­ரிக்கை கிடைக்கப் பெற்­றும்­கூட கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் மற்றும் நட்­சத்­திர ஹோட்­டல்கள் மீது நடத்­தப்­பட்ட ஈஸ்டர் பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களைத் தடுக்கத் தவ­றி­யமை தொடர்பில் நாட்டு மக்­களின் அதி­ருப்­தி­யையும் ஆத்­தி­ரத்­தையும் முன்­னைய அர­சாங்கம் சம்­பா­தித்துக் கொண்­டி­ருந்த நிலையில், கோட்­டா­பய ராஜபக் ஷ தனது தேர்தல் பிர­சா­ரங்­க­ளின்­போது ‘தேசிய பாது­காப்பு’ மற்றும் ‘தீவி­ர­வாத ஒழிப்பு’ போன்ற மையக் கருக்கள் மீது அழுத்தம் கொடுத்து வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருந்­தமை முனைப்­பான விட­ய­மாகும்.

மூன்று தசாப்­தங்­க­ளுக்கும் மேலாக தனி நாடு கோரி உள்­நாட்டு யுத்­தத்தில் ஈடு­பட்­டி­ருந்த தமி­ழீழ விடு­தலைப் புலி­களை வேரோடு அழித்து வெற்றி கொண்ட இறுதி இரா­ணுவ நட­வ­டிக்­கை­யின்­போது செயற்­திறன் மிக்க பாது­காப்புச் செய­லா­ள­ராக சேவை­யாற்­றிய கோட்­டா­பய ராஜபக் ஷவின் வகி­பா­கத்தை என்றும் மனதில் இருத்­திய பெரும்­பான்மை சிங்­கள மக்கள் மத்­தியில், ‘தேசிய பாது­காப்­புக்கும் சிங்­கள தேசி­ய­வா­தத்­துக்கும் முன்­னு­ரிமை அளிப்பேன்’ என்­ப­தாக கோட்­டா­ப­ய­வினால் வழங்­கப்­பட்­டி­ருந்த வாக்­கு­று­திகள் பெரு­ம­ளவில் எதி­ரொ­லித்­தன.

‘இலங்கை வாழ் பௌத்த சிங்­கள மக்­களின் நீடித்த இருப்­புக்கு தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் பாரிய அச்­சு­றுத்தல்’ என்­ப­தாக கற்­பி­த­மொன்றை நீண்ட கால­மாக சிங்­கள மக்கள் மனதில் விதைக்க பெரும் பிர­யத்­த­னங்­களை மேற்­கொண்டு வரும் செல்­வாக்கு மிக்க சில பௌத்த தேரர்­களின் ஆத­ரவும் பிர­சா­ரங்­களும் கோட்­டா­ப­யவின் வெற்­றிக்குத் தூண்­க­ளா­யின என்றால் மிகை­யா­காது. ஈஸ்டர் தாக்­கு­தல்கள் மேற்­கு­றித்த கற்­பி­தத்­திற்கு மேலும் வலு­வூட்­டின.

ராஜபக் ஷ குடும்­பத்­திற்கு சிங்­கள மக்கள் மத்­தியில் பிர­வா­கித்த அப­ரி­மி­த­மான ஜன­ரஞ்­சகத் தன்­மையைக் கருத்திற் கொள்­கையில் சஜித் பிரே­ம­தாச வெற்றி பெற வேண்­டு­மானால் தமிழர், முஸ்­லிம்­களின் ஒட்­டு­மொத்த வாக்­கு­களை சுவீ­க­ரித்­தாக வேண்டும் என்ற இக்­கட்­டான நிலை தோன்­றி­யது. இந்­நிலை ‘சஜித் பிரே­ம­தாச வெற்­றி­யீட்­டினால் தமிழர், முஸ்­லிம்­களின் ஜனா­தி­ப­தி­யா­கவே அவர் திகழ்வார்’ என்று பொது­ஜன பெர­முன தமக்கு அனு­கூ­ல­மாக வாதம் செய்­வ­தற்கு வழி­ச­மைத்­தது.

ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்தின் கையா­லா­கத்­த­னமும் கோட்­டா­ப­யவின் தேர்தல் பிர­சா­ரத்தில் பாரிய சாதக விளைவை ஏற்­ப­டுத்­தி­யது. பொரு­ளா­தார வளர்ச்சி வீதத்தின் மந்த நிலை மற்றும் நாட்டின் அதி­க­ரித்த கடன் தொகை என்­பன ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்தின் செயற்­தி­ற­னுக்கு பாரிய பங்கம் விளை­வித்­தன. ஈஸ்டர் தாக்­கு­தல்­களை அடுத்த சுற்­று­லாத்­துறை வீழ்ச்சி பொரு­ளா­தார மந்­த­நி­லைக்­கான கார­ணங்­களில் முக்­கி­ய­மா­ன­தாகும்.

முன்­னைய அர­சாங்­கத்தின் கொள்கை உரு­வாக்கம் எப்­போதும் குழப்­ப­க­ர­மா­ன­தா­கவும் நடை­முறைச் சாத்­தி­ய­மற்­ற­தா­க­வுமே அமைந்­தி­ருந்­தன. முன்­னைய அர­சாங்­கத்தின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் இடை­யி­லான முரண்­பா­டு­க­ளு­டன்­கூ­டிய இழு­பறி உற­வா­னது அர­சாங்­கத்தின் செயற்­தி­ற­னின்­மைக்கு பாரிய பங்­க­ளிப்புச் செய்­தது.

2018 ஒக்­டோ­பரில் அப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தன்­னிச்­சை­யாக அகற்றி விட்டு புதிய பிர­த­ம­ராக மஹிந்த ராஜபக் ஷவை நிய­மித்துப் பின்னர் அம்­முன்­னெ­டுப்பு அர­சி­ய­ல­மைப்­புக்கு அப்­பாற்­பட்­ட­தாக உயர் நீதி­மன்றம் அறி­வித்­ததும் மீளவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக பத­வி­யேற்ற நகைப்­புக்­கி­ட­மான நிகழ்வும் அப்­போ­தைய அர­சாங்­கத்தின் தரா­த­ரத்தை சர்­வ­தே­ச­ளவில் எடுத்­துக்­காட்டப் போது­மான அம்­ச­மாகத் திகழ்ந்­தது. இவ்­வா­றா­னதோர் அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த சஜித் பிரே­ம­தாச தான் அத­னி­லி­ருந்தும் அப்­பாற்­பட்ட தனித்­து­வ­மா­னவர் என்­பதை நிரூ­பித்து மக்­களின் ஜன­ரஞ்­சகத் தன்­மையைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்­புக்கள் கடி­ன­மா­கியே போயின.

நாட­ளா­விய ரீதி­யி­லான பொது­ஜன பெர­மு­னவின் அமைப்­பாளர் கட்­ட­மைப்புப் பலமும் கோட்­டா­ப­யவின் வெற்­றிக்கு கார­ண­மா­யின. ராஜபக் ஷ சகோ­த­ரர்­களும் அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்­களும் 2016இல் பொது­ஜன பெர­முன கட்­சியை ஸ்தாபித்­தது முதல் இன்று வரை படிப்­ப­டி­யாக அடி­மட்ட மக்கள் வரை அதன் ஜன­ரஞ்­சகத் தன்­மையை வளர்த்துச் சென்ற விதம் தனித்­து­வ­மா­னது. ராஜபக் ஷ குடும்பம் மீளவும் ஆட்சிக் கதி­ரையில் அமர்­வ­தற்­கான வாக­ன­மாக அக்­கட்­சியை சிறப்­பாக வளர்த்­தெ­டுத்­துள்­ளனர். 2018 உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் பொது­ஜன பெர­முன பெற்றுக் கொண்ட அமோக வெற்­றி­யா­னது அடி­மட்ட மக்கள் வரை அக்­கட்­சியின் ஜன­ரஞ்­சகத் தன்மை சென்­ற­டைய வழி­கோ­லி­யது.

கடந்த 2 வரு­டங்­க­ளாக கண்­ணுங்­க­ருத்­து­மாக மெல்ல மெல்ல அத்­தி­பா­ரத்தை இட்டு கட்­சியை பலப்­ப­டுத்தி ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நமி­பிக்­கை­யுடன் கள­மி­றங்­கினார் கோட்­டா­பய ராஜபக் ஷ. ஆனால், சஜித் பிரே­ம­தா­சவின் நிலையோ வேறு. கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­ட­னான கசப்­பான வாத விவா­தங்­களின் பின்னர் வேண்டா வெறுப்­பாக தேர்­த­லுக்கு சில நாட்­க­ளுக்கு முன்­னரே ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தாச அறி­விக்­கப்­பட்­டி­ருந்தார்.

ஆக, சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் பிர­சாரப் பணிகள் ஒப்­பீட்டு ரீதியில் காலம் குறை­வா­னதும் வலிமை குறை­வா­னதும் ஆகும். கட்சி அமைப்­பாளர் கட்­ட­மைப்­புக்­களும் ஊடக ஆத­ரவும் பல­வீ­ன­மாக இருந்த நிலை­யி­லேயே சஜித் பிரே­ம­தா­சவின் பிர­சாரப் பணிகள் ஆரம்­பித்­தன. பெரும்­பா­லான தனியார் ஊட­கங்கள் ராஜபக் ஷ ஆத­ர­வா­ளர்­க­ளுக்குச் சொந்­த­மா­னவை. அவை கோட்­டா­பய ராஜபக் ஷவின் பிர­சா­ரத்­துக்கு பெரிதும் துணை போன­தோடு அவற்றில் சில ஊட­கங்கள் சஜித் பிரே­ம­தா­சவின் பிர­சாரப் பணி தொடர்பில் போலிச் செய்­தி­களை வெளி­யிட்­ட­மையும் இங்கே குறிப்­பி­டத்­தக்­கவை.

ராஜபக் ஷ குடும்­பத்தின் மீள் வரு­கையும் இலங்­கையின் இனப் பிரச்­சி­னை­களும்

கோட்­டா­பய ராஜபக் ஷவின் பிர­சாரப் பணி­க­ளின்­போது தொனித்த பல­மான சிங்­கள தேசி­ய­வாதம், தனது வெற்­றி­யா­னது ஒட்­டு­மொத்­த­மான சிங்­கள பெரும்­பான்மை வாக்­கு­களைச் சார்ந்­ததே என்­பதைத் தெளி­வா­கவே பறை­சாற்­றி­யது. அத்­துடன் அவ­ரது சகோ­தரர் மஹிந்த ராஜபக் ஷவின் 10 வருட கால ஆட்­சி­யின்­போது கடைப்­பி­டிக்­கப்­பட்ட கொள்­கை­களும் கோட்­டா­ப­யவின் தலை­மையின் கீழ் இன, மத ரீதி­யான பதற்­றங்கள் கூர்­மைப்­ப­டுத்­தப்­படும் என்­ப­தையே சொல்லி நிற்­கின்­றன.

பௌத்த தர்­மத்தைப் பாது­காப்­ப­தற்­காகத் தோற்­று­விக்­கப்­பட்ட அமைப்பு என்று கூறப்­படும் சில அமைப்­புக்­களால் கடந்த காலங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்த முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வெறுப்புப் பேச்சு, இன­வாத வன்­மு­றைகள், முஸ்­லிம்­க­ளு­ட­னான பொரு­ளா­தாரப் புறக்­க­ணிப்பு என்­பன புதிய ஆட்­சியில் மீளவும் உத்­வே­கத்­துடன் புதுப் பரி­மா­ண­மொன்றைப் பெறும் என பலர் அச்சம் கொள்­கின்­றனர். மேற்­கு­றித்த இன­வாத அமைப்­புக்கள் 2013- 2014இல் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்­தி­லேயே முதலில் உரு­வெ­டுத்­தன. பொலிசார், புல­னாய்­வுத்­துறை மற்றும் அப்­போ­தைய பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த கோட்­டா­பய ராஜபக் ஷவின் ஆத­ர­வுடன் புதுப் பொலிவு பெற்­றன.

2015இல் மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­ததன் பின்னர் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான இன­வாதப் போக்கு படிப்­ப­டி­யாக குறை­வ­டையத் தொடங்­கி­னாலும் அதன் பிற்­பாடு இன்னும் வலிமை கொண்டு இன­வாதம் பரப்­பப்­பட்­டது. எனினும், 2018 மார்ச் மற்றும் ஈஸ்டர் தாக்­கு­தலின் பின்­ன­ரான இன­வாத வன்­மு­றை­களில் பள்­ளி­வா­சல்கள் மற்றும் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்­களை மேற்­கொண்டோர் பொது­ஜன பெர­முன உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட குழுவே என்­ப­தற்­கான வீடியோ ஆதா­ரங்­களும் கிடைக்கப் பெற்­றன.

இன­வாத பௌத்த அமைப்­புக்­க­ளுக்கு தான் எவ்­வித ஆத­ர­வையும் வழங்­க­வில்லை என கோட்­டா­பய ராஜ­பக் ஷ மறுத்தே வந்­துள்ளார். எது எவ்­வா­றா­யினும், கோட்­டா­பய ராஜபக் ஷ தமது சமூ­கத்­திற்கும் இருப்­புக்கும் எதி­ரா­ன­வ­ரா­கவே பெரும்­பா­லான முஸ்­லிம்கள் கரு­து­கின்­றனர். முஸ்லிம் வாக்­கா­ளர்­களும் முஸ்லிம் தலை­ம­களும் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு பலத்த ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­த­மையை மனதில் இருத்தி புதிய ஆட்­சி­யினால் தாம் இலக்கு வைக்­கப்­ப­டுவோம் என முஸ்­லிம்கள் அஞ்­சு­கின்­றனர். தேர்தல் முடி­வுகள் அறி­விக்­கப்­பட்­டதை அடுத்து காலியில் பள்­ளி­வாசல் ஒன்று தாக்­கப்­பட்­ட­மையும் சமூக ஊட­கங்­களில் தொடரும் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வெறுப்புப் பேச்சும் இவ் அச்­ச­நி­லைக்கு கட்­டியம் கூறி நிற்­கின்­றன.

பல தசாப்­தங்­க­ளாகத் தொடர்ந்த, பல லட்சம் மக்­களைக் காவு கொண்ட உள்­நாட்டு யுத்­தத்­தினால் ஏற்­பட்ட வடுக்­களை ஆற்­று­வது தொடர்பில் சிறி­ய­ளவு அக்­க­றையே கோட்­டா­பய ராஜபக் ஷ காட்­டி­யி­ருந்தார். அர­சியல் தனி­மைப்­ப­டுத்­தல்கள் கார­ண­மாக உரு­வெ­டுத்த உள்­நாட்டு யுத்தம் இறு­தியில் இரு தரப்­பி­ன­ராலும் மேற்­கொள்­ளப்­பட்ட பல்­வேறு உரிமை மீறல்கள், துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுடன் முடி­வுக்கு வந்­தது.

யுத்த காலப் பகு­தி­யிலும் யுத்தம் முடி­வுக்கு வந்த பிற்­பாடும் அதி­காரப் பகிர்வு உள்­ளிட்ட தமி­ழர்­களின் அபி­லா­ஷை­களை வெளிப்­ப­டுத்தும் எந்­த­வொரு திருத்­தத்­திற்கும் கோட்­டா­பய ராஜபக் ஷ எதிர்ப்புத் தெரி­வித்தே வந்தார். ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­யி­லான அர­சாங்கம் மாகாண சபை­களின் அதி­கா­ரங்­களை அதி­க­ரித்தல் தொடர்­பி­லான முன்­மொ­ழி­வொன்றைக் கொண்டு வந்த சமயம், அவ்­வ­கை­யான மாற்­றங்கள் தேசிய பாது­காப்­புக்கும் பௌத்த தர்­மத்­திற்கும் நாட்டின் ஒற்­றை­யாட்­சிக்கும் தீங்கு பயக்கும் எனக் கூறி பொது­ஜன பெர­மு­னவும் கோட்­டா­ப­ய ராஜபக் ஷவும் எதிர்ப்புத் தெரி­வித்­தி­ருந்­தனர்.
உள்­நாட்டுப் போர் முடி­வ­டைந்து பத்­தாண்­டுகள் பூர்த்­தி­யான பின்­னரும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கில் பெருந்­தொ­கை­யான இரா­ணுவ துருப்­புக்கள் இன்னும் நிலை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன. விடு­தலைப் புலி­களை வேரோடு அழித்­தது மட்­டு­மல்­லாமல் அதன் ஆத­ரவுத் தளங்­களும் பல­மி­ழக்கச் செய்­யப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் மீள் வருகைச் சாத்­தியம் என்­பது பூச்­சி­ய­மாகும். ஒவ்­வொரு கிரா­மத்­திலும் உள­வா­ளிகள், தகவல் வழங்­கு­நர்கள் நிய­மிக்­கப்­பட்டு வடக்கு வாழ் தமி­ழர்­களின் வாழ்க்கைப் போக்கு மிக உன்­னிப்­பாக அவ­தா­னிக்­கப்­பட்டும் வரு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

வடக்கில் நிலை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த செறி­வான இரா­ணுவ துருப்­புக்கள் 2015 ஆட்சி மாற்­றத்­துக்குப் பிற்­பாடு சற்றுத் தளர்த்­தப்­பட்­ட­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து, அம்­முன்­னெ­டுப்பு தேசிய பாது­காப்­புக்குப் பாரிய அச்­சு­றுத்தல் விளை­விக்கும் என்­ப­தாக பொது­ஜன பெர­மு­னவும் ராஜபக் ஷ சகோ­த­ரர்­களும் பெரும் கண­ட­னத்தை வெளி­யிட்­டி­ருந்­தனர். இனி வருங்­கா­லங்­களில் கூட தமிழர் செறி­வாக வாழும் பகு­தி­களில் நிலை­நி­றுத்­தப்­பட்­டுள்ள இரா­ணுவ துருப்­புக்கள் தளர்த்­தப்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் குறை­வா­னதே. யுத்த காலப்­ப­கு­தியில் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த தமது கண­வன்­மார்கள் காணா­ம­லாக்­கப்­பட்­டமை தொடர்பில் தொடர்ந்தும் 1000ஆவது நாளாக கண­வனை இழந்த பெண்கள் போராட்­டத்தில் ஈடு­பட்டு வந்த நிலை­யி­லேயே ஜனா­தி­பதித் தேர்­தலும் இடம்­பெற்­றுள்­ளது.

ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜபக் ஷவின் முன்­னெ­டுப்­புக்கள் எவ்­வாறு அமையப் போகின்­றன?

கோத்­தா­பய ராஜபக் ஷ இனி­வ­ருங்­கா­லங்­களில் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 2015இல் மஹிந்த ராஜபக் ஷவின் தோல்­வியை அடுத்து ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களைக் குறைத்து நிறை­வேற்­றப்­பட்ட 19ஆம் திருத்தம் தொடர்பில் அண்­மையில் மஹிந்த ராஜபக் ஷ விமர்­ச­னத்தை வெளி­யிட்­டி­ருந்­தமை இங்கு கவ­னிக்­கத்­தக்­கது.

பிர­த­மரின் அதி­கா­ரங்­களை அதி­க­ரித்தல், இரு தட­வைக்கு மேல் ஒருவர் ஜனா­த­ப­தி­யாக பதவி வகித்­தலை தடை செய்தல், மனித உரி­மைகள், பொலிஸ், நீதித்­துறை மற்றும் சிவில் சேவைகள் தொடர்பில் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை மீள நிறு­வுதல் என்­பன 19ஆம் திருத்­தத்தின் முனைப்­பான மாற்­றங்­க­ளாகும். பலம் பொருந்­திய நிறை­வேற்று அதி­கா­ர­மிக்க ஜனா­தி­ப­தித்­துவ முறை­மையின் ஒழிப்பு தொடர்பில் பலரும் தமது ஆத­ரவை வெளி­யிட்­டி­ருந்த அதே­வளை நிறை­வேற்று அதி­கா­ரங்­களை பிர­த­ம­ருக்கும் ஜனா­தி­ப­திக்­கு­மி­டையில் பகிர்­வ­தனால் பல­வீ­ன­மான செயற்­தி­ற­னற்ற ஓர் அர­சாங்­கமே உரு­வாகும் என சிலர் விமர்­சனம் தெரி­வித்­தி­ருந்­தனர்.

பொது­ஜன பெர­முன பாரா­ளு­மன்­றத்­திற்கு அழுத்­தங்­களை வழங்கி 19ஆம் திருத்­தத்தில் மீளாய்­வு­களைச் செய்து மீண்டும் ஜனா­தி­ப­தி­யிடம் நிறை­வேற்று அதி­கா­ரங்­களைக் குவிக்கும் ஏற்­பா­டு­களில் ஈடு­படும் என்­பதை மஹிந்த ராஜபக் ஷவின் அண்­மைய அறிக்கை மூலம் அனு­மா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது. ஜனா­தி­ப­தி­யிடம் நிறை­வேற்று அதி­கா­ரங்கள் மீளக் குவிக்­கப்­ப­டு­மாக இருந்தால் 2015 தொடக்கம் அனு­ப­வித்து வந்த சுயா­தீனத் தன்­மையை நீதித்­து­றையும் பொலிஸும் இழக்க வேண்டி நேரிடும் என்­பது பாதக நிலை­யாகும்.

கோட்டா­பய மற்றும் அவ­ரது குடும்­பத்­தினர், ஆத­ர­வா­ளர்கள் மீது நீதி­மன்­றத்தில் நிலு­வையில் இருக்கும் பல்­வேறு குற்­றச்­சாட்டு வழக்­கு­க­ளுக்­கான நீதி வழங்கும் முறைமை இனிமேல் மிகவும் மந்­த­க­தி­யி­லேயே அமையப் போகி­றது என்­பதை ஊகிக்­கலாம். தம் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் அனைத்தும் குறு­கிய அர­சியல் நோக்­கங்­களைக் கொண்­டவை எனக் கூறி மஹிந்த ராஜபக் ஷ மறு­த­லிக்க முயன்றார். அர­சியல் படு­கொ­லைகள், ஆட்­க­டத்­தல்கள், காணா­ம­லாக்­குதல் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதான தாக்­கு­தல்கள் உள்­ளிட்ட பல குற்­றச்­சாட்­டுக்கள் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக் காலத்­தின்­போது நிகழ்ந்­தன. 2015 தொடக்கம் அவ்­வ­ழக்­குகள் இய­லு­மான வேகத்தில் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டன. எனினும், இனிமேல் அவ்­வ­கை­யான வழக்­குகள் தொடர்ந்தும் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­ப­டாது கைவி­டப்­ப­டலாம்.

சர்­வ­தேச நாடு­க­ளு­ட­னான பாது­காப்பு மற்றும் பொரு­ளா­தார உற­வுகள்
போருக்குப் பின்­ன­ரான நல்­லி­ணக்­கமும் பொறுப்­புக்­கூ­றலும் தொடர்பில் முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொண்டு வந்த சர்­வ­தேச நாடுகள் மற்றும் அமைப்­புக்­க­ளுக்கு, ராஜபக் ஷ குடும்­பத்தின் மீள் வரு­கையும் அவர்­களின் சிங்­க­ள­வாத நிகழ்ச்சி நிரலும் பெரும் தலை­யி­டியாய் மாறிப் போயுள்­ளது என்றால் மிகை­யா­காது. முன்­னைய ஐ.தே.க. அர­சாங்கம் அவற்­றுக்கு ஆத­ர­வ­ளித்­த­மை­யா­லேயே உள்நாட்டு வாக்கு வங்கியை இழக்க நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் தொடர்பில் முன்னைய ஐ.தே.க. அரசாங்கத்தின் சக அனுசரணையில் இடம்பெற்ற மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் (United Nations Human Rights Council) தீர்மானங்களுக்கு தமது அரசாங்கம் பொறுப்புக்கூறப் போவதில்லை என்பதனை கோத்தாபய ராஜபக் ஷ தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கையின் யுத்த காலப் பகுதி யில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வன்முறைகளுக்குத் தீர்வு காணும் வகையில் 4 நிலைமாறுகால நீதிப்பொறிமுறை தாபனங்களை நிர்மாணிக்குமாறு UNHRC இன் தீர்மானம் வலியுறுத்துகிறது. அவற்றில் உண்மை அறியும் ஆணைக்குழு (truth-seeking commission) மற்றும் போர்க்காலப் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதேச குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்கும் விசேட நீதிமன்றம் ஆகிய இரு தாபனங்களின் உருவாக்கம் சர்ச்சைகளைக் கிளறும் என ஐ.தே.க. அரசாங்கம் கருதியது. எனினும், மற்ற இரு தாபனங்களான காணாமற்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வந்தன. எனினும், கோத்தாபயவின் ஆட்சியின் கீழ் அத்தாபனங்களின் செயற்பாடுகள் பலவீனப்படுத்தப்படும் அல்லது தாபனங்கள் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவுடனான சர்வதேச உறவுகளை கோத்தாபய ராஜபக் ஷ மேலும் வலுப்படுத்திக் கொள்வார் என இந்தியா, ஜப்பான் மற்றும் மேற்குலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான அரசியல்– பொருளாதார உறவுகள் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தின்போதே வலுப்பெற்றன. சீனாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு தற்போது சீனாவுக்கு நீண்ட கால குத்தகைக்கு விடப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் சிறந்த உதாரணமாகும். இறுதியில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவினால் இராணுவ தளமாக மாறக்கூடும் என மேற்குலகும் இந்தியாவும் கொண்டுள்ள அச்சம் ராஜபக் ஷ சகோதரர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு மேலும் அதிகரித்துள்ளது.

எனினும், சீனாவின் நோக்கங்களை மாத்திரம் நிறைவேற்றும் அரசாங்கமாக அல்லாது இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் நாடுகள் மற்றும் வர்த்தக உறவுகளைப் பேணும் நாடுகளுடனும் சமநிலை உறவுகைப் பேண கோத்தாபய அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். ஏனைய அரசுகளிடமிருந்து தொடர்ச்சியான பொருளாதார ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு சீனாவுடனான அதிகரித்த உறவைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என ராஜபக் ஷ சகோதரர்கள் நம்புகின்ற அதேவேளை சீனாவிடம் இலங்கையை இழந்து விடும் அபாயமும் உள்ளது.-vidivelli

  • ஆங்கிலத்தில்: அலன் கீனன், சர்வதேச நெருக்கடிகள் குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர்
  • தமிழில்: ஹஸன் இக்பால்

Leave A Reply

Your email address will not be published.