ஜனாதிபதித் தேர்தல் எவரும் அவசரப்படுவது போன்று விரைவில் நடத்தப்படமாட்டாது. உரிய காலத்திலேயே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவுறுவதற்கு இன்னும் 13 மாத காலம் இருக்கிறது. அதன் பின்பே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். ஹக்கீமும், சம்பந்தனும் ஐக்கிய தேசியக் கட்சியும் கூறுவது போன்று விரைவில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நேற்று தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில் தெரிவித்ததாவது;
‘தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பாடம் படிப்பிப்பதாகவும், ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள் என்றும் ஹக்கீம் கூறுகிறார். அவர்கள் அவசரப்படுவது போன்று ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது.
தற்போது அரசியலில் உருவாகியுள்ள பிரச்சினைக்கு தீர்வு ஜனாதிபதி தேர்தல் அல்ல. தற்போது அதிகாரத்திலுள்ள அரசாங்கத்தை எவ்வாறு முன்னெடுப்பது எவ்வளவு காலத்துக்கு அரசாங்கத்தைக் கொண்டு நடத்த முடியும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும். பொதுத் தேர்தலுக்குச் செல்வதா? உயர்நீதிமன்றத் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பது பற்றி நாம் காத்திருக்க வேண்டியுள்ளது. பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தேர்தல் மூலம் தீர்வு பெற்றுக்கொள்ள முடியுமென்றால் நாம் எப்போதோ ஜனாதிபதி தேர்தலை நடத்தியிருப்போம்.
உயர் நீதிமன்றில் பாராளுமன்றக் கலைப்புக்கும் தேர்தல் ஒன்றினை நடத்துவதற்கும் தற்போது இடைக்கால தடையுத்தரவு ஒன்று இருக்கிறது. எனவே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியே எம்மால் செயற்பட முடியாது. பாராளுமன்றின் நிலையியற் கட்டளைக்கு முரணாகவே எதிர்க்கட்சியினரால் 3 நம்பிக்கையில்லா பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது ஜனாதிபதியின் அதிகாரங்களை மீறிய செயலாகும். ஜனாதிபதியின் அதிகாரங்களை பாராளுமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது. இதனை உயர்நீதிமன்றிலே சவாலுக்குட்படுத்த முடியும்.
19 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் சில அதிகாரங்களை ரணில் விக்கிரமசிங்க, பெற்றுக்கொள்ள முயற்சித்தார். அதற்கெதிராக உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றம் சில விடயங்களை நீக்கிக் கொள்ளுமாறும் இன்றேல் 2/3 பெரும்பான்மை பெற்றுக் கொள்ளும் படியும் கூறியது. இல்லையேல் சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்லும்படி கூறியது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை பொம்மையாக்கி அவரது அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் தேவை ரணிலுக்கு இருந்தது.
ரணிலின் செயற்பாடுகளினாலே இன்று நாடு ஸ்திரமற்ற தன்மைக்கு உள்ளாகியுள்ளது.
ஏதும் பிரச்சினைகளிருந்தால் சட்ட ரீதியாக உரிய முறையில் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வாருங்கள். மஹிந்த பிரதமர் பதவி வகிக்கும் இந்த அரசாங்கத்தில் நம்பிக்கை இல்லை என பிரேரணை கொண்டு வருமாறே நாம் கோருகிறோம்.
கடந்த அரசாங்க காலத்தில் ரணில் விக்கிரமசிங்க அனைத்து அமைச்சர்களினதும் அதிகாரங்களை தானே சுயமாகக் கையாண்டார். அமைச்சரவைத் தீர்மானங்களிலும் தனது செல்வாக்கைச் செலுத்தினார். இதனாலேயே மத்திய வங்கியும் கொள்ளையடிக்கப்பட்டது.
சில கொடுக்கல் வாங்கல்களுக்கு ஜனாதிபதி எதிர்ப்புத் தெரிவித்தும், ரணில் தனது செல்வாக்கை செலுத்தினார். இதனாலேயே இதனைப் பொறுக்க முடியாத ஜனாதிபதி அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தினார் என்றார்.
-Vidivelli