ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம்கள் ஒருவித அச்ச உணர்வில் இருப்பதை அவதானிக்க முடிகிறது. முஸ்லிம்களின் ஆதரவின்றியும் பெரும்பான்மை பௌத்த சிங்கள வாக்குகளாலும் அமையப் பெற்ற அரசாங்கம் என்பதாலேயே இந்த அச்ச உணர்வு தோன்றியுள்ளது.
இருந்தபோதிலும் புதிய ஜனாதிபதி தனக்கு வாக்களித்த மக்களை மட்டுமன்றி வாக்களிக்காத மக்களையும் அரவணைத்துச் செல்வேன் என வாக்குறுதியளித்திருந்தார். அவரது வாக்குறுதியை முஸ்லிம்கள் இன்றும் நம்புகின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டதாகவே அவரது செயற்பாடுகள் அமையும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
துரதிஷ்டவசமாக ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் முஸ்லிம்கள் தொடர்பில் நல்லபிப்பிராயத்தைக் கொண்டிருப்பின் அதனை வெளிப்படுத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பமாக அமைச்சரவை நியமனம் அமைந்திருந்தது.
எனினும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களிலோ அல்லது இராஜாங்க அமைச்சர்களிலோ ஒரு முஸ்லிமேனும் உள்வாங்கப்படாமையானது வித்தியாசமானதொரு செய்தியையே இலங்கை முஸ்லிம்களுக்குச் சொல்லியுள்ளது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவிகளில் முஸ்லிம்களை உள்ளீர்க்க முடியாமைக்கு நியாயமான காரணங்கள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளில் ஆகக் குறைந்தது ஒரு முஸ்லிம் பிரதிநிதியையாவது உள்ளீர்த்திருக்கலாம் என முன்வைக்கப்படும் விமர்சனங்களை மறுதலிக்க முடியாதுள்ளது.
வாக்களிக்காத முஸ்லிம்களைத் தவிர்த்து வாக்களித்த முஸ்லிம்களையேனும் கெளரவிக்கும் வகையில் இராஜாங்க அமைச்சர் ஒருவரை நியமித்திருக்க முடியும். அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் நல்லபிப்பிராயத்தை வென்று அதனை அடுத்துவரும் தேர்தல்களில் வாக்குகளாக அறுவடை செய்திருக்க முடியும். எனினும் அதற்கிருந்த வாய்ப்பையும் அரசாங்கம் தவறவிட்டுள்ளது.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான மனோநிலை பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் ஆழப்பதிந்துள்ள நிலையில், முஸ்லிம்களை அமைச்சரவையில் உள்ளீர்ப்பதானது பெரும்பான்மையினரை அதிருப்திக்குள்ளாக்கும் என அரசாங்கம் யோசித்திருக்கக் கூடும். வட மேல் மாகாணத்தில் முஸ்லிம் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக மேற்கிளம்பியுள்ள எதிர்ப்பலை இதற்கு நல்ல உதாரணமாகும். எனினும் முழு நாட்டு மக்களுக்குமான தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ஒரு சமூகத்தை மாத்திரமன்றி சகலரையும் அரவணைத்துச் செல்லாதுவிடின் அது அவர் மீதானதும் அவரது கட்சியின் மீதானதுமான சந்தேகப்பார்வையை மேலும் நிரூபிப்பதாகவே அமைந்துவிடும்.
அதேபோன்றுதான் முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்ற புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் இதுவரை தனக்கு வாக்களித்த முஸ்லிம்கள் தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் முன்வைக்காது மௌனம் சாதிப்பதை அவதானிக்க முடிகிறது. அமைச்சரவையில் முஸ்லிம்கள் உள்ளீர்க்கப்படாமை குறித்து முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மாத்திரமே குரல் எழுப்பியுள்ளார். அடுத்த தேர்தல்களிலும் களமிறங்க வேண்டுமாயின் சிங்கள மக்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற அரசியல் தந்திரோபாயத்தை சஜித் பிரேமதாச கடைப்பிடிக்கக் கூடும். அதற்காக தனக்கு வாக்களித்த மக்களுக்கு அநீதியிழைக்கப்படும்போது அதற்காக குரல் கொடுக்க அவர் தயங்கவோ பின்னிற்கவோ கூடாது. இன்றேல் அவரும் இனவாத சக்திகளுக்கும் இனவாத வாக்குகளுக்கும் அடிபணிந்தவராகிவிடுவார். அவ்வாறானததொரு நிலைமை தோற்றம் பெறுமாயின் அது நிச்சயமாக இலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானதே. இனவாதத்துக்கு எதிராக முஸ்லிம் சமூகம் இனிவரும் நாட்களில் எவ்வாறு எதிர்நீச்சல் அடிக்கப் போகிறது என்பதிலேயே அதன் எதிர்காலம் தங்கியுள்ளது.-Vidivelli